ஆன்மிகம்
சாது சிதம்பர சுவாமிகள், கோவில் தோற்றம்

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்

Published On 2020-02-28 01:37 GMT   |   Update On 2020-02-28 01:37 GMT
வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது - உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர். தம்பதியருக்கு வெகுநாளாய் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே ராமேஸ்வரத்திற்கு நடந்து சென்று சிவபெருமானை வணங்கி நின்றனர்.

இதன் பயனாக ஐப்பசி மாதம் அமாவாசைஅன்று சித்திரை நட்சத்திரத்தில், வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிறந்தார். 3-வது வகுப்பு வரை படித்தார். ஏழ்மை காரணமாக வல்லநாடு மலையில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார். அப்போதே இவர் அனைத்து உயிர்களையும் நேசிக்க ஆரம்பித்தார்.

இவருக்கு நஞ்சு கக்கும் நாகப்பாம்பு ஒன்று நண்பன் ஆனது. இருவரும் ஒரே கலசத்தில் உணவு அருந்தினர். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அச்சமடைந்தனர். மலை மீது திடீரென்று தோன்றிய சித்தர் மூலம் உபதேசம் பெற்றார்.

இதை அறிந்த பெற்றோர், தங்கள் பிள்ளை தங்களைவிட்டு பிரியாமல் இருக்க திருமணம் செய்து வைத்து விடலாம் என்று யோசித்தனர். அதன்படி லட்சுமி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர். ஆனாலும் துறவறம் மேற்கொள்வதே என் எண்ணம் என்று முதல் நாள் இரவே அப்பெண்ணை பிரிந்து இல்லற துறவு பூண்டார். கணவனை தெய்வமாக போற்றிய அவரது துணைவியார், கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமி ஏற்படுத்திய சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார்.

சுவாமிகள் அன்னக்காவடி எடுத்து ஏழைக்கு அன்னதானம் வழங்கினார். இது அவரின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. பெரிய சமுதாயத்தில் பிறந்தவன் பிச்சை எடுப்பதா? என கண்டித்தனர். ஆனாலும் சுவாமி தொடர்ந்து பிச்சை எடுத்தார். எனவே அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உறவினர்கள் சிலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர் தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவயோகம் செய்து கொண்டிருந்தார், சிதம்பர சுவாமிகள். அதை கண்டவர்கள் யாரோ ஒருவர் நமக்கு முன்பு சுவாமியை வெட்டி கொன்று விட்டனர் என்று பயந்து ஓடினர்.

மறு நாள் ஊரார்களை கூட்டி வந்த போது, சுவாமி குளித்து விட்டு பூஜை செய்து, “என்ன சாமி நீங்க நினைச்சது நடக்கலையா?” என்று கேட்டாராம்.

காடுகளிலும், மலைகளிலும் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை இவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். அங்கு மதம்பிடித்த யானை ஒன்றை, தனது பார்வையால் கட்டுப்படுத்தினார். அதன் பின் சுவாமி எப்போது சதுரகிரிக்கு சென்றாலும் அந்த யானை சுவாமியை பார்க்க வந்துவிடுமாம். யானை இறந்த பிறகு அதன் சிரசை, சட்டபடி வாங்கி பாறைக்காட்டில் உள்ள தனது தியானமடத்தில் தீபம் போட்டு வணங்க வைத்துள்ளார்.

சுவாமிகள் வேட்டியும் துண்டும்தான் அணிவார். எளிய தோற்றம் படைத்தவர்கள். எளிதில் எவரும் அருகே சென்று பேசலாம். ஆனால் காலைத் தொட்டு வணங்க மட்டும் சம்மதிக்கமாட்டார். தெரியாமல் யாராவது, அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டால், அவரும் அதே போல் அந்த நபரின் காலில் விழுந்து வணங்குவார். இனிய வார்த்தைகளையே பேசுவார். அடிக்கடி மொட்டையடித்துக் கொள்பவர். மண்சட்டியில் சோறு போட்டு உண்ணுவார். எங்கு சென்றாலும் தரையில் துண்டு விரித்தே அமர்வார். ஜாதி மதம் பார்க்க மாட்டார். மூலிகை மருந்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவார். தமக்கு பணம் தர முயலுவோர்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கச் சொல்வார்.

‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாசகத்தைத் தனது வாழ்நாளில் நோக்கமாகக் கொண்டு மக்களை வழிநடத்தியவர். பல ஊர்களுக்கு சென்று பக்தர்களின் வீடுகளில் தீப வழிபாட்டினைச் செய்தார். அற்புதங்களை விளைவித்து அருள்வாக்குகளைத் தந்தார். சுவாமிகள் பெற்றோரைப் பேணியவர். வீட்டாருக்கும், வெளியாருக்கும் மகானாக விளங்கியவர். ஊனமுற்றோருக்கு தீபாவளிஅன்று எண்ணெய் தேய்த்து குளிக்க உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக பாளையங்கோட்டை காதுகேளாதோர் மற்றும் கண் தெரியாதோர் பள்ளிக்குசென்று வருவார். தொண்டர் குலத்தார் அப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. 1981-ல் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தார். அவரது உடல் தனது தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் வந்து நின்றாலே நமது வினைகள் தீருகிறது. கேட்ட வரம் கிடைக்கிறது. சுவாமி ஜோதியில் கலந்த நாளில் குருபூஜை நடத்தப்படுகிறது. தை பூசத்தில் வள்ளலார் ஜோதியான நாளை முன்னிட்டும், வைகாசி பூசத்தில் சுவாமி ஜோதி ஆன நன்னாளிலும் 1008 தீப வழிபாடு நடைபெறுகிறது.

அன்னதான மகிமை

ஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சுவாமி அந்த பெண்ணின் வயிற்று வலியை போக்க அன்னதானத்தில் வந்து உணவு உண்ண கூறினார். அதுவரை சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு, தீராத நோயாக இருந்த அந்நோய் தீர்ந்தது. தற்போதும் கூட வல்லநாட்டு சித்தர் பீடத்திற்கு வந்து சுவாமியை வணங்கி விட்டு அன்னதானம் சாப்பிட்டால் பலதரப்பட்ட நோய்களும் தீருகிறது. இந்த சித்தர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.

சித்தரின் அற்புதம்

சாது சித்தர் சுவாமிகள், ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பார். இப்படித்தான் ஒரு சமயம் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் தீப வழிபாட்டினை சுவாமி நடத்திக் கொண்டிருந்தார். அதே சமயம் அருகில் உள்ள ஆற்றில் ஒருவர் குளிக்க இறங்கியபோது தண்ணீர் அடித்து சென்று விட்டது. அங்கு வந்த சுவாமி அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். காப்பாற்றப்பட்ட நபர் தீப வழிபாட்டு இடத்திற்கு வந்தபோது அங்கேயும் சுவாமி இருந்தார்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடத்திற்கு செல்ல திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து கலியாவூர் செல்லும் சாலையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் பாறைக்காடு திருத்தலம் உள்ளது. வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

முத்தாலங்குறிச்சி காமராசு
Tags:    

Similar News