ஆன்மிகம்
வள்ளி-தெய்வானை சமேத குமரன்

ஜெர்மனியில் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில்

Published On 2019-12-05 01:32 GMT   |   Update On 2019-12-05 01:32 GMT
ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால், உடைமைகளை இழந்து, உயிரைக் காத்துக் கொள்ள வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள், அவரவர் வசதிக்கேற்ப பல்வேறு நாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். பல்வேறு கடல்களைத் தாண்டி, ஐரோப்பிய மண்ணில் காலடி வைத்தவர்களும் இதில் அடக்கம்.

இப்படி குடியேறி, ஜெர்மனிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்தது, ஜெர்மானிய அரசு. தாயகத்தையும், தங்கள் உறவுகளையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் தேடி தவித்து, முடிவில் இறைவழிபாட்டின் பக்கம் கவனம் செலுத்தினர். அதன்மூலம் நிம்மதியைத் தேடினர். அப்படி அமைந்த ஆலயமே கும்மர்ஸ்பர்க் நகர குறிஞ்சிக்குமரன் ஆலயம்.

இக்கோவிலின் தோற்றத்திற்கு நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில், கும்மர்ஸ்பர்க் நகரில் உள்ள மலை சார்ந்த பகுதி இயற்கையாகவே அமைந்தது. அரசு அனுமதியோடு மரங்களையும் தகரங்களையும் கொண்டு, எளிய வடிவில் குறிஞ்சிக்குமரன் ஆலயம் 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு மூன்று தேர்கள் உருவானது. இந்த ஆலயமே ஜெர்மனியில் முதன்முதலில் சூரசம்காரம், தேர் வீதிஉலா விழாக்கள் நடத்திய ஆலயமாகப் போற்றப்படுகிறது.

2005-ம் ஆண்டு தொழிற்சாலைகள் நிறைந்த ஓரிடம் சொந்தமாக வாங்கப்பட்டது. அதனை அடியார்கள் ஆதரவில், ஆலயத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டது. இதற்கு அரசின் அனுமதியும் முறையாகப் பெறப்பட்டது. கருவறை, விமானங்கள், சுதைச்சிற்பங்கள் உருவாக்கி, அவைகளுக்கு அழகிய வண்ணம் பூசப்பட்டது. 2006-ம் ஆண்டு குடமுழுக்கு விழா இனிதே சிறப்புடன் நடத்தப்பட்டது. தற்போது ஐந்துநிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

ஆலயத்தில் கொடிமரம், பலிபீடம், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத குறிஞ்சிக்குமரன், இவர்களோடு நவக்கிரகம், சனீஸ்வரர், பைரவர், நவவீரர்கள், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன. உற்சவர்களாக சண்முகர், சிவலிங்கம், அம்பிகை, சந்தானகிருஷ்ணன், நாகபூஷணி, முப்பெருந்தேவியார், சிவகாமி சமேத ஆனந்த நடராஜர், சந்திரசேகரர் முதலான மூர்த்திகளும் உள்ளன.

வருட உற்சவம், ஜூலை மாதத்தில் ஆடி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று உற்சவர்களைச் சுமந்து, மூன்று தேர்களும் வீதியுலா வருகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இது பெர்லினில் இருந்து 300 கிலோமீட்டர், பிரான்ங்பர்ட்டில் இருந்து 165 கிலோமீட்டர், சாவேரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்மர்ஸ்பர்க். விமான நிலையம் கலோன், மற்றும் டுசுல்டாப் ஆகும்.

பனையபுரம் அதியமான்
Tags:    

Similar News