ஆன்மிகம்
நாகராஜா கோவில்

நாகர்கோவில் நாகராஜா கோவிலின் தல புராணமும் வரலாறும்

Published On 2020-02-08 06:34 GMT   |   Update On 2020-02-08 06:34 GMT
நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தல புராணத்தை அறிந்து கொள்ளலாம்.
நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு பார்த்தது. என்றாலும் தெற்கு திசையில் உள்ள கோபுர வாசல் வழியே செல்லும் வழக்கம் காலம் காலமாய் நடக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் தெற்கு முகப்பு வழி மட்டுமே செல்ல முடியும்.

கோவிலின் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த வசதி உண்டு. கோவிலின் அருகே திருக்கோவில் அலுவலகம் உள்ளது. கோவிலின் பூஜை, வழிபாடு குறித்த விவரங்களை இங்கு கேட்டுக் கொள்ளலாம்.

கோவிலின் அருகே அமைந்துள்ள சிறிய குளம், பெரிய அரசமரங்கள், பெரிய வளாகம் எல்லாம் இக்கோவிலுக்குச் சிறப்பைக்கொடுப்பவை. கிழக்கு வாசல் வழியும் நடந்து நேராக கோவிலுக்கு வர முடியும்.

தல புராணமும் வரலாறும்:

நாகராஜா கோவிலுக்கு என்று தனியாக தலபுராணம் கிடையாது. இது சமணக் கோவிலாக இருந்தது. கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை சமணப்பள்ளியாக இருந்த இக்கோவிலின் வழிபாட்டு பழமை பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை. கல்குளம் வட்டம் சிதறால் கோவில் ஒரு சமண தலம். இதன் காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முன் உள்ளது.

ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோவிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. 16-ம் நூற் றாண்டு கல்வெட்டு குண வீரபண்டிதன், கமலவாக பண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்ட சமணர்கள் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சாரியர்கள். இது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண தெய்வமாகவும், பாமர தெய்வமாகவும் இக்கோவிலில் இருந்திருக்கிறது. நாகர் வழிபாடு, கதைகள் அப்போதே பரவலாயிருக்கலாம். இந்த நாகராஜா பற்றிய சமண கதைகள் உண்டு.

சமணத்தின் 23-ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர். இவருக்கு பிறவிகள் தோறும் துன்பமளித்தவன் சமடன். இவன் கடைசி பிறவியில் மகிபாலன் என்னும் பெயரில் பிறக்கிறான். அப் போது பாசுவநாதருக்கு தாத்தா முறை. மகிபாலன் ஒரு மரக்கட்டையை நெருப்பிலிட்டான். பார்சுவநாதனாக இருந்த சிறுவன் அந்த கட்டையில் இரு பாம்புகள் உள்ளன. அவற்றை நெருப்பில் போடாதே என்கிறான்.

ஆனால் மகிபாலன் கேட்கவில்லை. அதனால் பாம்புகள் இறக்கின்றன. பார்சுவன் ஓதிய மந்திர மகிமையால் ஆண் பாம்பு நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) பெண் பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறக்கின்றனர். தீர்த்தங்கரர்கள் ஒவ்வொரு வருக்கும் யட்சனும் யட்சியும் பணிவிடையாளர்களாக இருப்பர். பார்சுவநாதருக்கு தர்ணேந்திரனும், பத்மாவதியும், யட்சனும் யட்சியுமாக இருந்தனர் என்பது ஸ்ரீபுராணம்.

இதன்படி இக்கோவிலின் தெற்கு கருவறையில் இருப்பது தர்ணேந்திரன். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (கி.பி.1588) கருங்குள வளநாட்டு கும்பிகுளத்து திருக்குருகை பெருமாள் இக்கோவிலுக்கு நிபந்தம் கொடுத்துள்ளார்.இந்த கல்வெட்டில் தார்வனந்தாள்வார் என்ற பெயர் முதலில் வருகிறது.

அனந்தன் ஆதிசேஷனின் பெயர். இவன் ஆயிரம் தலைகளை உடையவன். பார்சுவநாதர் புராணத்தில் இடம் பெறும் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன்.

