கோவில்கள்
குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோவில்

குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோவில்

Published On 2022-05-11 01:38 GMT   |   Update On 2022-05-11 01:38 GMT
திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மூலவர்     – உத்தவேதீஸ்வரர்
அம்மன்     – அரும்பன்ன வனமுலைநாயகி
தல விருட்சம் – உத்தாலமரம்
தீர்த்தம்     – பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்
பழமை     – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்     – திருத்துருத்தி, குற்றாலம்

திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37-ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.

தலவரலாறு

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி

கோயில் அமைப்பு

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். வலப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.

மூலவர்– உக்தவேதீஸ்வரர். அம்மன்– அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையைப் போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான். இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.

திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
குத்தாலம் (திருத்துருத்தி),
நாகப்பட்டினம் மாவட்டம்.
Tags:    

Similar News