ஆன்மிகம்
தர்ம சாஸ்தா, கோவில் தோற்றம்

மூலிகை எண்ணெய் வழங்கும் தர்ம சாஸ்தா ஆலயம்

Published On 2019-11-29 01:30 GMT   |   Update On 2019-11-29 01:30 GMT
உடல் வலிமைக்குத் தேவையான பல்வேறு மூலிகைகள் கலந்த மருத்துவ எண்ணெய் வழங்கும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தகழியில் அமைந்திருக்கும் தருமசாஸ்தா (ஐயப்பன்) கோவில் இருந்து வருகிறது.
உடல் வலிமைக்குத் தேவையான பல்வேறு மூலிகைகள் கலந்த மருத்துவ எண்ணெய் வழங்கும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தகழியில் அமைந்திருக்கும் தருமசாஸ்தா (ஐயப்பன்) கோவில் இருந்து வருகிறது.

தல வரலாறு

கேரளாவைத் தோற்றுவித்த பரசுராமர், கேரளப் பகுதி முழுவதும் 108 கோவில்களை நிறுவி வழிபட்டிருக்கிறார். அவர் நிறுவிய 108 கோவில்களுள் ஒதர்மலை எனும் மலையின் மேற்பகுதியில் அமைந்த சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருந்தது. பிற்காலத்தில் அந்தக் கோவிலில் வழிபாடுஇல்லாமல் போனது.

ஒரு முறை அதிக மழை பெய்த போது ஏற்பட்ட வெள்ளத்தால், அந்தக் கோவில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. அந்தக் கோவிலின் கருவறையில் இருந்த சாஸ்தா சிலை மழை நீரால் கீழே இருந்த பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. தரைப்பகுதியில் இருந்த புதைகுழி ஒன்றில் அந்தச் சிலை சிக்கிக் கொண்டது.

அந்த வழியாக வில்வமங்களம் சுவாமிகள் ஒரு முறை சென்று கொண்டிருந்த போது, ஓரிடத்தில் இருந்து தெய்வீக ஒளி வருவதைக் கண்டார். அந்த ஒளி வரும் இடத்தை நோக்கிச் சென்ற அவர், அங்கிருந்த புதைகுழியில் சாஸ்தா சிலை ஒன்று இருப்பதைக் கண்டார். அந்தச் சிலை பரசுராமர் நிறுவி வழிபட்ட சிலை என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.

அந்தப் பகுதியில் மந்திரவாதியாக இருந்த ஒடியன் என்பவரை உதவிக்கு அழைத்து, புதைகுழிக்குள் இருந்த சிலையை வெளியில் எடுத்துப் புனிதப்படுத்தி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார்.

இந்த ஆலயத்தில் உள்ள சாஸ்தா, புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டதால் ஆரம்ப காலகட்டத்தில் ‘பொதக்குழி சாஸ்தா’ என்றும், குழியில் புதையுண்டிருந்த சிலையை எடுக்க உதவிய ஒடியன் பெயரையும், முன்பிருந்த ஒதர்மலையையும் சேர்த்து, ‘ஒதரோடியன் சாஸ்தா’ என்றும் அழைத்து வந்தனர்.

சம்பகசேரி மன்னர் அந்தச் சிலை நிறுவப்பட்ட இடத்தில் ஒரு கோவிலைக் கட்டுவித்தார். அந்தக் கோவிலில் இருந்த சிலை சூரிய உதயத்தைப் போல் அதிக ஒளியைத் தந்ததால், அதனை மலையாளத்தில் ‘உதயர்க்கன் சாஸ்தா’ என்றழைத்தனர். பிற்காலத்தில் ஊர்ப் பெயரான தகழியுடன் சேர்த்து ‘தகழி தர்மசாஸ்தா’ என்றே அழைத்து வருகின்றனர்.

