ஆன்மிகம்
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்- பெண்ணாடம்

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்- பெண்ணாடம்

Published On 2021-08-24 07:36 GMT   |   Update On 2021-08-24 07:36 GMT
ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார்.
இறைவன்: சுடர்க்கொழுந்துநாதர், பிரளயகாலேஸ்வரர்
இறைவி: கடந்தைநாயகி
தீர்த்தம்: பெண்ணை நதி
பாடியோர்: சம்பந்தர், அப்பர்

சிறப்புகள்:

தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 2 வது ஆலயம். இந்திரன் தேவலோகத்துக்கு பூ வேண்டி இரண்டு தேவகன்னிகளை பூலோகம் அனுப்பி பூ கொண்டு வர சொன்னான். தேவகன்னிகைகள் பூத்தோட்டத்தில் இருந்த பூவை தேவலோகம் எடுத்து செல்வதற்கு பதில் அங்கே இருந்த சிவலிங்கத்திடம் பக்தி மேலிட அதற்கு பூஜை செய்தார்கள். கன்னியரை காணாத இந்திரன் முதலில் காமதேனு பசுவையும் பின்பு தன்னுடைய ஐராவாத யானையையும் அனுப்பி வைத்தான். அவைகளும் சிவலிங்கத்துக்கு தொண்டு செய்ய இந்திரன் அவைகளை காணாததால் கோபத்துடன் பூலோகம் வந்தான். தன்னால் அனுப்பப்பட்ட அனைவரும் சிவ பூஜை செய்வதை பார்த்து தானும் சிவபூஜை செய்து சிவன் அருள் பெற்று அனைவருடனும் இந்திராலோகம் சென்றான். பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (வெள்ளையானை) இறைவனை வணங்கியதால் பெண்ணாகடம் என்று பெயர் பெற்றது.

ஒருமுறை சிவபெருமான் உலகத்தை அழித்தார். இந்த தலம் மட்டும் வெள்ளத்தால் முழுகவில்லை. தேவர்கள் சிவனிடம் உயிர்களை இந்த ஊரில் வைத்து காக்கும்படி வேண்டியதால் சிவன் நந்திக்கு வெள்ளத்தை தடுக்க ஆணை பிறப்பிக்க நந்தி ஊரை நோக்கி திரும்பி வெள்ளத்தை திசை மாற்றி உலக்த்தை காத்தது. இதனால்தான் இறைவன் பிரளயகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அப்பர் சுவாமிகள் இத்திருகோவிலில் திருப்பதிகம் பாடி தன் தோளின்மேல் சூலக்குறியும், இடபக்குறியும் பொறித்தருல பெற்ற தலம். மறைஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். மெய்கண்டதேவரின் தந்தை அச்சுத காளப்பர் வாழ்ந்த ஊர். இங்கு வயல்கள் நடுவே கார்காத்த  வெள்ளாளர்கள் மெய்கண்டாருக்கு அழகிய திருகோவில் ஒன்றை அமைத்து உள்ளார்கள்.

ஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார். இறைவன் அருளுடன் அவரின் கையை திரும்பி அளித்தார். இத்தலத்தில் சிவனை வழிபட்டால் கை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 9.00

போக்குவரத்து:

விருதாச்சலத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் முகவரி:

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருகோவில்,
பெண்ணாடம் அஞ்சல்
திட்டக்குடி வட்டம்,
விருத்தாசலம் வழி,
கடலூர் மாவட்டம். 606105.

இதையும் படிக்கலாம்..சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜை நிறைவு
Tags:    

Similar News