இதனால் இக்கோவில் வைணவ கோவில் ஆனது. 1643-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோவிலை ஸ்ரீகிருஷ்ணன் கோவில் எனக் கூறும். இப்போது மூலவரின் எதிரே உள்ள கொடி மரத்தின் பட்டத்தில் ஆமை படம் இடம் பெறுகிறது.

ஆமை கொடி நாகராஜருக்கு, பலராமனின் கொடியிலும் ஆமை இருக்கும். எனவே இக்கோவிலின் மூல புராணமாக சமணத்தின் ஸ்ரீபுராணத்தையும் இந்துக்களின் பாகவதத்தையும் கொள்ளலாம். இந்தக் கோவில் கட்டுமானம் தொடர்பாக ஒரு கதை வழங்குகிறது. இக்கோவிலை முதலில் வைஷ்ணவ கோவிலாக கட்ட ஆரம்பித்தவன் சிறைவாய் மூத்த தம்புரான் ஆன ஜெயதுங்க நாட்டு சங்கர நாராயணர் வென்று மண்கொண்ட பூதலவீர வீர உதய மார்த்தாண்டன் என்பவன் ஆவான். இவன் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராகக் கொண்டு தன் புதிய அரண்மனையில் இருந்து வேணாட்டை ஆண்டவன். (1516 முதல் 1585 வரை)

இந்த அரசனுக்கு தீர்க்க முடியாத சரும வியாதி வந்தது. தொழுநோய் என ஒரு வைத்தியன் சொன்னான். மன்னன் தன் உடலைப் பட்டால் மூடிக் கொண்டுதான் அமைச் சர்களையே சந்தித்தான். ஜோதிடர்கள் அவனது சரும வியாதி நாகதோஷத்தால் வந்தது. நாஞ்சில் நாட்டு நாகராஜா கோவிலில் வழிபட்டால் இந்த வியாதி தீரும் என்றான். மன் னனும் அப்படியே செய்தான்.

இந்தக் கோவிலின் தலவிருட்சம் என்று கூறப்படும் ஓடவள்ளி செடியைத் தன் உடம்பில் தேய்த்துக் கொண்டு 41 மண்டலங்கள் இக்கோவிலில் இருந்தான். இதனால் அவன் நோய் குணமானது-. இவன் இக்கோவிலில் சில பகுதிகளைக் கட்டினான் என்பதும் ஒரு கதை.

கோவில் அமைப்பு

நாகராஜா திருக்கோவிலின் இன்றைய கட்டிட அமைப்பு குறிப்பிட்ட காலத்தில் வடிவமைக்கப்பட்டதல்ல. கி.பி.15-ம் நூற்றாண்டில் இருந்து 20-ம் நூற்றாண்டு வரை 400 ஆண்டுகளில் படிப்படியாக கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் உள்ள கட்டுமானம் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இல்லை. இப்போதுள்ள கருவறைப் பகுதியும் அர்த்தமண்டபமும் முன்பு இருந்திருக்கலாம்.

உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், மதில், முன் பகுதிக் கோபுரம் ஆகியன பிற்கால வளர்ச்சிகள். இந்த கோவில் இருக்கின்ற இடத்தைச் சுற்றி வயல்களும் குளங்களும் இருந்தன என்னும் செய்தியை 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாய்மொழியாகக் கேட்டவர்கள் இருக்கிறார்கள். இப்போது கோவில் இருக்கும் இடத்தைச் சுற்றி சிறிய, பெரிய குளங்கள் இருந்தன.

கோவிலின் மேற்கே இப்போது இருக்கும் ஸ்டேடியம் 35 ஆண்டுகளுக்கு முன்புவரை கள்ளர் குளம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள நாகராஜா திடல் கூட 40 ஆண்டு களுக்கு முன்பு குளமாக இருந்தது. இதன் பழைய பெயர் உமைபங்கன் ஏரி. இப்படியான நீராதாரங்களின் நடுவில் இக்கோவில் இருந்தது. இது 20-ம் நூற்றாண்டு ஆரம்பகால நிலை.

