ஆன்மிகம்
கோவில் தோற்றம், ஞானாம்பிகா, காளகஸ்தீஸ்வரர்

கரிசூழ்ந்த மங்கலம் திருத்தலம் திருநெல்வேலி

Published On 2020-03-14 01:31 GMT   |   Update On 2020-03-14 01:31 GMT
துர்வாச முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் 8 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்ததில் சிறப்பு வாய்ந்த திருத்தலம், கரிசூழ்ந்த மங்கலம்.
துர்வாச முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் 8 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்ததில் சிறப்பு வாய்ந்த திருத்தலம், கரிசூழ்ந்த மங்கலம். ராகு தோஷத்தை நீக்கும் தென்னகத்து காளகஸ்தியாக இந்த ஆலயம் திகழ்கிறது. துர்வாச முனிவர், தற்போதும் இந்த ஆலயத்தில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

தாமிரபரணி நதிக்கரை முழுமையாக நடந்தார், துர்வாச முனிவர். அப்போது பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார். தனது நெற்றியில் புனித திருநீறு அணிந்துகொண்டு நதியின் தென் கரைக்கு வந்தார். அங்கு ஓரிடத்தில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ‘காளத்தியான் என்ற ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர்’ என்று பெயரிட்டார். பின் காளத்தியானைத் தாமிரபரணி நீரால் அபிஷேகம் செய்தார். தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்தார். அங்கேயே தங்கி அனுதினமும், ஈசனை பூஜித்தார். பல காலம் அங்கேயே இருந்து நற்கதியடைந்தார்.

துர்வாச முனிவர், கரிசூழ்ந்த மங்கலம் சிவனை வணங்கும் போது, ‘கந்தரக்கறை நாயகன்’ என்கிறார். “திருக்கழுத்தில் விஷத்தினால் ஏற்பட்டக் கறையை (நீல நிறம்) கொண்டவனான திருநீலகண்ட நாதராகிய திருக்காளத்தியப்பருடைய திருவடிகளில் பணிந்து இனியகுரலில் புனித மந்திரங்கள் ஒதுகிறேன்” என்கிறார். “முன்னொரு காலத்தில் உனது மாமனாராகிய தட்சனின் அகந்தையால் உன்னை பல விதங்களில் அவமதித்து ஏசிப் பேசி இகழ்ச்சி செய்த போது அவனை அழித்துத் தண்டித்தாய். அதன் பின் அவன் உன்னை அண்டியபிறகு அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தாய். ஆடற்கலையில் வல்லோன் நீ. பலவிதமான நடனங்களை ஆடியவன். திருமாலோடும் இணைந்து ஆடியிருக்கிறாய். நீ கயிலாய மலைச் சிகரத்தில் நின்றாடினாய். இந்த முழுமையான எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் சிவபெருமான் நீ. உன்னைத் தரிசித்து தொழுவது எப்படி என்று முறைப்படி தெரியாமல் தயக்கத்துடன் நிற்கிறேன்” என்றார்.

பெரிய மகானான துர்வாச முனிவர், அவரது திருக்கரத்தினால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ஆலயத்தில் உள்ள காளகஸ்திநாதர். பிரம்மாவினால் ஏற்பட்ட சாபம் தீர, துர்வாச முனிவர் இத்தலத்தில் பிரம்மசாப நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டார். எனவே இங்கு வந்து வணங்கினால் அனைத்து சாபங்களும் தீரும்.

கரிசூழ்ந்த மங்கலம், சரித்திர சான்று களுடன் கல்வெட்டுச் செய்திகள் பலவற்றை தாங்கி நிற்கிறது. சோழ மன்னர்களுடைய ஆட்சிக் காலத்தில் ‘முள்ளி வள நாட்டு கலி செய மங்கலம்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. கி.பி. 18-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர், ‘கலி செய மங்கலம்’, ‘கலிசிய மங்கலம்’, ‘கவி சேகர மங்கலம்’ என்றெல்லாம் பெயர் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது, ‘தென் திருவேங்கடம்’ என்று விளங்கி வந்துள்ளது.

‘கரிசூழ்ந்த மங்கலம்’ என்பதற்கு உள்ளூர் மக்கள் கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்கள். ‘கரி’ என்றால் ‘யானை’ என்று பொருள். யானைகள் சூழ்ந்து வருகின்ற மங்கலமே ‘கரிசூழ்ந்த மங்கலம்.’ பழங்காலத்தில் இங்கு விளைந்த நெல் மணிகளை யானை கட்டி போரடித்த காரணத்தினாலும், இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று சிலர் எடுத்துரைக்கிறார்கள். ‘கரி’ என்றால் ‘மேகம்’ என்றொரு பொருளும் உண்டு. எப்போதும் மேகம் சூழ்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் ஊர் என்பதாலும், ‘கரிசூழ்ந்த மங்கலம்’ எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தப் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி நதிக்கு, ‘ மவுத்திக வாகிணி’ என்ற பெயர் உள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த ஊர் ‘துர்வாச சேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் துர்வாச தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் நீராடினால் துர்வாச முனிவரை போல நன்மை பயன் பெற்று மோட்சம் பெறுவார்கள் என்பது ஐதீகம். மேலும் வடக்கே காளகஸ்திக்கு சென்று வணங்க முடியாதவர்கள், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இந்த காளகஸ்தி நாதரை வணங்கினால் வடகாளகஸ்திக்கு சென்று வந்த நற்பலன் கிட்டுகிறது.

