கோவில்கள்
லட்சுமி நாராயணர் திருக்கோவில்- ஆந்திரா

லட்சுமி நாராயணர் திருக்கோவில்- ஆந்திரா

Published On 2022-01-19 08:01 GMT   |   Update On 2022-01-19 08:01 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில். இந்த கோவிலில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில். இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் நடைபெற்ற அன்னிய படையெடுப்புகளால், இந்த ஆலயம் சிதலமடைந்து பராமரிப்பு இன்றி போனது.

அதுவரை செல்வச் செழிப்பு மிக்க பூமியாக, விவசாயம் கொழிக்கும் இடமாக இருந்த இந்த ஊர், மழை இன்றி, விவசாயம் அழிந்து போனது. மழை பொய்த்துப் போய், அடிப்படைத் தொழிலான விவசாயம் அழி வைச் சந்தித்ததால், வாழ்வாதாரம் இன்றி அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தங்களின் இந்த நிலைக்கான காரணத்தை அப்பகுதி மக்கள் ஆராய்ந்தபோது, அங்குள்ள லட்சுமி நாராயணர் கோவில் சிதிலமடைந்து கிடப்பதும், ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் இருப்பதுமே இந்த துன்பங்களுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், ஆலயத்தை புனரமைத்து, நித்ய பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அப்படி செய்யத் தொடங்கியதும், அந்த பகுதியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது. மீண்டும் விவசாயம் தழைக்கத் தொடங்கியது.

கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடன் தரிசனம் தருகிறார். அவருக்கு எதிரில் கருவறை தென்படுகிறது. வாசலில் ஜெயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் இருக்கிறார்.

கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கிறார். சகல பாவங்களையும் போக்கும் சுதர்சன சக்கரமும் உள்ளது. பெருமாளை தமிழால் புகழ்ந்து பாடிய ஆழ்வார்கள், தனிச் சன்னிதியில் தரிசனம் தருகின்றனர். லட்சுமியை தன்னுடைய மடியில் அமர வைத்தபடி சாந்தமான ரூபத்தில் லட்சுமிநாராயணர் அருளாட்சி செய்கிறார்.

இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள். குளத்தின் நடுவில் காளிங்க நர்த்தனம் புரியும் கிருஷ்ணரின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதே போல் குளத்தைச் சுற்றிலும் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தசாவதார சிலைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

தவிர குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.

கோவிலின் தென்பகுதியில் அஷ்டலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், இந்த சன்னிதிக்கு வந்து தாயாரை மனமுருக வேண்டி, விளக்கு ஏற்றி வழிபட்டால், மது பழக்கத்தில் இருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் அகலும் என்கிறார்கள்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கடன் பிரச்சினை அகலவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டுபவர்கள், நீண்ட நாள் நோய் தீர, தொழில் விருத்தியாக, நலிந்த தொழில் மீண்டும் நல்ல முறையில் நடைபெற என அனைத்து பிரச்சினைகளுக்கும், இத்தல லட்சுமி நாராயணரை வணங்கி வழிபட்டு வந்தால் போதுமானது. தங்களின் கோரிக்கை நிறை வேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சித்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News