ஆன்மிகம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

Published On 2016-08-05 14:00 IST   |   Update On 2016-08-05 14:00:00 IST
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு ஆடித்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

28-ந்தேதி கிளி வாகனத்திலும், 29-ந்தேதி பூதவாகனத்திலும், 30-ந்தேதி கிளி மற்றும் பல்லக்கிலும், 31-ந் தேதி யானை வாகனத்திலும், 1-ந்தேதி கமலம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 2-ந்தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும், 3-ந்தேதி குதிரை வாகனத்திலும், சாமி வீதியுலா நடந்தது.

9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக மூலவருக்கும், அம்மனுக்கும் காலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதணை நடைபெற்றது.

தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து நேற்று இரவு வெளி உற்சவம் நடந்தது. இன்று காலையில் தீர்த்தம் கொடுத்தல் உபயமும், இரவு அம்மன் ஸ்படிக பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. 11-ம் நாள் திருவிழா நாளை (6-ந் தேதி) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் விருத்தகிரீஸ்வரருக்கும் சமேத விருத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கருணாகரன், உதவி ஆணையாளர் ஜோதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News