ஆன்மிகம்
தோரணமலை முருகன் கோவில்

தோரணையாக வாழ வைக்கும் தோரணமலை முருகன் கோவில்

Published On 2020-02-04 01:33 GMT   |   Update On 2020-02-04 01:33 GMT
திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர்.
முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கும் மலை தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. இந்த மலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான். இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமையும், மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரணையாக வாழ தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

அதுவும் இவரிடம் மலை ஏறி வந்து யார் ஒருவர் கண்ணீர் விட்டு தமது கோரிக்கைகளை வைக்கிறாரோ, அவரை தோரணமலை மேலும் அழவிடுவதில்லை.

உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான். அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார். எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார்.

தோரணமலையில் பச்சை பசேவென விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார். அந்த தகவல்களை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார். அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது.

அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார்.

இதன் காரணமாக தோரணமலை, அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது. நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப் போனது. மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்? மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுளம் கொண்டான். தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்தபெருமாள் என்பவர் கனவில் தோன்றினார்.
“நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான்.

மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார். அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார்.

பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் சிலைடு மூலம் தோரணமலை முருகன் பற்றிய தகவலை பரப்பினார். இதையடுத்து மக்கள் சாரை, சாரையாக தோரணமலைக்கு வரத்தொடங்கினார்கள். பக்தர்கள் வசதிக்காக அவர் தோரணமலை உச்சிக்கு செல்ல சுமார் 1000 படிகள் கொண்ட படியை ஏற்படுத்தினார். சுனைகளையும் மேம்படுத்தினார்.

தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை முருகன் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தன்னலமற்ற பணியில் “தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது. சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடக்கின்றன.

திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது. பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும். முருகனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் ஒருங்கேப் பெறவே முக்கிய நாட்களில் இங்கு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தைப்பூசம் இந்த புராணமலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

மலைஉச்சியில் மின்சாரம், குடிநீர், கழிவறை ஆகிய மூன்று முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறையாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். முருகப்பெருமான் அருளால் மூழ்கியுள்ள இந்த மலைத்தலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் படிக்கட்டுகள் சிதிலமடைந்து விட்டன. சில இடங்களில் மலை ஏற முடியாத அளவுக்கு உள்ளன.

அதுபோன்று இந்த ஆலயத்தில் கழிவறை வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை. 55 ஆண்டுகள் இறைபணி செய்து முருகனுடன் ஆதி நாராயணன் ஐக்கியமாகிவிட்டதால் அவரது மகன் கே.ஏ.செண்பகராமன் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் விழா பணிகளை திறம்பட மேற்கொள்ள அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.

தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 9965762002 என்ற எண்ணில் பெறலாம்.
Tags:    

Similar News