கோவில்கள்
வெங்கடாசலபதி

தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்

Published On 2022-02-25 06:59 IST   |   Update On 2022-02-25 06:59:00 IST
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு, பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு, பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தலைமலை

நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி. இங்குதான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது. மூலவர் பெயர், வெங்கடாசலபதி. தாயார் திருநாமம், ஸ்ரீதேவி-பூதேவி. 850 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது ஏறிச்செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலையின் மீதுள்ள கோவிலைச் சுற்றிவர வழி கிடையாது. ஆனாலும் சில பக்தர்கள் கோவில் சுவற்றின் மீது ஏறியபடி கோவிலை ஆபத்தாக வலம் வருகிறார்கள். பல்வேறு அரிய வகை மூலிகைகள் கொண்ட மலை என்பதால், அதனைச் சிறப்பிக்கும் வகையில் ‘தலைமலை’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.

சாத்தூர்

விருதுநகரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சாத்தூர். இங்கு பாய்ந்தோடும் ‘வைப்பாறு’ நதியின் வடகரையில் இருக்கிறது, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வெங்கடாசலபதி திருக்கோவில். மூலவர் பெயர், வெங்கடாசலபதி. பக்தர்கள் ‘சாத்தூரப்பன்’ என்றும் அழைக்கிறார்கள். எட்டையபுரம் ஜமீன்தார்கள், அந்த காலத்தில் இந்த ஆலயத்தின் மீது ஈடுபாடு கொண்டு, பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இந்த ஆலயத்து இறைவனைப் பற்றி பாடியிருக்கிறார். எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி சுப்பிரமணி பாரதியும் இந்த ஆலய பெருமாளை வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன.

சிந்துப்பட்டி

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிந்துப்பட்டி. இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் ஆலயம், சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது. விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூலவர்- வெங்கடேசப் பெருமாள், தாயார்- அலர்மேலுமங்கை. சந்திரகிரி பகுதியில் இருந்து இங்குவந்த நாயக்கர்கள், புளியமரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதியில், தாங்கள் பூஜை செய்து வந்த மூர்த்திகளை, பெருமாள் உத்தரவுப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். கோவில் கொடிமரத்தில், கருப்பண்ண சுவாமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தல பெருமாள், நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருள்கிறார்.

நன்னகரம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 63 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நன்னகரம் என்ற ஊர். இங்கு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. மூலவர்- பிரசன்ன வெங்கடாசலபதி, தாயார் - ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. குலசேகர பாண்டியனின் ஆட்சி காலம் அது. அவனது அரசவைக்கு கர்க முனிவர் என்பவர் வந்தார். மன்னன் மனக் குழப்பத்திலும், துயரத்திலும் இருப்பதை அறிந்தவர், ‘துன்பமும், மனக்குழப்பமும் நீங்க, தென்னகம் சென்று திருவேங்கமுடையானுக்கு திருக்கோவில் ஒன்று கட்டு’ என்று உத்தரவிட்டார். அதன்படி மன்னன், நிர்மாணித்ததே இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலியில் இருந்து தென்கிழக்கில் சுமார் 13 கிலோமீட்டர் சென்றால், கிருஷ்ணாபுரம் என்ற ஊர் வரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள வெங்கடாசலபதி கோவிலில், மூலவராக பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் திருநாமம், பத்மாவதி என்பதாகும். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்திற்கு என்று தல வரலாறு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்த ஆலயத்தின் கல்தூண்கள் அனைத்தும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு முறை சிற்பி ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அவர் இங்கிருக்கும் பாறைகளில் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் கண்டு பரவசடைந்து, தன்னுடைய கற்பனையில் பல சிற்பங்களை செதுக்கி, ஆலயத்திற்கு அர்ப்பணித்ததாக கூறப்படுகிறது.

Similar News