ஆன்மிகம்
முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடியபோது எடுத்த படம்.

மகா புஷ்கர விழா: ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2018-10-22 04:02 GMT   |   Update On 2018-10-22 04:02 GMT
மகா புஷ்கர விழாவையொட்டி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் வரலாறு காணாத பக்தர்கள் வருகை தந்தனர்.

நேற்று சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாள் என்பதால் அதற்குரிய ராசிக்காரர்களும், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்ததால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் முறப்பநாடு காசி தீர்த்தகட்டத்துக்கு வந்து நீராடி கைலாசநாதரை வணங்கினர்.

முறப்பநாடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதி நேற்று இல்லை.

எனவே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நடந்து வந்து நீராடினர். கைலாசநாதர் கோவிலிலுக்குள் தரிசனம் செய்பவர்கள் கோவிலை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காமாட்சிபுரம் ஆதீனம் ஞானக்குரு சாக்த ஸ்ரீசிவலிங்கேசுவர சுவாமிகள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நீராடினர்

தொடர்ந்து முறப்பநாட்டில் அதிருத்ர பெருவேள்வி நடைபெறுகிறது. அதில் 121 வைதீயர்கள் ருத்ர பாராயணம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு நதிக்கு சிறப்பு ஆராத்தி காட்டப்பட்டது. 6.30 மணிக்கு தாமிரபரணி ஈசுவரம் அறநிலை துறை சார்பாக நதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதை வழியாக மாற்றி விடப்பட்டது.

அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறை, மங்களகுறிச்சி, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் படித்துறை, சுந்தர விநாயகர் கோவில் படித்துறை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, சங்கமம் படித்துறை போன்றவற்றில் காலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர். 
Tags:    

Similar News