ஆன்மிகம்
திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்

கவலைகளை அகற்றும் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்

Published On 2020-01-25 04:51 GMT   |   Update On 2020-01-25 04:51 GMT
திருச்செந்தூரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப்பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.
முருகப்பெருமான், அசுரர்களுடன் மூன்று விதமாக போர் செய்தார். நிலம், கடல், ஆகாயம் ஆகிய மூன்று பகுதிகளில் அவர், சூரபதுமர்களை வெற்றிகொண்டார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் நின்றும், திருச்செந்தூரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப்பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

முருகப்பெருமான் போரிட்டபோது, அசுரர்கள் தங்களின் மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் முருகப்பெருமான் கண்டறிந்தார். மறைந்திருந்த அசுரர்கள், அவரது கண்களில் அகப்பட்ட இடமே இன்னும், ‘கண்ணகப்பட்டு’ என்ற ஊராக, திருப்போரூர் அருகே உள்ளது. இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி ஆலயத்தை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த சிதம்பர சுவாமிகளின் திருமடம் இருக்கிறது.

மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர், சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சி- சொக்கநாதரை அனுதினமும் தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார். ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் இருந்தபோது, அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, “மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்கக் கடலோரம் ‘யுத்தபுரி’ என்னும் தலம் உள்ளது. அங்கே குமரனின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபடு. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் முன்ஜென்ம வினைகளும்,தோஷங்களும் அகன்று சகல நன்மைகளும் கிடைக்கும்” என்று அருளி மறைந்தார்.

மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்த சிதம்பர சுவாமிகள், இறுதியில் யுத்தபுரி என்னும் திருப்போரூரை அடைந்தார். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்றப் பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில், சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமானைக் கண்டார். அந்த சுயம்பு முருகப்பெருமானை விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார்.

ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீகச் சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, சிதம்பர சுவாமிகள் நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப், திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ எனும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். கருவறையில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜெபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில், வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.

மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார். கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் காணப்படுகின்றன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

உபதேச மூர்த்தி


சிவபெருமானது மடியில் இருந்து அவரது திருமுகத்தைப் பார்த்தபடி முருகப்பெருமான் அமர்ந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புதத் திருவடிவம் இங்கு இருக்கிறது. இந்த உபதேசமூர்த்திக்கு மரிக்கொழுந்து சாத்தி நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு நடக்கும் மாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழாவில், உபதேச மூர்த்தியாய் உள்ள உற்சவர் வெளியே கொண்டு வரப்படுவார். அவரை பதினாறு கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, முருகப்பெருமான் சுவாமிமலையில் நிகழ்த்திய அப்பனுக்கு பாடம் சொன்ன நிகழ்வு இங்கும் நடத்தப்படும். பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கூறி மீண்டும் படைப்புத் தொழில் பிரம்மாவிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம்

ஆலய உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் ஸ்தாபித்த யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் உள்ளது. இதில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா என்ற சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இந்தச்சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிடைக்கும்.

அமைவிடம்

மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும், சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும் திருப்போரூர் திருத்தலம் அமைந்துள்ளது.

சிவ.அ.விஜய் பெரியசுவாமி
Tags:    

Similar News