கோவில்கள்
வைஷ்ணவ தேவி கோவில்

வைஷ்ணவ தேவி கோவில் - ஜம்மு காஷ்மீர்

Published On 2022-01-24 08:00 GMT   |   Update On 2022-01-24 08:00 GMT
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாதா வைஷ்ணொ தேவி , மாதா ராணி , வைஷ்ணவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் மிகவும் புனிதமான இந்து சமய பெண் தெய்வமாவார். வைஷ்ணொ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், இந்த கோவில் இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணொ தேவி மலையில் அமைந்துள்ளது.

கோவில்

வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணொ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு விமானநிலையமாகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு விமான நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.

புராண வரலாறு

திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது,முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணொ தேவியை உருவாக்கினர்.ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணொ தேவி பூமியில் வசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.

அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணொ தேவி பிறந்தார்.குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணொ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார்.

திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.

இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.

ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணொ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணொ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார்.

அமைவிடம்

வைஷ்ணொ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் உறைவிடமாகும்.

ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது.இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது அது முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் அருவ வடிவமாகும். பிந்தி என அழைக்கப்படும் அந்த வடிவங்களே மாதா ராணியாக வணங்கப்படுகிறது.

பக்தர்களுக்கான சேவைகள்

பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவை மலையில் நடந்து பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஒன்றை கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச கழிப்பிடங்களும், ஓய்வு எடுக்க மண்டபங்களும், தாகம், பசி நீக்கிக் கொள்ள தேனீர் கடைகளும், சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளது. மலைக்கோயில் பாதையில் இரவுநேரப் பயணித்தின் போது உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் மூன்று இடங்களில் வசதி செய்துள்ளனர் கோயில் நிர்வாகம்.

மேலும் உயரமான மலை என்பதால் பிராணவாயு குறைவாக இருக்கும். எனவே நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கோயில் நிர்வாகம் ஆங்காங்கே மருத்துவர்களும், மருத்துவ வசதிகளுடன் கூடிய முதலுதவி மையங்கள் அமைத்துள்ளனர். மலையில் நடக்கவும், குதிரைகள் மீது ஏறி பயணிக்க முடியாத பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் வைஷ்ணவ தேவி மலைகோயிலுக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளது.
Tags:    

Similar News