கோவில்கள்
கரூர் கல்யாண பசுபதீசுவரர் திருக்கோவில்

கரூர் கல்யாண பசுபதீசுவரர் திருக்கோவில்

Published On 2022-05-05 07:06 IST   |   Update On 2022-05-05 07:06:00 IST
கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
கரூரில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது.

மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்)

அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி

தல விருட்சம்: வஞ்சி மரம்

தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி)

பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் - திருப்புகழ்.

கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.

இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் திருக்கோவில்களில், இது 211-வது ஆலயம் ஆகும். இத்தல சிவலிங்கத்தின் மீது, மாசி மாதத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள், சூரியனின் கதிர் ஒளி படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் கோரிக்கை நிறைவேறும் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை. இன்னும் சிலர் ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இத்தல இறைவன் பசுபதீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். சதுரமான ஆவுடையாரின் மீது, சற்றே சாய்வாக இருக்கிறார்.

சன்னதிகள்

மூலவர் பசுபதீசுவரர், சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார், சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் சித்தர் கருவூரார் சன்னதியும், ராகு, கேது பாம்பு சிலைகள் உள்ள சன்னதியும் உள்ளன.

புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.

கோவில் அமைப்பு

இக்கோவிலின் கொடிமரம், கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில், தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.

தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது, ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவிலின் தென்மேற்கு மூலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால், கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.

தல வரலாறு

படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

Similar News