ஆன்மிகம்
குறிச்சி சித்தலிங்கேஸ்வரர் கோவில்

குறிச்சி சித்தலிங்கேஸ்வரர் கோவில்

Published On 2021-08-26 08:02 GMT   |   Update On 2021-08-26 08:02 GMT
பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையிலுள்ள சுந்தராபுரம் மற்றும் குறிச்சியும் அடர்ந்த காடாக இருந்தன. இந்த வனப்பகுதியில் சித்தர்களும் தவயோகிகளும் வசித்து வந்தனர். இங்கு விவசாயம் தழைத்திருந்தது. விவசாயிகள், இறைவனை வழிபட சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் வழிபாட்டு தலம் ஒன்றை அமைத்தனர். இதனாலேயே மூலவர் சித்தலிங்கேஸ்வரர் ஆனார்.

நுழைவாயிலைத் தாண்டியதும் மகாமண்டபம். எதிரே கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கருவறையின் நுழைவாயிலின் இடதுபுறம் ஆதி விநாயகரும், வலதுபுறம் ஆதிமுருகனும் பக்தர்களை வரவேற்கின்றனர். தவிர, கருவறையின் இடதுபுறம் வரசக்தி விநாயகருக்கும், வலதுபுறம் முருகனுக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. விநாயகர் சந்நதியின் முன்னால் மூஞ்சூரும், பலி பீடமும்; முருகன் சந்நதிக்கு எதிரே மயிலும், பலிபீடமும்! மகாமண்டபத்தின் இடதுபுறம் விஷ்ணு துர்க்கை மிக அழகிய கோலத்தில் காட்சி தருகிறாள்.

கல்யாண சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். பிராகாரத்தின் மேற்கு திசையில் விநாயகரும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதேபோல முருகப் பெருமானுக்கு சஷ்டி, கிருத்திகை, விசாகம் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஐப்பசி மாதம் கந்தசஷ்டி அன்று முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி மாத பௌர்ணமியில் அருள்மிகு சித்தலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.கார்த்திகைத் திங்கள் கடைசி சோமாவாரம் அன்று சித்தலிங்கேஸ்வரருக்கு சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெறுகிறது. பிரதோஷம், அமாவாசை நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. ஆடிக்கிருத்திகை அன்று பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பால்குடம் எடுத்து வரும் காட்சி மிக அற்புதமானது.

மாதத்தின் முதல் சனிக்கிழமையில் நவகிரக நாயகர்களுக்கு தோஷ பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன. விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள இங்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்கு கற்பூர தீப ஆராதனை இல்லை; தீப ஆராதனை மட்டுமே. அர்ச்சனை யாவும் தமிழிலேயே செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவனுக்கு பொங்கல் படையல் வைத்து பிரார்த்தனை செய்து அந்தப் பொங்கலை விநியோகம் செய்து நற்பலன் பெறுகிறார்கள். இங்கு இரவு 8.30 மணி அளவில் நடைபெறும் அர்த்தசாம பூஜை மிகவும் விசேஷமானது. கையில் தீபத் தட்டுடன் திருவங்கமாலை பாடியபடி அர்ச்சகர் பிராகாரத்தை வலம் வருவார். அவரைத் தொடர்ந்து பல சுமங்கலிப் பெண்கள் கையில் விளக்குத் தட்டுகளுடன் பாடியபடி பிராகாரத்தை வலம் வருகிறார்கள். அந்தப் பாடல் ஓசை கேட்போர்  இதயங்களை கொள்ளை கொள்வது அனுபவபூர்வமானது. அனைவரும் பாடியபடி மூன்று முறை பிராகாரத்தை வலம் வந்தபின் நடை சாத்தப்படுகிறது.

பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது. கோவை, உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மதுக்கரை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ளது குறிச்சி.
Tags:    

Similar News