கோவில்கள்
அருள்மிகு அப்பால ரெங்கநாத சுவாமி திருக்கோவில்- கோவிலடி

அருள்மிகு அப்பால ரெங்கநாத சுவாமி திருக்கோவில்- கோவிலடி

Update: 2022-03-17 06:48 GMT
நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது.
தலச்சிறப்பு : இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் "திவ்ய தேசங்கள்" என்றும், "திருப்பதிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்" என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலதுகையில் ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.

பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம், நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள தலம், மார்க்கண்டேயனுக்கு பெருமாள் அருளிய தலம், எனப் பல பெருமைகளை உடைய திவ்ய தேசம், தற்போது "கோயிலடி" என அழைக்கப்படும் திருப்பேர் நகர் ஆகும்.

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு "வைகுண்ட வாசம் நிச்சயம்" என்பது ஐதீகம். ஐந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது. இந்த பஞ்ச ரங்க தலங்கள், உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன. அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள தலங்களாகும்.

ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்),
அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி),
மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம் (திருச்சி),
சதுர்த்த ரங்கம் - திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) - திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).

“அப்பால ரங்கம்” என்பதற்கு இரு பொருள்படும். ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும், ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், "ஆதி ரங்கம்" என்னும் பொருள்பட "அப்பால ரங்கம்" என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள். தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள்.

இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News