ஆன்மிகம்
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

Published On 2020-04-08 06:49 GMT   |   Update On 2020-04-08 06:49 GMT
தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும்.
காவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.

     இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர்
     இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.

நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு

கோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.

முன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.

ஆலய முகவரி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்,
நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி,
திருவிசலூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 105.

எப்படிப் போவது?

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
Tags:    

Similar News