ஆன்மிகம்
கோவில் தோற்றம்

வேண்டிய வரங்களை அருளும் ஆதி சாஸ்தா கோவில்

Published On 2020-01-02 01:32 GMT   |   Update On 2020-01-02 01:32 GMT
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறைக்கு மேற்கூரை இல்லை. அதற்குப் பதிலாக சிலந்தி வலை போன்று, கூம்பு வடிவம் கொண்ட ஒரு திரை அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

அனந்தன் காடு என்று அழைக்கப்பட்ட திரு வனந்தபுரம் பகுதியை, கர மகாராஜா என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அந்தப் பகுதியில் பல கோவில்கள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட கோவில்களுள், கரமனை சிலந்தி வலை சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு முறை கர மகாராஜா மாலை வேளையில் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தது. அதன் கீழ் பகுதியில் சாஸ்தா சிலை ஒன்று இருப்பதை கர மகாராஜா கண்டார். அந்தச் சிலையை ஊருக்குள் எடுத்துச் சென்று, அந்த சாஸ்தாவிற்குத் தனி கோவில் கட்ட வேண்டுமென்று நினைத்தபடி அங்கிருந்து திரும்பினார். காலையில் எழுந்ததும் தனது படை வீரர்களை அனுப்பி, அந்த சாஸ்தா சிலையை ஊருக்குள் எடுத்து வரச் சொல்ல வேண்டுமென்று நினைத்தபடி தூங்கினார்.

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, “அரசனே, காட்டுக்குள் இருக்கும் என்னை ஊருக்குள் கொண்டு வந்து கோவில் கட்ட வேண்டாம். நான் தற்போதிருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த இடத்திலேயே கோவில் கட்டி வழிபடலாம். என் கோவிலுக்குக் கூரை எதுவும் அமைக்க வேண்டாம். எனக்கு வானமே பரந்த வெளியாக இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

மறுநாள் காலையில் கண் விழித்த அரசன், சாஸ்தா கனவில் சொன்னபடி, அந்த இடத்திலேயே ஒரு கோவிலைக் கட்டினார் என்றும், சாஸ்தா விருப்பப்படி அந்தக் கோவிலுக்கு மேற்கூரை அமைக்கப்படவில்லை என்றும் இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவில் கருவறைக்கு மேற்கூரை இல்லை என்றாலும், சிலந்தி வலை போன்று கூம்பு வடிவ அமைப்பில் விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கருவறையின் நான்குபுறச் சுற்றுச் சுவர்களிலும் ஜன்னல் அமைக்கப்பட்டு, சாஸ்தாவை நான்கு புறத்திலிருந்தும் பக்தர்கள் காண வசதி செய்யப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களில், இந்த ஆலயம் மிகவும் பழமையானது ஆகும். எனவே இத்தல சாஸ்தாவை, ‘ஆதி சாஸ்தா’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் சாஸ்தா சிலந்தி வலையின் கீழ் இருந்து கிடைத்ததால், ‘சிலந்தி வலை சாஸ்தா’ என்றும் அழைக்கப்படு கிறார்.

இந்த ஆலயத்தின் வளாகத்தில் கணபதி, பகவதி யட்சி ஆகியோருக்கான சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இங்கிருக்கும் அரச மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றும், நாக தெய்வங்களும் நிறுவப்பட்டிருக்கின்றன.

இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ‘சாஸ்தா பாட்டு’ நடத்தப்பெறுகிறது. இந்த திருத்தலத்தில் சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாளில் தொடங்கி, 41 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பெறுகிறது. மண்டல பூஜை நிறைவு நாளில், கரமனை ஆற்றில் சாஸ்தாவிற்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது.

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த சாஸ்தா கோவிலை, சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்றே கருதுகின்றனர். சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டிக் கொண்டு போவதைப் போன்று, இந்தக் கோவிலுக்கும் பக்தர்கள் பலர், இருமுடி கட்டி வந்து, இங்கிருக்கும் சாஸ்தாவிற்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அனைத்து மலையாள மாதப் பிறப்பு நாட்களிலும் இங்கிருக்கும் சாஸ்தாவிற்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இப்பகுதியில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி களுக்கான அழைப்பிதழை, முதலில் இந்த சாஸ்தா கோவிலில் வைத்துதான் வழிபாடு செய்கின்றனர். அதன் பின்னரே, அழைப்பிதழை உறவினர் மற்றும் நண்பர்களுக்குக் கொடுக்கின்றனர்.

இக்கோவில் சபரிமலையைப் போன்றது என்பதால், சபரிமலைக்குச் சென்று அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும், இக்கோவிலில் வழிபட்டு அடையலாம் என்று இந்த ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனை பகுதியில் இருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான நகரப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேனி மு.சுப்பிரமணி
Tags:    

Similar News