ஆன்மிகம்
சக்கராப்பள்ளியில் இருந்து சக்கரவாகேஸ்வரர் கோவில் பல்லக்கு புறப்பட்டபோது எடுத்தபடம்.

சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா

Published On 2017-04-12 04:10 GMT   |   Update On 2017-04-12 04:10 GMT
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி இன்று (புதன் கிழமை) நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி கிராமத்தில் சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் சப்தஸ்தான விழா எனப்படும் ஏழூர் பல்லக்கு விழா பிரசித்திப்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இதில் சக்கரவாகேஸ்வரர் கோவில் பல்லக்கு 7 ஊர்களில் வலம் வரும்.

இந்த விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் சக்கரவாகேஸ்வரர், தேவநாயகி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து சக்கராப்பள்ளியில் இருந்து பல்லக்கு புறப்பட்டது.

மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய 7 ஊர்களில் சாமி பல்லக்கு வலம் வந்தது. இன்று (புதன்கிழமை) அய்யம்பேட்டையில் சாமி பல்லக்கு வீதி உலா நடக்கிறது. இதைத்தொடர்ந்து அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகுநாச்சியம்மன் கோவில் முன்பு சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் 7 ஊர் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News