ஆன்மிகம்
சித்திரகுப்தர்

நன்மைகள் அருளும் நயினார் கோவில்

Published On 2020-02-06 01:40 GMT   |   Update On 2020-02-06 01:40 GMT
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்தில் சித்திரகுப்தருக்கு சிறிய கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
எமதர்மராஜனின் தலைமைக் கணக்காளரான சித்திரகுப்தரின் அவதாரம் குறித்து, புராணக் கதைகள் பலவுண்டு.

கயிலையில் பரமேஸ்வரன், பார்வதியுடன் அளவளாவிக் கொண்டிருந்த சமயத்தில், பிரம்மா, திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அங்கு வந்தனர். அவர்களில் தர்மத்தின் காவலரான எமனின் முகம் வாடியிருந்தது.

இதனைக்கண்ட ஈசன், “முக வாட்டத்திற்கான காரணமென்ன?” என்று வினவினார்.

அதற்கு எமதர்மராஜா, “சுவாமி! என்னுடைய பணியில், பாரம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. உயிர்களின் பாவ - புண்ணியக் கணக்கை நான் ஒருவனே கணக்கிட வேண்டியுள்ளது. பூலோகவாசிகளின் காலம் முடிந்துவிட்ட போதிலும், அவர்களின் உயிர்களை எமலோகத்துக்கு எடுத்துச்செல்ல, அவர்கள் விவரங்கள் எதுவுமில்லை. எனவே, எனக்கு உதவியாக, பாவ - புண்ணியக் கணக்குகளை முறையாகவும், ரகசியமாகவும் பார்க்கத் தெரிந்த ஓர் உத்தமன் இருந்தால், நான் நிம்மதியாக இருப்பேன்” என்றார்.

“நேரம் வரும்போது உன் கோரிக்கை நிறைவேறும்” என்று ஈசன் அருளினார். அதற்கான காலம் விரைவிலேயே கனிந்தது. அகலிகையின் சாபத்தால், இந்திரனுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனது. இதனால் வருத்தமுற்ற இந்திரன், சிவபெருமானை வேண்டினான்.

ஈசனோ, “பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது” என்றார். அப்போது அருகில் இருந்த பார்வதிதேவி, எமதர்மனுக்கு ஈசன் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார்.

எமதர்மன், இந்திரன் இருவரது கோரிக்கையையும் நிறைவேற்ற ஒரு காரியம் செய்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனைப் புகச்செய்து, பசுவுக்கு குழந்தையாகப் பிறக்கச் செய்தார். அத்துடன், “சித்திரகுப்தனை விரதம் இருந்து வணங்கினால், அவர்களின் பாவச்சுமை குறையும்” என்று அருள்புரிந்தார். இந்திரனும் இந்திராணியும் பெருமகிழ்வு கொண்டனர். பிறக்கும்போதே கையில் ஏடு, எழுத்தாணி என்று கணக்கர் பதவியுடன் அவதரித்தவர், சித்திரகுப்தர்.

ஈசன் அளித்த வரத்தின்படி, உயிரினங்களின் பாவ - புண்ணியக் கணக்குகளைப் பதிவுசெய்து, பராமரிக்கும் பொறுப்பை ஏற்று, பணியைத் தொடங்கினார் சித்திரகுப்தர். பவுர்ணமிதோறும் ஜீவன்களின் பாவ - புண்ணிய விவரங்களை எழுதிவருகிறார் என்பது ஐதீகம். ஆதலால், சித்திரகுப்தர் அவதரித்த சித்திரா பவுா்ணமியன்று விரதமிருந்து வழிபட்டால், ஒருவர் செய்த பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் பெருகி, எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்னொரு புராணக்கதை. உமையவள் ஒருமுறை விளையாட்டாக ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த எம்பெருமான், “ஓவியம் மிகவும் அழகாக, தத்ரூபமாக இருக்கிறதே” என்று பாராட்டினார். உடனே, ஓவியத்தை உயிர்ப்பிக்கும்படி பார்வதி வேண்டினார். தம் பத்தினி சொல்வதை மறுக்க இயலாத, இளகிய மனம் கொண்ட இறைவன், “சித்திர புத்திரனே வா” என்று பார்வதி வரைந்த ஓவியத்தைப் பார்த்து அழைத்தார். அக்கணமே ஓவியம் உயிர்பெற்றது. அதிலிருந்து ‘சித்திரகுப்தர்’ தோன்றினார். சித்திரகுப்தனுக்கு ஏதாவது பொறுப்பு தரவேண்டும் என்று தேவி கேட்க, எமதர்மராஜன் முன்பு வேண்டியது நினைவுக்குவர, எமதர்மராஜாவின் தலைமைக் கணக்காளராக நியமித்தார்.

நவக்கிரகங்களுள் கேதுவுக்கு அதிபதியாகவும் சித்திரகுப்தர் விளங்குகிறார். ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல் உபாதை, நிம்மதியின்மை, சொத்துத் தகராறு போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம்.

சித்திரகுப்தருக்கு இந்தியாவில் 11 இடங்களில் தனிக்கோவில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் அனைவரும் அறிந்ததுதான். இது தவிர திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்திலும் சிறிய கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. இவ்வாலயத்தை ‘நயினார்கோவில்’ என்று இப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

சித்திரகுப்தர் அவதரித்த நாளில், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கனிகள், தானியங்கள், பழங்கள், கிழங்குகளை சித்திரபுத்திர நயினாருக்குப் படைத்து மகிழ்கின்றனர். இனிப்புப் பலகாரங்கள், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஒரு வாரம் விரதமிருந்து, மூன்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரண்டு மல்லிகைப்பூ மாலை அல்லது ரோஜாப்பூ மாலை அணிவித்து, தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்து, நான்காவது வாரம் பொங்கலிட்டு வழிபட பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ தொலைவில், தென்காசி செல்லும் மெயின் ரோட்டிலுள்ள சிறு நகரம் ஆலங்குளம். இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது நல்லூர் கிராமம். இங்கு வைத்திலிங்க சுவாமி கோவில் முன்புள்ள நயினார் தெருவில் சித்திரகுப்தர் கோவில் இருக்கிறது. ஆலங்குளத்தில் இருந்து பேருந்து, சிற்றுந்து வசதிகள் உள்ளன.

கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்
Tags:    

Similar News