ஆன்மிகம்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

Published On 2018-10-26 04:37 GMT   |   Update On 2018-10-26 04:37 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்தமிழகத்தின் சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை ஸ்ரீகோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை ராமசாமி பட்டர் காலை 5.48 மணிக்கு ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கோவில் ஊழியர் கணேசன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 11-ம் திருநாளான வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை தேரடி திடலில் சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News