கோவில்கள்
பெரிய மாரியம்மன் கோவில்- ஈரோடு

கொங்கு மண்டலத்தின் குலதெய்வம் பெரிய மாரியம்மன் கோவில்- ஈரோடு

Update: 2022-04-01 01:41 GMT
ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
பரந்து விரிந்த கொங்கு மண்டலத்தின் நடுநாயகமாக அமைந்திருப்பது ஈரோடு. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈரோடு நகரம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. சிறப்பு பெற்ற ஈரோடு நகரில் எழுந்தருளி உலக மக்களுக்கு நன்மை அருள்புரியும் தாயாக வீற்றிருப்பவர் பெரிய மாரியம்மன்.

ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரப் ரோட்டில் (மாநகராட்சி அலுவலகத்தின் எதிரில்) பக்தர்களுக்கு அருளாசி புரியும் மாரியம்மனின் திருவிழா காலம் இது.

பங்குனி மாதத்தில் ஈரோட்டில் வெயில் கொளுத்தினாலும், காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையாது என்கிற வகையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுடன் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு, கம்பம் நடுதல் நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கிறது. நடுமாரியம்மன் கோவில் பெரியார் வீதியிலும், வாய்க்கால் மாரியம்மன் கோவில் காரைவாய்க்காலில் காலிங்கராயன் வாய்க்கால் கரையிலும் அமைந்து உள்ளன.

பெரிய மாரியம்மன் கோவிலின் குண்டம் வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேரோட்டம் நடுமாரியம்மன் கோவிலிலும் நடைபெறும்.

ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து பெரிய மாரியம்மனை வழிபடுவார்கள். அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகம் இருக்கும். திருவிழா நாட்களில் போக்குவரத்து திணறும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதுபோல் திருவிழா காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய மாரியம்மனை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நகராக மாறும் காட்சி அன்று நடைபெறும்.3 கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக்கடனாக வீசும் உப்பு தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் என்றால் பக்தர்கள் மாரியம்மன் மீது கொண்ட நம்பிக்கைக்கு இதுவே சாட்சியாகும்.

பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களின் தேர் நடுமாரியம்மன் கோவிலில் உள்ளது. இந்த தேர் 30 அடி உயரம் கொண்டது. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது. சிவபெருமான், முருக பெருமானின் திருவிளையாடல்கள் தேரில் செதுக்கப்பட்டு உள்ளன. வீணை, இரட்டைக்குழல், மத்தளம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் பற்றி சிற்பங்களும் இந்த தேரில் செதுக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்க தேரேறி வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும். வெப்பு சம்பந்தமான நோய்களை தீர்க்க பெரிய மாரியம்மனுக்கு வேண்டுதல் வைத்தால் உடனடியாக குணமாகும் என்பது நம்பிக்கை. அம்மை கொப்பளம் வராமல் இருக்க பெரிய மாரியம்மன் அருள் புரிகிறார். குழந்தை இல்லாத தம்பதியருக்கு அந்த குறை இல்லாமல் செய்யும் தாயாக விளங்கும் பெரிய மாரியம்மன் கொங்கு மண்ணுக்கே தாயாக உள்ளார். எனவேதான் நாள்தோறும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நீண்டுகொண்டே உள்ளது.
Tags:    

Similar News