கோவில்கள்
பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோவில்

பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோவில்

Published On 2021-12-24 11:33 IST   |   Update On 2021-12-24 11:33:00 IST
இங்கு சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். ‘பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரம்மநாதர், ஆதிவில்வ வனநாதர் என்பன இத்தல இறைவனின் திருப்பெயர்களாகும்.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்களாக தமிழகத்தில் எட்டு சிவாலயங்கள் சொல்லப்படுகின்றன. இவை எட்டும்,‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான், பிரம்மதேவனின் தலையை சிவபெருமான் கொய்த ‘பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோவில்’ ஆகும்.

தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில், இது 75-வது தேவாரத் தலமாக போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 12-வது தலம் இது.

இங்கு சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். ‘பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரம்மநாதர், ஆதிவில்வ வனநாதர் என்பன இத்தல இறைவனின் திருப்பெயர்களாகும்.

இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் நடுநாயகமாக இருக்கும் சூரியன் தன்னுடைய மனைவியர்களான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகின்றன.

ஆணவத்தால் மதியிழந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்தார். இதனால் ஞானம் அடைந்த பிரம்மன், தன்னுடைய தவறை எண்ணி வருந்தி, இந்த ஆலயத்திலேயே தவம் செய்தார். அவருக்கு துணையாக சரஸ்வதியும் தவம் செய்தார். இதை உணர்த்தும் வகையில் இங்கு பிரம்மதேவனுக்கும், சரஸ்வதிக்கும் சன்னிதி உள்ளது.

பொதுவாக சிவன் கோவில்களில், கருவறையின் முன்பாக சண்டி, முண்டி என்ற துவார பாலகர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே, ‘ஞானகுரு, ஸ்கந்தகுரு’ என்ற துவாரபாலகர்களாக வீற்றிருக்கிறார்.

வில்வ வனமாக இருந்த இடத்தில் கோவில் அமைந்திருக்கிறது. தல விருட்சமாகவும் வில்வமரமே இருக்கிறது. இந்த ஆலய ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக நிற்கிறது.

இந்த ஆலயத்தின் இறைவன் மீது, மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரியன் தன்னுடைய கதிர் ஒளியை வீசி வழிபடுகிறார்.

நந்திக்கு விருந்து

சிவபெருமானுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகவும், திருக்கண்டியூர் திருக்கோவில் திகழ்கிறது. திருவையாறில் அவதரித்த நந்திக்கு, சதாசபரின் மகள் ஊர்மிளாவுடன் திருமழப்பாடியில் வைத்து திருமணம் நடந்தது. இந்த விழாவின் போது திருவையாறு ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகியோர் இந்த ஆலயத்தில் எழுந்தருளினர். அப்போது நந்திக்கு புனித அபிஷேகம் செய்யப்பட்டு, கூடை நிறைய சாதம் வைத்து விருந்து படைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த நிகழ்வு இன்றளவும் இந்தக் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதோஷ தலம்

இங்கு தங்கிருந்த சதாசபர் மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் காளகஸ்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி செல்ல முடியாவிட்டால் தன்னுடைய உயிரை விடுவதாகவும் சபதம் செய்திருந்தார். அவரை சோதிக்க, ஒரு பிரதோஷ நாளில் பெரும் மழையை ஈசன் உண்டாக்கி, சதாசபரை தடுத்து நிறுத்தினார். இதனால் வருந்திய சதாசபர் கோவிலிலுக்குள் அக்னி வளர்த்து அதில் இறங்கி உயிரை மாய்க்கச் சென்றார். அப்போது ஈசன் தோன்றி, ‘எந்த தலமாக இருந்தாலும் அங்கு நான் இருக்கிறேன்’ என்றார். உண்மையை உணர்ந்த சதாசபர், பிரதோஷ வழிபாட்டை இங்கேயே மேற்கொண்டார்.

தஞ்சாவூரில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, திருக்கண்டியூர்.

Similar News