ஆன்மிகம்

நாளை சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனின் ஆருத்ரா தரிசனம்

Published On 2018-12-22 09:11 GMT   |   Update On 2018-12-22 09:11 GMT
ஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.
ஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.. இந்நாளில் இத்தலத்தில் உள்ள நடராஜர் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். இந்நாளில் தான் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார்.

தாருகாவனம் என்ற வனத்தில் தவ வலிமை கொண்ட முனிவர்கள் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள் கற்று அதன்படி தங்களுடைய பணிகளை செய்துவந்தார்கள். அவர்களுக்கு உலகைக் கட்டி ஆளும் ஈஸ்வரனைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்தது.அவர்களுக்கு ஈஸ்வரத் தியானத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்த சிவன்,திருமாலை அழைத்து அம்முனிவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார். திருமாலும் அதற்கு சம்மதித்து முனிவரை மயக்கும் வகையில் அழகிய பெண்ணாக உருவெடுத்து சென்றார். சிவப்பெருமானும் பிச்சை எடுப்பவராக வேடம் தரித்து நந்தியையும் உடனழைத்துக்கொண்டு சென்றார்.

வனத்துக்குள் வந்ததும் நந்தியை ஓரிடத்தில் அமரச் செய்து முனிவர்களின் குடில்களுக்குச் சென்று பிச்சை எடுப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தார். பரம் பொருள் எம்பெருமானாகிய சிவபெருமான் அந்த வேடத்திலும் அழகில் குறையின்றி இருந்தார். அவரைக் கண்ட முனிவர்களின் மனைவிகள் அவர் மேல் மோகம் கொண்டு அவரையே சுற்றி வந்தார்கள். மறுபுறம் திருமாலின் பெண் வேடத்தில் மயங்கிய இளம் முனிவர்கள் அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.

தங்களின் தவ நிலை கலையாத வயது முதிர்ந்த முனிவர்கள் கோபம் கொண்டு அப்பெண்ணையும் அவள் பின்னால் சுற்றிய இளம் முனிவர்களையும்,பிச்சை வேடம் தரித்தவரையும் அக்னியில் அழிக்க ஹோமத்தை வளர்த்தனர். ஹோமத்திலிருந்து முதலில் புலி ஒன்று பாய்ந்து வந்தது. பிச்சை வேடம் தரித்து வந்த சிவப்பெருமான் அப்புலியை தன் நகங்களாலேயே இரண்டாக பிளந்து ஆடையாக்கி கொண்டார். அடுத்ததாக விஷம் கொண்ட பாம்புகள் சீறிப் பாய்ந்தன.சிவப்பெருமானின் அக்னி பார்வையில் அவை சிவனுக்கு அணிகலனாகின.

இதைக் கண்ட முனிவர்கள் ஆக்ரோஷத்துடன் முன்னிலும் தீவிரமாக யாகம் செய்து அபஸ்மாரம் என்ற பூதத்தை ஏவினர். ஓடி வந்த பூதத்தை வலதுகாலுக்கு அடியில் வைத்து சிவபெருமான் ஏறி நின்றார். இனி எதுவும் ஏவுவதற்கு இல்லை என்ற முனிவர்கள் ஹோம அக்னியையே ஏவினார்கள். சிவபெருமானோ அதை இடக்கையில் ஏந்தினார்.

கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர் முனிவர்கள். அவற்றை சிலம்பாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார். இனி எதைக் கொண்டு வெல்வது என்று திணறிய முனிவர்களின் முன் தன்னுடைய சடைமுடி எட்டுத்திக்கிலும் விரிந்தாட கோபாவேசத்துடன் அண்டங்கள் எல்லாம் குலுங்க குலுங்க தாண்டவமாடினார் சிவப்பெருமான்.சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனிடமா போர்புரிகிறோம் என்று ஈசனின் காலில் விழுந்து மன்றாடினார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ருத்ரதாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அருள்புரிந்தார்.

திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக மாறி திருத்தாண்டவம் ஆடியதால் மகிழ்ச்சியில் உலவினார். பாற்கடலில் மகாவிஷ்ணு மகிழ்ச்சியில் திளைக்க என்ன காரணம் என்று ஆதிசேஷன் கேட்டார். சிவபெருமானின் தாண்டவத்தைப் பற்றி பரந்தாமன் சொன்னதும் தானும் அதைக் காண வேண்டும் என்று ஆதிசேஷன் ஆவல் கொள்ள பெருமாளும் ஆசியளித்தார்.

பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக்கொண்டு பூலோகம் வந்து தவம்புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி,உம்மை போலவே வ்யாக்ரபாதரும் என் திருநடனம் காணவேண்டி விரும்புகிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். சிதம்பரம் திருத்தலத்தில் தில்லை அம்பல நடராஜரின் திருநடனத்தை திருவாதிரை திருநாளில் கண்டனர். அதனால் தான் மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசனம் செய்தால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

Tags:    

Similar News