இன்றும் கோவிலின் பொலிவுக்கு கோவிலின் கிழக்கு, தெற்கு பகுதியில் உள்ள வளாகமும், கிழக்கில் உயர்ந்து நிற்கும் அரச மரம், வடக்கில் இருக்கும் சிறிய குளம் போன்றவையும் காரணம். கோவிலின் தெற்கு பக்கம் உள்ள வாயில் மகாமேரு. பக்தர்கள் பொதுவாக இந்த வாயிலைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். மகாமேரு கேரள பாணி கட்டிடம். கிழக்கு வாசல் உமபங்கன் வாயில் எனப்படும். கோவிலின் கோபுரமாகக் கருதப்படும் வாயிலின் முகப்பு ஓட்டுக்கூரை.

மொத்தக் கோவில் 72 சென்ட் நிலரப்பில் உள்ளது. அனந்தகிருஷ்ணன் சன்னதிக்கும், நாகராஜர் சன்னதிக்கும் இரண்டு வாசல்கள் உள்ளன. அனந்தகிருஷ்ணன் சன்னதி வாசலில் கொடிமரம், பெரிய மணி மண்டபம், (ஒரு காலத்தில் யானை கட்டப்பட்ட இடம்), ஓட்டுப்பணி கூரை. இது கிழக்கு பிரகாரம், பிற மூன்று பிரகாரங்களும் வெட்டவெளியில் அமைந்தவை.

கோவிலுக்குள் செல்வதற்கு இரண்டு வாசல்கள். நாகராஜ் சன்னதி வாசலில் இரண்டு பெரிய நாகர் சிற்பங்கள் உள்ளன. தர்ணேந்திரன், பத்மாவதி இருவரும் இந்த நாகர்கள். பர்சுவநாதரின் யட்சன், யட்சிகள், இவ்வாசலைக் கடந்ததும் காண்பது மகாமண்டபம். மகா மண்டபம் 29 தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம். இதன் வடபகுதியில் நாகராஜனின் கோவிலும் தென் பகுதியில் அனந்தகிருஷ்ணன் கோவிலும், நடுவில் சிவனின் சிறு கருவறையும் உள்ளன. இவை மூன்றும் கிழக்கு நோக்கியவை.

இம்மூன்று கோவில்களைச் சுற்றிலும் மேல்கூரையுள்ள பிரகாரம் உண்டு. இந்த உட்பிரகாரத்தை சுற்றிலும் உயர்ந்த திண்ணை உண்டு. நாகராஜர் கருவறையை உட்பிரகாரத்தில் இருந்து பார்க்கும் வசதி உள்ளது.

இரண்டு கருவறைகள்

நாகராஜர் இருக்கும் கருவறை இரண்டு அறைகளைக் கொண்டது. ஓலைவேய்ந்த கூரையால் ஆனது. இத்தகைய அமைப்புடைய குமரி மாவட்ட கருவறை இது ஒன்றுதான். பழமையையும் மரபையும் பாதுகாப்பதன் தொடர்ச்சி. மூலவர் ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகர். இது கல்படிமம். இது சுயம்புவாக உருவானது என்பது ஐதீகம்.

அனந்தகிருஷ்ணன் கோவில் கருவறை அந்தராளம், அர்த்தமண்டபம் என அமைந்தது. அர்த்தமண்டபத்தில் இருந்து பக்தர்கள் வழிபடலாம். கருவறை தெய்வமான அனந்தகிருஷ்ணன் தர்ணேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிமம். நின்றகோலம். ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகப்படத்துடன் காட்சியளிக்கிறார்.

இடுப்பிலிருந்து நாகம் தலைக்கு மேல் படத்துடன் நிற்கிறது. இவரின் இடது வலது புறங்களில் பத்மாவதி அம்பிகாபதி யட்சிகன் நின்ற கோலம். மூன்று தலை நாகம் இவர்களின் தலைமேல் உள்ளது. வலது கை மலர், இடது கை லோலாஹஸ்தம், இப்போது இவர்கள் பாமா-ருக்மணி. நாகராஜர் கருவறைக்கும் அனந்தகிருஷ்ணனின் கருவறைக்கும் இடைப்பட்ட சிறிய கோவிலில் சிவன் இருக்கிறார். இங்கு சிவன் ஆவுடையில் லிங்க வடிவில் இருக்கிறார், கல் படிமம். எதிரே நந்தி உண்டு.

கொடிமரத்தில் ஆமை

இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது.

அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும். பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.
Tags:    

Similar News