கோவில்கள்
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

Update: 2022-02-08 08:13 GMT
இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது, ஆண்டார்குப்பம். இங்குள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

* முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ‘ஆண்டியர்குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார்குப்பம்’ ஆனதாக சொல்கிறார்கள். ஆளும் தோரணையில் முருகப்பெருமான் இருப்பதாலும் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

* அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இத்தல முருகப்பெருமானின், திருநாமம், ‘பால சுப்பிரமணியர்’ என்பதாகும்.

* முருகனுக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையில் இருப்பதால், இவரை ‘அதிகார முருகன்’ என்றும் அழைப்பார்கள்.

* இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.

* மூலவரான முருகப்பெருமான், தன்னுடைய கரங்களில் எந்த ஆயுதங்களையும் ஏந்தாமல், இடுப்பில் கரங்களை வைத்தபடி அருள்கிறார்.

* மூலவரின் சன்னிதிக்கு எதிரில் பிரம்மன், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மனுக்குரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை மட்டும் இருக்கிறது.

* பொறுப்பான பதவிகள் கிடைக்க, அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்க, புத்திசாலித்தனமாக பிள்ளைகள் பிறக்க, இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

* திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, ஆண்டார்குப்பம்.

இந்த ஆலயத்திற்கு வந்த அடியவரான ஒரு முருக பக்தர், இத்தலத்தில் நீராட நினைத்தார். அங்கிருந்த ஆண்டிகளிடம், “இங்கே நீராடும் இடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அப்படி தீர்த்தம் எல்லாம் இந்த ஆலயத்திற்கு கிடையாது” என்றனர். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவனாக அங்கு வந்த முருகன், தீர்த்தம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஓரிடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார். அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து வந்து குளமாக மாறியது. அதுவே இங்கு ‘வேலாயுத தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.

தல வரலாறு

ஒரு முறை கயிலாயம் வந்த பிரம்மன், சிறுவன் என்பதால் முருகப்பெருமானை அலட்சியம் செய்தார். ஆனால் முருகப்பெருமான், பிரம்மனிடம் படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். அது பிரம்மனுக்கு தெரியவில்லை. இதையடுத்து பிரம்மனை, முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த தோற்றத்தில் முருகப்பெருமான் இங்கு காட்சி தருகிறார்.
Tags:    

Similar News