ஆன்மிகம்
சாரங்கபாணி கோவில்

சொர்க்கவாசல் இல்லாத சாரங்கபாணி கோவில்

Published On 2019-12-03 01:26 GMT   |   Update On 2019-12-03 01:26 GMT
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சாரங்கபாணி கோவில் விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாரங்க ராஜாவை தரிசித்து வருகின்றனர்.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுவது கும்பகோணம் ஸ்ரீசாரங்க பாணி கோவில் ஆகும். கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் திருத்தேர், திருவாபரணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்று விளங்குவது வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.

இத்தலத்தில் இருகரத் துடன் எழுந்தருளியுள்ள மூலவர் (ஸ்ரீஆராவமுதனை ஏரார்கோலம் திகழக் கிடந்தாய்) என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை (நாற்றோளெந்தாய்) என்றும் நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்ததால் இத்தலம் உபயப்ரதான திவ்யதேசம் என்றும் அழைக்கப்படுகிறது.

பெரியாழ்வார் தனது திருப்பல்லாண்டு பதிகத்தில் “சார்ங்கமெனும் வில்லாண்டான் தன்னை” என்று பெருமாள் கையில் தரித்திருக்கும் சார்ங்கம் எனும் வில்லையும் வடக்கு பிரகாரத்தை “தூநிலா முற்றத்தே போந்து விளையாட” என்றும் மங்களா சாசனம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது

நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு கிடைப்பதற்கு இந்த எம்பெருமான் காரணமாயிருந்தார் என்பதனை திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் “அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை” என்றும் வைகுண்டத்தில் இருந்து திருத்தேருடன் எம்பெருமான் எழுந்தருளியுள்ள எழிலின் எடுத்துக் காட்டாக இத்தல கர்ப்பக்கிரகம் திருத்தேர் வடிவில் “திருவெழுகூற்றிருக்கை” எனும் ரதபந்தத்திலும் ஸ்ரீகோமள வல்லித் தாயார் அவதரித்த பெருமையினையும் பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்று திருக்குளத்தினையும் திருமங்கை யாழ்வார் தனது பாசுரங்களில் பாடியுள்ளார்

இக்கோவிலில் மூலவர்:- ஆராவமுதன்
தாயார்:- கோமளவல்லி நாச்சியார்
உற்சவர்:- சாரங்கபாணி , அபர்யாப்தாம்ருதன், உத்தானசாயி ஆகும்
உத்தானசாயி சயான கோலத்துடன் கிழக்கு திசையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சாரங்க ராஜாவின் கர்ப்பக்கிரகம் வைதிக விமானம் எனும் அமைப்பை உடையது.
தீர்த்தம்:- ஹேம புஷ்கரணி ஆகும்.

மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்:-

பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ் வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார். திருத்தலத்தில் உறையும் உற்சவரான இறைவன், சங்கு, சக்கரத்துடன், சாரங்கம் என்ற வில்லை ஏந்தியவாறு காட்சி தருகிறார். பாணி என்றால் “கையில் ஏந்தியவன்” என்று பொருள். இதன் காரணமாகவே இத்தல இறைவன் “சாரங்க பாணி”என்ற திருநாமம் பெற்றார்.

மேலும், “ஆராவமுதன்” என்ற திருநாமமும் உண்டு. “ஆராவமுதன்” என்பதற்கு “திகட்டாத அமுதம் போன் றவன்” என்று பொருள். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தாம் பாடிய திருவாய்மொழி பகுதியில் 10 பாசுரங்களில் “ஆராவமுதன்” என்ற திருநாமத்தைக் கூறியே “மங்களாசாசனம்“ செய்கிறார்.

தாயார் பிறந்த தலம்

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். இத்தலத்தைப் பொறுத்த வரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. “உங்கள் மார்பில் ஐக்கியமான என் மீது பிற ஆணின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே” என கோபப்பட்ட மகாலட்சுமி கணவரைப் பிரிந்தாள்.

இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எவரையும் காலால் உதைப்பது பாவம் என்கிறார்கள். ஏனெனில், உதைபட்டவர்களிடம் உள்ள திருமகள் கடாட்சம் அவரை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தாயாரை நோக்கி தனக்கு மகாலட்சுமி மகளாக அவதரிக்க வேண்டும் என தவமிருந்தார்.

