ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2019-01-14 03:00 GMT   |   Update On 2019-01-14 03:00 GMT
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தந்திரி நீலகண்டபட்டதிரி திருக்கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து கொடி மரத்துக்கு தீபாராதனை நடந்தது.

இதில் நீதிபதிகள் ஜாண் ஆர்.டி.சந்தோஷம், கோமதிநாயகம், திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் அணில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வணங்கிவிட்டு நாகராஜரை தரிசனம் செய்தனர்.

நேற்று இரவில் பக்தி பாடல் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளினார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மண்டகப்படி, இன்னிசை கச்சேரி ஆகியவற்றை தொடர்ந்து புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

15-ந் தேதி இரவு சிங்க வாகனத்திலும், 16-ந் தேதி இரவு கமல வாகனத்திலும், 17-ந் தேதி இரவு ஆதிசேஷ வாகனத்திலும், 18-ந் தேதி யானை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி அதாவது 9-ம் நாள் திருவிழாவன்று காலை 7 மணிக்கு நடக்கிறது. அதன்பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10-ம் நாள் திருவிழாவன்று சப்தாவர்ணம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News