ஆன்மிகம்
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருத்தலத்தின் சிறப்புகள்

Published On 2020-11-09 01:23 GMT   |   Update On 2020-11-09 01:23 GMT
திருச்சி அருகே அமைந்துள்ளது திருப்பட்டூர் திருத்தலம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது. இந்தக் கோவிலைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.
திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, திருப்பட்டூர் திருத்தலம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது. இங்கு பிரம்மனுக்கு தனிச் சன்னிதி அமைந்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். இந்தக் கோவிலைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

இங்கு அனுதினமும் வேதம் ஓதுபவர்கள், வேதங்களை பாராயணம் செய்து வந்தனர். அதனால் ஏற்பட்ட அதிர்வலைகள் இந்த ஊர் முழுவதும் பரவிக் கிடந்ததால், ‘திருப்பிடவூர்’ என்ற பெயர் வந்தது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று ஆனதாக சொல்கிறார்கள்.

வியாக்ரபாதர் என்ற முனிவர், சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக தேர்வு செய்த திருத்தல மாக திருப்பட்டூர் திகழ்கிறது.

இந்தக் கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தின் நீரில் எவர் ஒருவர் நீராடினாலும், அது கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.

இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக விளங்குகிறது. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமாகவும் இதைச் சொல்கிறார்கள்.

இந்தக் கோவிலில் வழிபட்ட ஆதிசேஷன், மறுகணமே பதஞ்சலி முனிவராக மாறினார் என்று கூறப்படுகிறது.

பிரம்மனின் ஆணவம் காரணமாக அவரது ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி எறிந்த தலம் திருக்கண்டியூர். இதையடுத்து பிரம்மன் பரிகாரம் தேடிக்கொண்டது, திருப்பட்டூர் திருத்தலம். பிரம்மன் வழிபட்டதாலேயே இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ ஆனார்.

பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

இந்தக் கோவிலில் ‘பிரம்ம சம்பத் கவுரி’ என்ற திருநாமத்துடன், அம்பாள் காட்சி தருகிறாள். இந்த அன்னைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா, இந்த ஆலயத்தில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரம்மாவை வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம்.

இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டுச் சென்றால், நிம்மதியான வாழ்வு அமையும்.

வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்.
Tags:    

Similar News