ஆன்மிகம்
ஆலய தோற்றம், தங்க கவச அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்

கேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன் கோவில்

Published On 2019-11-26 01:38 GMT   |   Update On 2019-11-26 01:38 GMT
திப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.
திப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், விழாக் காலங்களில் தசாவதாரக் கோலம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம், மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் சூரியன் வழிபடும் கோவில் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.

புராண காலத்தில் ‘பத்மகிரி’, ‘திண்டீச்சுரம்’, ‘நெல்லிவனம்’ என்றும், தற்போது ‘திண்டுக்கல்’ என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில், காணப்படும் மலையானது திண்டு போல் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்தது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் நடுப்பகுதியில் அமைந்த நகரம் இது.

சேரமன்னன் தர்மபாலன், மலை மீது பத்மகிரி நாதருக்கும், அபிராம்பிகைக்கும், கோவில் எழுப்பி இருந்ததாகவும், இதனை கி.பி. 1538-ல் அச்சுத தேவராயர் புனரமைத்தார் என்றும் வரலாறு கூறுகிறது. கி.பி. 1605-ல் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலை மீது கோட்டை கட்டினார். திருமலை நாயக்கர் - ராணி மங்கம்மாள் திருப்பணிகள் செய்தனர். கி.பி. 1772-ல் ஐதர்அலியின் சகோதரர் மீர்சாகிப் மற்றும் ஆங்கிலேயர்களும் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.

தேவியின் சக்தி அம்சங்களில் ஒன்றான ரேணுகாதேவி, அக்னி வடிவானவள். ஜமதக்கினி முனிவரின் பத்தினியாக ரேணுகாதேவி விளங்கினார். அப்பகுதியை ஆண்ட கார்த்தவீர்யார்ச்சுனன், முனிவரிடம் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு முனிவர் மறுக்கவே, மன்னனும் அவனது மகன்களும் சேர்ந்து முனிவரை கொன்றனர். முனிவரின் சிதையில் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினாள்.

அப்போது ரேணுகாதேவியை காப்பதற்காக இந்திரன் வேண்டுதல்படி, வருணன் மழை பொழிந்து அக்னியை அணைத்தார். ஆனால் ரேணுகாதேவியின் ஆடைகள் எரிந்த நிலையில், அவர் வேப்பிலையை ஆடையாக அணிந்து கொண்டார்.

அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், “நீ மானிடப் பிறவியல்ல. என் தேவியின் அம்சங்களில் ஒன்றானவள். நீ இந்தப் பூவுலகில் வாழ்ந்து மக்களுக்கு ‘மாரியம்மன்’ என்ற பெயரில் அருள்புரிந்து மக்களைக் காப்பாயாக” என்றார்.

இப்படி உருவான தேவியே ‘மாரியம்மன்.’ இந்த அன்னைக்கு வேப்பிலை ஆடையே விருப்பம். அவள் புசித்த மாவெல்லம், இளநீர் பானகமும் ஆகியவையே நிவேதனம் பொருட்கள் ஆகும்.

திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த மாரியம்மன் என்பதால் அன்னைக்கு ‘கோட்டை மாரியம்மன்’ என்ற பெயர் வழங்கப்படலானது.

மலைக்கோட்டையின் கீழே கோட்டை குளத்திற்கு கிழக்கே கவாத்து மைதானத்தில், திப்புசுல்தான் காலத்தில் ராணுவத்தினரால் சிறுபீடமும், அதன்பின்புறம் மாரியம்மன் நிறுவப்பட்டு, ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தது. இதுவே இன்றைய கோட்டை மாரியம்மன் திருக்கோவிலாகப் புகழ் பெற்றுள்ளது. தொடக்கத்தில் வெறும் மண்ணால் கட்டப்பட்டு, பீடம் மட்டும் இருந்து வந்தது. இதனைப் புதுப்பித்து அம்மனின் சிலா வடிவம் அமைக்கப்பட்டது. தரையோடு இணைந்த அமைப்பாக இது காணப்படுகிறது.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அம்மன் சன்னிதியை ஒட்டி தெற்கே விநாயகர், கருவறையின் பின்புறம் தெற்கே முனீஸ்வரர், வடக்கே கருப்பண்ணசாமி வீற்றிருக்கின்றனர். நடுநாயகமாக அன்னை கோட்டை மாரியம்மன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த அன்னை வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கி, ஆவுடையார் பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். எட்டுக் கரங்கள் கொண்டு, வலதுபுறம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், இடதுபுறம் அரிவாள், வில், மணி, கிண்ணம் தாங்கி அன்னை அருள்பாலிக்கிறார்.

மார்ச் 9, 10, 11 மற்றும் அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் காலை 6.20 மணி முதல் 20 நிமிடம் சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை அம்மன் சிரசில் பதியச் செய்கிறார்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப் பட்டிருக்கும்.

அமைவிடம்

திண்டுக்கல் மலை அடிவாரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது. திண்டுக்கல்லுக்கு மதுரை, திருச்சி, பழனி, தேனியில் இருந்து ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

பனையபுரம் அதியமான்
Tags:    

Similar News