திருவிதாங்கூர் மன்னர் இந்தப் பகுதியைக் கைப்பற்றியதால், சம்பகசேரி மன்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார். அதன் பிறகு, அந்தக் கோவிலின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிப் போயின. அதனைக் கண்டு, அந்தக் கோவிலில் அனுதினமும் வழிபாடு செய்து வந்த ஆசான் என்ற பக்தர் வருத்தம் அடைந்தார். அவர் அந்த ஆலயத்தை எப்படியாவது புதுப்பித்து வழிபாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார்.

ஆனால், கோவிலைப் புதுப்பித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நிதி ஏதும் அவரிடம் இல்லாததால், தான் தினமும் வழிபட்ட சாஸ்தாவிடமே, கோவிலைப் புதுப்பித்துக் கட்டுவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு வழிகாட்டிட வேண்டுதல் வைத்து வந்தார்.

ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, அங்கிருக்கும் மலைப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் எண்ணெய்களைக் கலந்து புதிதாக ஒரு மருத்துவ எண்ணெய்யைத் தயாரிக்க அவருக்குக் கற்றுக் கொடுத்தார். அந்த எண்ணெய்யை அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கோவிலைப் புதுப்பிக்கும்படி சொல்லிவிட்டு மறைந்தார்.

மறுநாள் காலையில், அங்கிருந்த மலைப்பகுதிக்குச் சென்ற ஆசான், சாஸ்தா கனவில் சொன்ன மூலிகைகளைப் பறிந்து வந்து, அதனுடன் சாஸ்தா தெரிவித்த சில எண்ணெய்களைக் கலந்து புதிய மருத்துவ எண்ணெய் ஒன்றைத் தயாரித்து, அந்தப் பகுதி மக்களுக்கு வழங்கினார். அந்த மருத்துவ எண்ணெய் பல்வேறு வலிகளை நீக்கியதுடன் உடல் வலிமைக்கு உதவுவதாக அமைந்தது. அதன் மூலம் அவருக்குத் தேவையான வருவாயும் கிடைத்தது.

தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு, அங்கிருந்த சாஸ்தா கோவிலைப் புதுப்பித்துக் கட்டி மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வந்தார். மருத்துவ எண்ணெய் வழங்கி வந்த அந்த ஆசானை அப்பகுதியில் இருப்பவர்கள் ‘எண்ண வலியச்சான்’ (எண்ணெய் வலியச்சான்) என்று அழைத்தனர். பிற்காலத்தில் அக்கோவிலில் அவருக்கும் ஒரு சிலையமைத்து நிறுவப்பட்டது என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு


இக்கோவிலில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் கிழக்கு நோக்கிய நிலையில், வலது காலை மடித்தும், இடதுகாலைத் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது வலது கையில் சிறிய எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். இக்கோவிலில் சாஸ்தாவைத் தவிர்த்து வழிபாட்டுக்குரியதாக வேறு துணை தெய்வங்கள் எதுவும் இல்லை. இக்கோவிலில் ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. முதல்நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா, எட்டாம் நாளில் ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்களான 41 நாட்களும் இத்திருக்கோவிலில் ‘களமெழுத்துப் பாட்டு’ நடைபெறுகிறது. தனுர் (மார்கழி) மாதம் முதல் நாளில் தொடங்கி 11 நாட்களுக்குக் கலாபாபிஷேகம் எனும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலில் ஒதர்மலையில் இருந்து பறிக்கப்படும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வலி எண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ எண்ணெய் மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு வலிகளைக் குணப்படுத்துவதாக இருக்கிறது. எனவே, இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நோய்கள் அனைத்தும் மறைந்து உடல் வலிமை பெற்றிட வேண்டிச் செல்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சம்பக் குளம் வட்டம், தகழி எனுமிடத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலப்புழா நகரில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும், சம்பக்குளம் நகரில்இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது தகழி திருத்தலம். ஆலப்புழா, சம்பக் குளத்தில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேனி மு.சுப்பிரமணி
Tags:    

Similar News