கோவில்கள்
நாமகிரி தாயார்

கவலைகளை போக்கும் நாமகிரி தாயார் கோவில்...

Published On 2022-01-01 06:41 GMT   |   Update On 2022-01-01 06:41 GMT
நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
நாமக்கல் அனுமன் தலத்தில் மகாலட்சுமி தாயாரின் வேண்டுதலுக்கு இணங்கி நரசிம்மர் அமைதி அடைந்து தாயாருக்கு வரங்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அது முதலாகத் தாயார் நாமகிரி லட்சுமி என்றும் பகவான் லட்சுமி நரசிம்மர் என்றும் நாமம் கொண்டு அருள் பொழிகின்றனர். நரசிம்ம சுவாமி குகைக்கோவிலில் பல அழகிய கலைப்படைப்புகளிடையே வீற்றிருக்கிறார்.

திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகையுள்ளே இருக்கின்றன. நரசிம்ம சுவாமி பிரதம தானத்திலும், உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் சாமரம் வீச, சிவபெருமானும் பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்திலும் நிலை பெற்று உள்ளனர்.

இதனால், நாமக்கல் திருமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மேலும் இந்தக்கோவிலில் சங்கரநாராயணரையும் தரிசிக்க முடிகிறது. நரசிம்மர் கோவிலில் உள்ளது போன்ற வாமன அவதாரத்தையும் காண முடிகிறது. இக்கோவிலும் இதன் கலை வல்லமைகளைக்கூறும் சிற்பங்களும் மாநில அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. ஆகம விதிப்படி நித்திய கால (பூஜை) வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரி தாயார், தாமரைக் கண்கள் கொண்டவள். தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே

நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது.
Tags:    

Similar News