ஆன்மிகம்
மேகம் திரை கொண்ட சாஸ்தா

மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில்

Published On 2020-03-19 01:36 GMT   |   Update On 2020-03-19 01:36 GMT
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. சுமார் 900 வருடம் பழமையான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தென்காசி மலையான் தெருவில் பாண்டியர் காலத்தில் இறைவழிபாட்டிலும், சிவபக்தியிலும் சிறந்து விளங்கிய மலையநாடார் (திருமலை நாடார்) என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் மலையநாடார் தனது குடும்பத்துடன் கிழக்கு நோக்கி பிழைப்பு தேடி வந்தார்.தென்காசி பாண்டிய அரசின் கீழ்திசை பகுதியாக விளங்கிய கீழப்பாவூரின் அருகே ஒரு இடத்தில் குடி அமர்ந்தார்.அதுவே பிற்காலத்தில் அருணாப்பேரி ஆனது. வானம் பார்த்த பூமியான அருணாப்பேரியில் மழை காலங்களில் விதைத்து அறுவடை செய்யும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. மலையநாடார் இப்பகுதியில் மழைப்பயிரான எள் செடியை விளைவித்து வந்தார்.

ஒரு முறை ஆடி மாதம் அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அபரிமிதமாக விளைந்த எள்ளினை அறுவடை செய்த மலையநாடார் தம்பதியினர் அவற்றை காய வைப்பதற்காக குவியல் குவியலாக குவித்து வைத்தனர். நல்ல வெயிலில் எள் கூடு வெடித்து களத்தில் கிடந்தது. அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. காய போட்டிருந்த எள் அனைத்தும் மழையில் அடித்து செல்லும் நிலை உண்டானது. கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்த மலையநாடார் தம்பதியினர் என்ன செய்வது என்று அறியாமல் அழுது புலம்பினர். அப்போது வானில் இருந்து “எள்ளுக்குள் மழை தண்ணீர் வராமல் இருக்க எள்ளை சுற்றி மண்ணை அணைத்து வை” என அசரீரி குரல் எழுந்தது.

இந்த குரல் கேட்டதும் கணவனும் மனைவியும் தலை நிமிராமல் மழையில் நனைந்து கொண்டே எள்ளை சுற்றி மண் அணைத்தனர். நிமிர்ந்து பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்க செய்தது. எள் செடி காய வைக்கப்பட்டிருந்த களத்திற்கு வெளியே சுற்றிலும் மழை பொழிந்தது. எள்ளின் மீது மழைத்துளி ஒன்றுகூட விழவில்லை. மழை வெள்ளம் மண் அணைப்பிற்கு வெளியே திரண்டு ஓடியது. மழை நின்றபாடில்லை.இறைவன் மீது பாரத்தை போட்டு மலையநாடார் தமபதியினர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தனர்.

ஆடி புதன் கிழமை காலை மழை நின்றதும் மலையநாடார் எள் களத்திற்கு சென்று பார்த்தார்.அங்கு எள் குவியல் எந்த பாதிப்பும் இல்லாமல் நனையாமல் இருந்தது. மகிழ்ச்சியில் திளைத்த மலையநாடார் ஓலைபெட்டிகளில் எள்ளை அள்ளினார். அப்போது எள் குவியலின் உள்ளே லிங்க முகம் ஒன்று தோன்றியிருந்தது.இதை பார்த்ததும் அவர் ஆச்சரியம் அடைந்தார். இத்தகைய லிங்க முகத்தை அப் பகுதியில் யாரும் பார்த்ததில்லை.சுயம்புவாக தோன்றிய இந்த லிங்க முகத்தை கண்டு பரவசம் அடைந்த மலைய நாடார் பிறமக்களை அழைத்து வந்து அந்த அற்புத காட்சியை காட்டினார்.பெரும் மழையில் இருந்து மழை தரும் மேகத்தையே குடையாக ,தடுப்பு திரையாக அமைத்து எள் குவியலை நனையாமல் காப்பாற்றிய சுயம்புநாதர் காரணப்பெயராக மேகம் திரைகொண்ட சாஸ்தா என்று அழைக்கலானார்.

மலையநாடாரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுகள் 5 பேரும் ஆண், பெண் வாரிசு என்ற பாகுபாடின்றி இணைந்து கோவில் பணியை மேற்கொண்டனர். கோவில் வளாகம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. சாஸ்தாவின் கிழக்கு நோக்கிய சன்னதி சிறிய அளவில் உள்ளது. வளாகத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சுயம்பு சாஸ்தாவுக்கு உருவச்சிலையும் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இங்கு பூரண, புஷ்கலை சிலைகள் அமைக்கப்படவில்லை. பின்னர் பக்தர்கள் சேர்ந்து பூரண, புஷ்கலை உருவங்களை அமைத்து வழிபட்டனர். மேகம் திரை கொண்ட சாஸ்தா 1300&க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக உள்ளார்.

நல்லெண்ணெய் காப்பு


கோவிலில் நித்திய பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும்.மேகம் திரை கொண்டு இறைவன் எள்ளை காப்பாற்றியதால் சுவாமிக்கு நித்தமும் எண்ணை காப்பு நடக்கிறது.எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணை மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுவதால் பக்தர்கள் நல்லெண்ணை காணிக்கையாக செலுத்துவது மரபாக உள்ளது.இங்கு சாஸ்தாவுக்கு பக்தர்கள் செவ்வந்திப்பூ மாலைகளை விரும்பி அணிவிக்கிறார்கள்.

 பங்குனி உத்திர திருவிழா இங்கு சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழா அன்று காலை கோவில் நடைதிறக்கப்பட்டு சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் நடைபெறும். தொடர்ந்து மதிய சாம பூஜையுடன் அன்னதானம் நடைபெறும். இதில் அருணாப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள 20&க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்பட சென்னை, மும்பை, பாண்டிச்சேரியிலுள்ள மலையன் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள்.

வழிபாடு பலன்கள்


துஷ்ட தேவதைகளிடம் இருந்து கிராமம், நகர் மற்றும் விளை நிலங்களை காப்பாற்றும் சக்தி கொண்ட சாஸ்தாவின் துணைவியர் பஞ்சம், கடும்நோய், சண்டை, சச்சரவு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சக்தி படைத்தவர்கள் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. குடும்பம் செழிக்க குலம் தழைக்க மேகம் திரைகொண்ட சாஸ்தா அருள் புரிந்து வருகிறார்.

குதிரை எடுப்பு விழா

ஆடி மாதம் 3-வது புதன்கிழமை லிங்கமுகம் கண்டதால் ஆண்டு தோறும் ஆடி மாதம் 3 ம் புதன்கிழமை இங்கு கொடைவிழா நடக்கிறது. ஆண்டுக்கு 2 முறை இங்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. மிக விமரிசையாக நடைபெறும் குதிரை எடுப்பு விழா ஆடி மாதம் 3&ம் புதன்கிழமை நடைபெறும். குதிரை எடுப்பு விழாவின் போது கோவில் பூசாரி வேளார் செய்த மண் குதிரையை கீழப்பாவூரில் இருந்து மேள தாளம் முழங்க எடுத்து வருவார்.

சாஸ்தாவின் சன்னதி முன்புற மண்டபத்தில் கிழக்கு முகமாக மண் குதிரை நிலை நிறுத்தப்படும். முத்தாரம்மனுக்கு பூஜையும், வழிபாடும் முடிந்த பின்னர் எடுத்து வரப்பட்ட குதிரை முன்னால் செங்கிடாய் வெட்டப்பெடும். அதை தொடர்ந்து பூஜையும் பின்னர் விழா நிகழ்ச்சிகளும் தொடங்கும்.

முகவரி: மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில்
அருணாப்பேரி,
பாவூர்சத்திரம்.
தென்காசி மாவட்டம்.
Tags:    

Similar News