அதற்கு மனமிரங்கிய மகாலட்சுமி தாயார் இங்குள்ள ஹேம புஷ்கரணியில் தாமரை மலரில் அவதரித்தாள். அவளுக்கு “கோமளவல்லி” என பெயரிட்டு வளர்த்து அவர் திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். திருமழிசை யாழ்வாருக்கு நேரில் காட்சி தந்து அவரது வேண்டு கோளுக்கிணங்கி சயனித்துள்ள மூலவர் சற்று எழுந்திருக்கும் நிலையில் உத்தானசாயியாய் கருவறையில் எழுந்தருளியிருப்பார்.

நடந்த கால்கள் நொந்தவோ
நடுங்கு ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ
விலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்
கரைக் குடந்தையுள்
கிடந்த வாறெ எழுந்திருந்து
பேசு வாழி கேசனே

ராம அவதாரத்தில், காடு, மலை, மேடுகளிலெல்லாம் நடந்து நடந்து கால்கள் நொந்தனவோ! அதனால் தான் சயனித் திருக்கிறீர்களோ! வராக அவதாரத்தில், பாதாள லோகம் சென்று பூமித்தாயை மீட்டுத் தாங்கி வந்தீர்களே! அதனால் களைப்போ! “பெருமாளே, ஏன் கிடக்கின்றீர்கள்? எழுந்து வந்து என்னோடு பேசுங்கள்” என்று மிகுந்த பணிவுடன் கேட்கிறார். அதனால், சகல லோகங்களும் அதிர “சாரங்கபாணி” சற்று எழுந்தார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை “உத்தான சயனம்“ என்பர். இத்தலம் நித்யவை குண்டம் , பூலோக வைகுண்டம் என போற்றப் படுகிறது.ஆகவே இத்தலத்தில் தனியாக சொர்க்கவாசல் (பரமபத வாசல் ) கிடையாது என்பது சிறப்பாகும்.

தேர் வடிவில் கருவறை

ஸ்ரீமந் நாதமுனிகள் இத்தலத்தில் பெருமாளைச் சேவிக்கும்போது பெருமாளை பற்றிப்பாடப்பட்ட ஆராவமுதே எனத் தொடங்கும் பத்து பாசுரங்களை கேட்டு அதில் ஊன்றி இருந்தார். அதில் ஓர் இடத்தில் நாலாயிரம் பிரபந்தங்களில் இது ஒரு பத்து என்னும் பொருளின்படிக் கேட்டு மற்ற பாடல்களின் விவரத்தை அறியும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போது பெருமாள் அவரது கனவில் தோன்றி நம்மாழ்வார் இருக்கும் இடமான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் பிரபந்தப் பாசுரங்களைப் பெறலாம் என்றார். அவ்வாறே ஸ்ரீமந்நாத முனிகள் நம்மாழ்வாரை சந்தித்து, வணங்கி நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகோர் அறியச் செய்தார் என்பது வரலாறு.
இங்குள்ள தாயார் உலா வராத நிலையில் இருப்பவராவார். எனவே அவரை படிதான் டாப் பத்தினி என்கிறார்கள்.

இத்தலத்தில் உத்தராயணவாசல் எனவும் தட்சிணாயன வாசல் எனவும் இரண்டு வாசல்கள் உள்ளன. அந்தந்த காலங்களில் அதற்குரிய வாசல் வழியே சென்று வழிபாடு செய்யப்படுகிறது. ராஜகோபுரம் 147 உயரத்துடன், 11 நிலைகளுடன் பிரமாண்டமாக உள்ளது. அதுபோல கருவறை தேர் வடிவில் இருப்பது ரசிக்கத்தக்கது. 12 ஆண்டுக்கு ஒரு தடவை சிம்மராசியில் மகம் நட்சத்தில் குரு வலம் வரும் போது மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாத வழிபாடு

சாரங்கபாணி கோவிலில் புரட்டாசி மாதத்தில் எல்லா நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். நீண்ட வரிசையில் நின்று சாரங்கபாணி- தாயாரை தரிசித்து விட்டு செல்வார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சாரங்கபாணி கோவில் விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாரங்க ராஜாவை தரிசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News