ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவில் சார்பில், சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை

Published On 2019-01-22 03:22 GMT   |   Update On 2019-01-22 03:22 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்மன் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர்.

அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

இதையடுத்து அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News