ஆன்மிகம்
திருவானைக்காவல் திருத்தலம்

பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரித்தான திருவானைக்காவல் திருத்தலம்

Published On 2020-01-09 01:31 GMT   |   Update On 2020-01-09 01:31 GMT
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.
துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே'

என்கிறார் அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசர். ‘துன்பமும் துயரமும் இன்றி, என்றும் குன்றாத இன்பத்தை விரும்புவீா்களேயானால், இரவு - பகல் எப்பொழுதும் திருஆனைக்காவல் அண்ணல் ஜம்புகேஸ்வரரை வழிபடுவீராக’ என்பது இதன் பொருள்.

நமது உடலில் நவ துவாரங்கள் எனப்படும் ஒன்பது வாசல்கள் உள்ளன. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றி, பின் துன்பத்தைத் தருவதாகும். எனவே துன்பமும் துயரமும் இன்றி என்றும் நிலையான இன்பத்தை பெற நினைக்கும் மனிதன், தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டும்.

இதை எடுத்துணர்த்தும் விதமாகத்தான் திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருவறை எதிரில் வாசல்கள் கிடையாது. அதற்குப் பதிலாக ஒன்பது துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்களே காணப்படுகின்றன. இதனை ‘திருச்சாலகம்’ என்கிறார்கள். பக்தர்கள் இந்த ஒன்பது துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

ஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். இங்குள்ள மூலவர் சன்னிதி, சிறிது சிறிதாக கீழே இறங்கி, தரைமட்டத்துக்கும் கீழே அமைந்துள்ளது. இங்கு கருவறைக்குள் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. ஆம்! இத்தல சிவலிங்கமே, காவிரி நீரால் உருவாக்கப்பட்டதுதான் என்கிறது தலபுராணம்.

அதனால்தான் இத்தலம் பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரித்தானதாக குறிப்பிடப்படுகிறது. ஐப்பசி மாதம் என்பது மழைக் காலம். இந்தக் காலத்தில் ஈசனின் கருவறைக்குள் அதிக ஈரம் கசிந்து அதிகமான நீர் சுரப்பதால் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று செய்ய வேண்டிய அன்னாபிஷேகத்தை, இந்தத் திருத்தலத்தில் மட்டும் வைகாசி பவுர்ணமியன்று செய்கிறார்கள்.

ஒருமுறை தியானத்தில் இருந்த ஈசனிடம், அன்னை உமையவள் தமக்கு யோகத்தையும், போகத்தையும் போதித்தருளுமாறு வேண்டுகிறாள். உடனே ஈசன், “உமையவளே, பூமியின் நடுப்பாகத்தில் காவிரிக் கரையோரம் உள்ள ஞானபூமியை அடைந்து தவமியற்று. அங்கு யாம் வந்து உரிய காலத்தில் உபதேசம் அருள்வோம்” என்றுரைத்தார்.

அதன்படி அன்னை உமையவள் கொள்ளிடத்துக்கும், காவிரிக்கும் இடையில் அமைந்த வெண் நாவல் மரங்கள் நிறைந்த, இத்தலத்தை அடைந்து காவிரி நீரைத் திரட்டி லிங்கத் திருஉருவம் அமைத்து தவமியற்றி வந்தாள். எனவே இத்தல ஈசனுக்கு ‘நீர்த்திரள் நாதர்’ எனும் திருப்பெயரும் உண்டு. உமையவளின் தவத்திற்கு இரங்கி அந்த நீர் லிங்கத்திலேயே திருக்காட்சி கொடுத்து, யோக - போக தத்துவத்தை போதித்தார் சிவபெருமான்.

சிவபெருமான் குருவாகவும், உமையவள் மாணவியாகவும் இருந்து இங்கு உபதேசம் பெற்றதால், இத்தல அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கும், இத்தல மூலவர் ஜம்புகேஸ்வரருக்கும் திருமண வைபவம் நடத்தப்படுவது இல்லை. அதுபோல இங்கு தினமும் பள்ளியறைக்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளுவதற்குப் பதிலாக, மீனாட்சி - சொக்கரே எழுந்தருள்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ்வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்யும் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

பவுர்ணமி தோறும் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னிதியில் உள்ள மகா மேருவிற்கு ‘நவாவரண பூஜை’ சிறப்பாக நடக்கிறது. 51 சக்தி பீடங்களில் ‘ஞானசக்தி பீடம்’ எனும் வராஹி பீடத் தலமாக இத்தலம் விளங்குகிறது. இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் காலையில் லட்சுமியாகவும், பகலில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும், இரவில் வராஹியாகவும் திருக்காட்சித் தருகிறாள்.

தல வரலாறு

முற்காலத்தில் காவிரியின் ஓரத்தில் வெண்நாவல் மரத்தின்கீழ் இருந்த சிவலிங்கத்திற்கு, சிலந்தி ஒன்றும், யானை ஒன்றும் அனுதினமும் பூஜை செய்து வந்தன. சூரிய வெப்பம் சிவலிங்கத்தின் மீது விழுவதை தடுக்கவும், நாவல் இலை சருகுகள் விழாதிருக்கும் பொருட்டும் சிலந்தி தனது வாயால் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வலை பின்னியது.

அதே நேரத்தில் யானை, தனது துதிக்கையில் காவிரிநீர் எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. யானை அபிஷேகம் செய்யும்போது, சிலந்தியின் வலையை பிய்த்து எறிந்துவிடும். இதனால் கோபம்கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாமல் பிளிறிக்கொண்டே யானை தனது தும்பிக்கையை தரையில் ஓங்கி அடித்தது. இதனால் சிலந்தியும், யானையும் மடிந்தன. யானை பின்னாளில் சிவகணங்களின் தலைவன் ஆகியது. சிலந்தியோ மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்ததாக தல வரலாறு கூறுகிறது.

முற்பிறவி நினைவால் அரசனாக இருந்த கோச்செங்கட் சோழன், யானை புக முடியாத வாசல் கொண்ட மாடக்கோவில்களை சிவபெருமானுக்காக எழுப்பினான். அப்படி அந்த மன்னன் கட்டிய முதல் திருக்கோவில் திருவானைக்கா எனும் திருவானைக்காவல் திருத்தலமாகும். யானை இங்கு சிவலிங்கத் திருமேனியைக் காத்து நின்று முக்தி அடைந்ததால் இத்தலம் திருவானைக்காவல் என்றானது.

இங்கு ஈசன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். இத்தல ஜம்புகேஸ்வரரை 11 முறை வலம்வந்து வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது. வல்வினைகள் எனும் பாதகங்கள், கிரக தோஷ கெடு பலன்கள், உடல் நோய்கள், வறுமை, பாவங்கள் விலகிச் செல்ல ஜம்புகேஸ்வரரை வலம்வந்து வழிபட வேண்டும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு, சிவபெருமானே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து, திருநீற்றை கூலியாகக் கொடுத்ததாகவும், அது பின்னர் அவரவர் உழைப்புக்கு ஏற்ற வகையில் தங்கமாக மாறியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இதனால்தான் இத்தல நான்காவது திருச்சுற்று மதிலை ‘திருநீற்றான் மதில்' என்று அழைக்கிறார்கள். மாதந்தோறும் பவுர்ணமி நாளின் அந்திப் பொழுதில் இந்த திருநீற்றான் மதிலை, திருமுறைகளை பாராயணம் செய்தபடி வலம் வந்து வழிபடும் ‘திருநீற்றான் மதில் வலம்' வரும் நிகழ்வு இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அமைவிடம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.

சிவ.அ.விஜய் பெரியசுவாமி
Tags:    

Similar News