ஆன்மிகம்
ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், கோவில் தோற்றம்

வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்- திருவள்ளூர்

Published On 2020-03-13 01:45 GMT   |   Update On 2020-03-13 01:45 GMT
பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பல்லவர், சோழர்கள் திருப்பணி செய்த திருக்கோவில், மூலவரை விட உயரமான உற்சவத் திருமேனிகள் அமைந்த தலம், ராமாயணக் காட்சிகள் நிறைந்த கல் மண்டபம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்.

கங்கை கொண்ட சோழனான முதலாம் ராஜேந்திரன், கோசாலை நாட்டு நாயகன் ராம பிரானுக்கு இவ்வூரில் ஆலயம் எழுப்பி, 50 குழி பூந்தோட்டத்தை, சீதை சுயம்வர விழாவுக்கு வழங்கிய செய்தியை இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. ‘திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்’ என்ற வரிகள் மட்டுமே கொண்ட கல்வெட்டு, இம்மன்னனின் நினைவை இன்னமும் நினைவுபடுத்துகின்றன. இக்கோவில் பல்லவர் காலத்திலேயே சிறப்பு பெற்று விளங்கியதற்குச் சான்றாக, ராஜசிம்ம பல்லவன் தூண்கள் பலவும் இக்கோவிலில் அமைந்துள்ளன.

ஆலய அமைப்பு

இந்த ஆலயத்தின் மூலவர் ஆதிகேசவப் பெருமாள் என்றாலும், ராமரே இங்கு பிரசித்தி பெற்று விளங்குகிறார். ஊரின் மையப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. எளிய நுழைவு வாசல், இடதுபுறம் சிற்பங்கள் நிறைந்த கல் மண்டபம் நம்மைக் கவர்கின்றது. இதில் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு, கலைகளின் தூண்களாக விளங்குகின்றன.

மண்டபத்தின் மேல்புறத்தில் ராமாயணக் காட்சிகள் அனைத்தும் புடைப்புச் சிற்பங்களாக வடித்துள்ளது, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. கோபுர ஸ்தம்பம் என்ற சிற்ப சாஸ்திரத்தைத் தழுவி, நுணுக்கமாக தூண் முழுவதும் கோபுரங்களில் செதுக்கியுள்ள வேலைப்பாடுகள் ரசிக்கத்தக்கது.

அருகே தும்பிக்கையாழ்வார், பலிபீடம், சிற்பக் கலையால் மிளிர்கிறது. அடுத்து பெருமாளை வணங்கி நிற்கும் கருடாழ்வாரின் விமானம், பெருமாள் விமானத்திற்கு சற்றும் சளைக்காமல் கலைநுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபச் சுவற்றிலும் அரிதான புடைப்புச் சிற்பங்கள், கருவறை முன்மண்டபம், தூண்களில் சிற்பங்கள், கருவறையில் மூலவரான ஆதிகேசவப்பெருமாள், தன் துணைகளோடு எளிய வடிவில் காட்சி தர, அவரை விட உயரமாக உற்சவர்த்திகள் காட்சி தருகின்றனர். கருவறை முன்மண்டபத்தில் இடதுபுறம் ராமர், லட்சுமணர், சீதை, பரதன் ஆகிய உற்சவத் திருமேனிகள் நமக்கு அருள்காட்சி தருகின்றனர்.

சுவாமி கருவறையின் வலதுபுறம் தாயார் சன்னிதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. தாயார் எளிய வடிவில் அழகுற காட்சி தருகின்றாள். முன் மண்டப விதானத்தில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.

அழகிய ராமன்

இத்தலத்தின் சிறப்பு, இங்கு அமைந்துள்ள ராமபிரானின் உற்சவத்திருமேனி மற்றும் சீதை, லட்சுமணன், பரதன் திருமேனிகள். இதில் ராமன் மற்றும் பரதன் சிலைகள் மட்டுமே பழமையானவை. மற்ற இரண்டும் புதிய சிலைகள் எனக் கூறப்படுகிறது. ராமன் சிலையழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. தாமரை முக மண்டலம், கருணை பொழியும் கண்கள், மோகனப் புன்முறுவல், பத்ம பாதம் என அனைத்து அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மரவுரி கிரீடம், குண்டலம், ஹாரம், பாதசரம் கொண்டு நெற்றியில் பொன்னால் ஆன திலகம், பிடரியில் சுருள்கேசம் முதுகில் தவழ, ராமபிரானின் அழகு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வடிவழகுதான் சீதையை மயக்கியது போலும். இதேபோல, பரதனின் வடிவமும் கலைநயத்தோடு அமைந்துள்ளது.

பழம்பெருமை கொண்ட இக்கோவிலில், வைணவ ஆலய விழாக்கள் அனைத்தும் எளிய முறையில் நடத்தப்படுகின்றன. கிராமத்து ஆலயம் என்பதால் காலை, மாலை பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும்.

அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில், சென்னையில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில், பெரியபாளையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், வடமதுரை ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தை அடையலாம். பெரியபாளையத்தில் இருந்து ஆட்டோ மூலமும் எளிதில் வரலாம்.

பனையபுரம் அதியமான்
Tags:    

Similar News