ஆன்மிகம்
சித்தி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான்

இங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம்

Published On 2019-12-02 01:24 GMT   |   Update On 2019-12-02 01:24 GMT
இங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது
இங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியப் பகுதியைச் சேர்ந்த குஜராத்தியினரும், தமிழர்களும் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதியின் கடை வீதியில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையில் இருந்து அரை பர்லாங்கு துரத்தில் கந்தக் கடவுள் கோவில் கொண்டுள்ளார்.

இந்தத் திருக்கோவிலில் கொடிமரமும், அதன் அடியில் ஸ்தம்ப விநாயகரும், அருகில் பலிபீடமும் இருக்கிறது. அடுத்தாற் போல் உள்ள மயில் வாகனத்தின் எதிரே கிழக்கு நோக்கிய தனி விமானத்தின் கீழ் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் ஒரு கரத்தில் வேலும், மறுகரத்தில் சேவற்கொடியும் தாங்கி புன்னகை மின்ன நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகப்பெருமானின் வலப் புறம் நீலோற்பல மலர் ஏந்தியபடி வள்ளியம்மையும், இடப்புறம் தாமரை ஏந்தியபடி தெய்வானை அம்மையும் இருக்க தம்பதியராக அருள்புரிகிறார்கள்.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் மூல முதற்கடவுளான விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். சித்தி விநாயகர் என்ற பெயர் கொண்ட இவர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். மூலவர் முருகனுக்கு வலதுபுறம் தனிச் சன்னிதியில் காசி விஸ்வநாதர், லிங்கத் திருமேனியில் அருள்காட்சி தருகிறார். அவருக்கு அருகில் விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானின் ஆலயத்தின் அம்மையப்பனும் அருகில் இருந்து காட்சி தருவதால், இத்தல மூலவரை ‘சிவ முருகன்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

மூலவரின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கியபடி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தட்சணாமூர்த்தி சுவாமி அருளாசி வழங்குகிறார். பிரகாரத்தில் வடதிசை நோக்கி சூலமேந்திய துர்க்கா தேவி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா். வடபுறச் சுற்றில் ஐயப்பன் ஒரு கோவிலில் காட்சி தருகிறார். வண்ணமயமான வசந்த மண்டபத்தில் அனைத்து தெய்வங்களின் உற்சவ மூர்த்தங்களும் மின்னுகின்றன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் ஆயுதம் ஏந்தி தங்கள் மனைவியுடன் தோன்றுவது எங்குமில்லாதச் சிறப்பு. மேற்கு நோக்கி பைரவர் காட்சி தருகிறார்.

இந்தத் திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் மூலவர் முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுவதுடன், ஆறாம் நாள் திருச்செந்தூர் கடற்கரையிலும், மற்ற ஆலயங்களிலும் நிகழ்வது போன்று சூரசம்கார நிகழ்ச்சி கண் நிறைந்த காட்சியாக பக்திப் பரவசத்துடன் நடத்தப்படுகிறது. கந்த சஷ்டிக்கு மறுநாள் சீர்வரிசை எடுத்து நலங்கு பாடி முருகனின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் பத்து நாள் விழா நடத்தி, விசாக நாளில் தேரோட்டம் நடைபெறுவது அனைத்து மக்களையும் கவர்கிறது.

திருக்கார்த்திகை அன்று ஒளிவிளக்கு ஏற்றி சொக்கப்பனை கொளுத்துகிறார்கள். சதுர்த்தியில் விநாயகருக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்தத் தலத்தில் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கும் நவக்கிரகங்களுக்கு, அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ற நாட்களிலும், கிரக பெயர்ச்சி காலங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

டாக்டர் ச.தமிழரசன்
Tags:    

Similar News