ஆன்மிகம்

சங்கின் பெருமை

Published On 2018-05-20 05:04 GMT   |   Update On 2018-05-20 05:04 GMT
தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று.

தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்கே மகாவிஷ்ணுவின் இடது கையில் இடம்பெற்றுள்ளது. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என எட்டுவகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகவும், ஒவ்வொரு தெய்வமும் அவைகளுக்குரிய சங்குகளைக் கொண்டிருப்பதாகவும் வைணவ ஆகமங்களில் ஒன்றான வைகானஸ (விகனஸ) ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

திருமலை வேங்கடவன் கையில் மணி சங்கும், ரங்கநாத சுவாமியின் கையில் துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமியின் கையில் பாருத சங்கும், பார்த்தசாரதிப் பெருமாளின் கையில் வைபவ சங்கும், சுதர்சன ஆழ்வாரது கையில் பார் சங்கும், சவுரிராஜப் பெருமாள் கையில் துயிலா சங்கும், கலியபெருமாளின் கரத்தில் வெண் சங்கும், ஸ்ரீநாராயண மூர்த்தியிடம் பூமா சங்கும் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமாளின் அவதாரமான கிருஷ்ணனை தங்களது குருவாக பாவித்த பஞ்சபாண்டவர்களில் தருமர் ‘அனந்த விஜயம்’ எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ச்சுனன் ‘தேவதத்தம்’ எனும் தேவசங்கையும், பீமன் ‘மகாசங்கம்’ எனும் பெரிய சங்கையும், நகுலன் ‘சுகோஷம்’ எனும் அதிர்ஷ்ட சங்கையும், சகாதேவன் ‘மணிபுஷ்பகம்’ எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று மகாபாரத இதிகாசம் சொல்கிறது.

திபெத்திய பழங்குடிகள் இன்றளவும் காலை எழுந்தவுடன் சங்கு ஊதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். துர்தேவதைகளை விரட்டுவதற்காகவும், காற்றிலுள்ள மாசுக்களை குறைப்பதற்காகவும், இப்படிச் செய்கின்றனராம்.
Tags:    

Similar News