இங்குள்ள இறைவன் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரராகவும், அம்மை ஞான அம்பிகாவாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். தாமிர பரணி கரையில் உள்ள இந்த கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. தாமிரபரணியில் வலது கரை ஓரத்தில் உள்ள இந்த கோவிலுக்குள் நுழைந்தால், சிவனுக்கு தனது கண்ணை கொடுத்த கண்ணப்ப நாயனார் கல்வெட்டு சிற்பம் உள்ளது. அம்மனின் விமானத்தில் துர்வாச முனிவர் சிவனை பூஜிப்பது போல மற்றொரு சிற்பம் காணப்படுகிறது. கோவிலுக்கு உள்ளே நுழைந்தால் சண்டிகேஸ்வரர், தட்சிணா மூர்த்தி, சனி பகவான் ராகு- கேதுவோடு ஒரே வளாகத்தில் உள்ளனர்.

சிவனின் நெற்றியில் ராகுவும், அம்மையின் இடுப்பில் கேது ஒட்டியாணமாகவும் காணப் படுகிறார்கள். சனி பகவான் நாக கொடை பிடிக்க அமர்ந்துள்ளார். இவரின் சிரசிலும் ராகு - கேது உள்ளது. எனவே தான் இந்த ஆலயம் ராகு கேது பரிகார தலம் என கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், ஆவணி மாதம் வருஷாபிஷேகம், மாசி சிவராத்திரி உள்பட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். எனவே தடைபட்ட திருமணம் மீண்டும் நடைபெறும். பிதுர்தோஷம் நீங்கும். இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் சர்ப சாந்தி பூஜை நடக்கிறது. சர்ப சாந்தி பூஜை முடிந்து துர்வாச முனிவர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி எழுந்தால் நினைத்தது நிறைவேறுகிறது. இதற்காக ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்கிறார்கள்.

தாமிரபரணியை புகழும் துர்வாசர்

அத்ரி மகரிஷியின் மகனான, துர்வாச முனிவர் மிகவும் சினம் கொண்டவர். யாரையும் புகழ்ந்து அவர் பாடுவது அரிதானது. அப்படிப்பட்ட துர்வாச முனிவர், தாமிரபரணி நதியை மிகவும் புகழ்ந்து பாடியுள்ளார். கி.பி. 1842-ம் ஆண்டில் திருநெல்வேலி அருட்கவி நெல்லையப்பக் கவிராயர் எழுதிய திருநெல்வேலி தலபுராணத்தில் 30-வது சருக்கமாக அமைந்துள்ளது ‘துர்வாசேஸ்வர சருக்கம்.’ முதல் முப்பத்தாறு பாடல்களில், கரிசூழ்ந்தமங்கலம் என்னும் தாமிரபரணி கரை கிராமத்தினை பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் துர்வாச முனிவர் தாமிரபரணியை புகழ்ந்த வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அவர் கூறும் போது, “தாமிரபரணி சாதாரண நதி அல்ல. இந்த நதி பெருமையுள்ள நதி. நித்ய மங்கல சுமங்கலி. என்றென்றும் மகிழ்வுடன் மங்களங்களை அளிக்கும் சுமங்கலியே, மலையத்தின் நிலவே, மலையில் தவழும் தென்றலுடன் பிறந்த நாயகியே, சீரும் சிறப்புமிக்க ஆற்றலுடன் வந்த தாமிரபரணி தாயே! பொருணை நதியே! புத்தம் புதிய அம்ருதம் தனைக் கொண்ட வானுலக நதியாக விளங்குபவளே! உன்னிடம் அடைக்கலம் அடை கிறேன்” என்று போற்றுகிறார்.

தன் சீடர்களிடம் கூறும் போது, “புனிதமான கங்கை எப்படி தன்னிடம் நீராடுபவர்களின் கடும் பாவங்களைக் களைந்து நற்கதியையும், அருளையும் கொடுக்கிறாளோ! அதைப் போலவே தன்னை நாடி வருபவர்களுக்கு நற்கதி தரும் அருளானவள்தான், தாமிரபரணி தாய். நிறைவு உயர்வான திருக்கயிலாய மலையில் இருந்து உம் மக்களிடம் நீ கொண்ட அன்பு காரணமாக பொதிய மலைக்கு வந்து மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் தாயே. பொருணையே உன்னிடம் சரணடைகிறேன்” என்று அவர் தாமிரபரணியை புகழ்ந்தார்.

மேலும் தாமிரபரணியை, முப்பெரும் தேவியர்களான மலைமகள், திருமகள், கலைமகள் ஆகியோருடன் ஒப்பிடு கிறார். அதன்படி முறையே ‘காரணியே.., நாரணியே.., பூரணியே..’ என்று தாமிரபரணியை புகழ்கிறார், துர்வாசர்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டு இருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் பத்தமடையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கரிசூழ்ந்த மங்கலம் உள்ளது. இவ்வூருக்கு பத்தமடையில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

முத்தாலங்குறிச்சி காமராசு
Tags:    

Similar News