ஆன்மிகம்

நரகாசூரன் யார்?

Published On 2018-11-05 06:27 GMT   |   Update On 2018-11-05 06:27 GMT
நரகாசூரன் யார் என்பது பற்றியும், தீபாவளிக்கும், நரகாசூரனுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்தும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பூமாதேவிக்கு சுசீலன் என்னும் ஒரு மகன். கெட்ட சகவாசத்தால் கெட்டவனாகி உலகத்தைத் துன்புறுத்தினான். தவம் செய்து பிரம்மாவிடம் மரணமற்ற தன்மையைக் கேட்டு பிரம்மா அதைத்தர மறுத்ததால், வாயுவாலும் பிருத்திவீயாலும் தனக்கு மரணம் கூடாது என்னும் வரனைப் பெற்றான்.

நரகத்துக்கு காரணமான ஏராளமான அதர்மச் செயல்களை அவன் செய்து வந்ததால் நரகாசூரன் என்றே அவன் அழைக்கப்பட்டான். ஒரு சிலர் அவன் தாய் மாதேவியை துர்விருத்தையுடைவள் எனப்பேச அதைக் கேட்டு கோபமடைந்த நரகாசூரன், உலகில் ஒரு பெண் கூட சுத்தமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்து தனது பலத்தால் தேவர், மனிதர், கந்தர்வர் என அனைத்துப் பெண்களையும் அபகரித்து பிராக்ஜோதிசபுரம் என்னும் தனது நகரத்தில் ஜெயிலில் அடைத்து வைத்தான். அதனால் அந்தப் பெண்கள் அனைவரும் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார்கள்.

மேலும் நரகாசூரன் வைகுண்டம் சென்று லட்சுமியை அபகரிக்க முயற்சிக்க மகாலட்சுமி அக்னியிலும், கங்காதீர்த்தத்திற்குள்ளும் பிரவேசித்து விட்டாள். பிறகு பகவான் கிருஷ்ண அவதாரம் செய்து ஆச்வயுஜ மாத கிருஷ்ணபட்ச சதுர்தசி அன்று இரவில் மறுநாள் விடியும் முன்பாக பிரம்ம முகூர்த்ததில் நகரகாசூரனைக் கொன்றார். அந்த நாள்தான் நரக சதுர்தசி நாள். அனைத்துப் பெண்களுக்கும் விடுதலை கிடைத்தது.

ஆகவே தான் அன்று தீபத்தில் மகாலட்சுமியை ஆவாரகனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்னி சம்பந்தப்பட்ட சூடேற்றப்பட்ட வெந்நீரில் குளிக்க வேண்டும்.

தீபாவளி அன்று வைகுண்டத்திலிருக்கும் மகாலட்சுமி தானாகவே பூலோகத்திற்கு (பூமிக்கு) வந்து தீபஜுவாலை (தீபச்சுடர்), திபதைலம் (நல்லெண்ணெய்), தீர்த்தங்கள் ஆகியவற்றில் சந்தோஷத்தோடு வசிக்கிறாள்.

Tags:    

Similar News