ஆன்மிகம்
திருமுருகன்பூண்டி

தேவாரப் பாடல் பெற்ற திருமுருகன்பூண்டி

Published On 2020-02-13 01:47 GMT   |   Update On 2020-02-13 01:47 GMT
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது திருமுருகன்பூண்டி.
சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது, திருமுருகன்பூண்டி. இது திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது.

சுந்தரர் தனது நண்பரான சேரமான் பெருமானை சந்தித்து, பொன்னும், பொருளும் பெற்று அவிநாசியப்பரை தரிசிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது இருள் சூழத் தொடங்கி விட்டதால், வழியில் பாறை மீது அமைந்த விநாயகர் கோவிலில் தங்கினார்.

அப்போது தன் பக்த சினேகிதனான சுந்தரரோடு, திருவிளையாடல் புரிய சித்தமானார், சிவபெருமான். அதன்படி தன் பூதகணங்களை வேடர் வடிவில் அனுப்பி, சுந்தரரிடம் இருந்த பொருட்களைக் களவாடச் செய்தார். திகைத்துப் போன சுந்தரர், தன்னுடைய பொருட்களை களவாடியது யார் என்று விநாயகரிடம் வேண்டினார்.

அவரோ, ‘இது தனது தந்தையின் திருவிளையாடல்’ என்று உணர்த்தும் வகையில், கிழக்கு திசை நோக்கி குறிப்பு காட்டினார். அதன் அடிப்படையில் சுந்தரர், திருமுருகன்பூண்டி திருத்தலம் சென்று, அத்தல ஈசனை செல்லமாக கோபித்துக் கொண்டு, 10 பதிகங்களை பாடினார். இதில் மகிழ்ந்து போன இறைவன், அவருக்கு மீண்டும் பொக்கிஷத்தை தந்தருளினார்.

இத்தகு சிறப்பு வாய்ந்த திருமுருகன் பூண்டியில் மேற்கு திசை நோக்கி ‘முருகநாத சுவாமி’யாக சிவபிரானும், ‘பூண்முலை அம்மை’ என்ற பெயரில் அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். தென்திசை நோக்கி, வள்ளி - தெய்வானை சமேதராக ஆறுமுகப்பெருமான் வேலேந்தி நின்ற கோலத்தில் சிவலிங்கத்தைப் பூஜிப்பது இத்தலச் சிறப்பாகும்.

சூரபதுமர்களை அழித்த காரணத்தால், முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே இத்தல ஆறுமுகப்பெருமானை, காரிய சித்தி பெற நினைப்பவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடினால், மனத் தெளிவு கிடைக்கும் என்பது ஐதீகம்.

நெடுஞ்சாலையை ஒட்டி வடபுறத்தில் முருகநாத சுவாமிக் கோவிலும், தென் புறத்தில் காண்பவர் வியக்கும் வகையில் இன்னொரு சிவாலயமும் அமைந்து, இரட்டைக் கோவில்களாக பரிணமிக்கின்றன. கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலில் ராஜகோபுரம் இல்லை. ஆனால் மூலவர் வீற்றிருக்கும் கருவறை விமானமே சிவலிங்க வடிவிலும், எதிரே மிகப் பெரிய வெள்ளை நிற நந்தி, மண்டபங்களின் மீது அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டு, வெளியில் இருந்து பார்க்கும் போதே மிகப் பெரிய சிவாலய தோற்றத்தைக் காட்டுவது அற்புதம்.

மாதவனேஸ்வரர் மூலவராக வீற்றிருக்கும் இவ்வாலய மரத்தடியில் நாகர்கள் சூழ, விநாயகர் சர்ப்ப விநாயகராக காட்சி தருகிறார். கருங்கல் ஸ்தூபி ஒன்று கொடிமரமாகக் காட்சி தருகிறது. வரவேற்பு வளைவைத் தாண்டி உள்ளே சென்றதும் மகா மண்டபத்தில் பெரிய கல் நந்தி வீற்றிருக்க, இருபுறமும் கணேசரும், பாலமுருகரும் தகப்பனுக்குத் துணையாக நிற்க, கருவறையில் மாதவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியாக இறைவன் காட்சி தருகிறார்.

தேவ கோட்டத்தில் தட்சணாமூர்த்தி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வடபுறம் துர்க்கையும், சண்டேசரும் எழுந்தருளியுள்ளனர். வெளிப்பிரகாரத்தில் கன்னி மூலை கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகனும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர்.

ஆலயத்தின் வடமேற்கு மூலையில் ஐந்து தலை நாகமும் மனித உடலுமாக கேது பகவான் தனிக் கோவில் கொண்டு விளங்குகிறார். இங்கே இவர்தான் சிறப்பு மூர்த்தி. ஒரு கோவிலில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தினை ஆராய்ந்தால், கேது அங்கே வடமேற்கில்தான் வீற்றிருப்பார். அதேபோல இந்த ஆலயத்தின் வடமேற்கில் கேது சன்னிதி அமைந்திருப்பது மிகச் சிறப்பானதாகும். கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், கொள்ளு தானியம் முடிச்சு போட்டு, பல வண்ண நிற திரி போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். கொள்ளு சாதம் நைவேத்தியமும் படைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கேது பகவானுக்கு, சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடை பெறுகிறது.

இவருக்கு எதிரே மாவிலங்க மரம் தல விருட்சமாக தழைத்து நிற்கிறது. இங்கே நாகப் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்கள். சுவாமிக்கு இடப்புறம் தனிக் கோவிலில் மங்கள நாயகியாக அம்பிகை அருளாட்சி செய்கிறாள். ஈசானிய மூலையில் நவக்கிரகங்களும், தனி சன்னிதியில் தெற்கு பார்த்தபடி கால பைரவரும் காட்சி தருகிறார்கள்.

திருக்காளகஸ்தி தவிர, சோழ நாட்டில் கேதுவுக்குத் தனி சன்னிதியுள்ள கீழப் பெரும்பள்ளம், ராகு -கேது ஏக சரீரமாக விளங்கும் திருப்பாம்புரம், மன்னை பாமணி போல கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டி கேது பகவானுக்கு தனியான பரிகாரத்தலமாக சிறந்து விளங்குகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

டாக்டர்.ச. தமிழரசன்
Tags:    

Similar News