ஆன்மிகம்
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

Published On 2019-11-12 01:37 GMT   |   Update On 2019-11-12 01:37 GMT
ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் அல்லது திருப்பதிகளில் கோவில், திருமலை, “பெருமாள் கோவில்” என்ற மூன்றாம் இடமாக போற்றப்படுகின்ற பெருமையுடையது ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் அல்லது திருப்பதிகளில் கோவில், திருமலை, “பெருமாள் கோவில்” என்ற மூன்றாம் இடமாக போற்றப்படுகின்ற பெருமையுடையது ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில். ஸ்ரீ காஞ்சி வரதனின் தல புராணம் மிகவும் பழமைமானது, பிரசித்தமானது.

பிரம்மதேவன், பகவான் ஸ்ரீமந் நாராயணனை திவ்யமங்கள சொரூபத்துடன் சேவிக்கும் சங்கல்பத்துடன் “புஷ்கரம்” என்ற தலத்தில் வெகுகாலம் தவம் செய்தார். பகவான் பிரசன்னமாகித் தீர்த்த ரூபியாகக் காட்சி தந்தார். அந்தத் தீர்த்த ரூபத்தினால் திருப்தி ஏற்படாததால் பிரம்மன் மீண்டும் பகவானை எண்ணித் தவம் செய்யவே, பகவான் மறுபடியும் பிரசன்னமாகி “நைமிசாரண்யம்’’ என்ற ஆரண்ய ரூபமாகக் காட்சி தந்தார். எங்கும் நிறைந்து, எல்லாமுமாகிய எம்பெருமான் நீராய், நிலனாய் காட்சி தந்த போதிலும், பிரம்ம தேவனுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

சங்கு, சங்கரத்தோடு, திவ்ய மங்கள சொரூபத்தில் அச்சாரூபத்தில் பெருமாளின் திருமேனியை சேவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அத்தகு காட்சி தந்தருளும்படி பெருமானை மீண்டும் வேண்டி நிற்க, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால், தான் அவிர்பாகம் அடைந்து காட்சி தருவதாகச் சொல்லவே, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்வதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால் விரைவில் சுலபமாக அருளைப் பெறும் வழியைச் சொல்லும்படி பிரம்மதேவன் வேண்டினார்.

பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டு அகிலத்தையும் ஆட்கொள்ளும் கருணைக்கடல், கார்முகில் வண்ணன், கண்ணன் தன் பக்த வாஸ்லல்யத்தினால் பிரம்ம தேவனை சத்யவிரத சேத்திரம் என்றழைக்கப்படும் காஞ்சீபுரத்திற்குச் சென்று ஒரேயரு அஸ்வமேத யாகம் செய்யும்படி பணித்தார். இக்கருத்தை ஸ்ரீ தேசிகன் தமது வரதராஜ பஞ்ச சதிதோத்திரத்தில் துரக்ஹவன வேத்யாம் சியாமளோ ஹவ்யவாஹ என்றார்.

காஞ்சியில் செய்யும் புண்ணியம் எதுவாயினும், நூறு மடங்கு அதிகப் பலனைத் தரவல்லது என்று எடுத்துரைத்துத் தவம் புரிய நியமித்ததின் பேரில் பிரம்மதேவன் அத்திகிரியில் உத்திர வேதியில் யாகம் செய்தார். அந்த யாகத்தில் எம்பெருமான் அத்திகிரி நாதன் அர்ச்சாவதார மூர்த்தியாய்க் காட்சி தந்தருளினார்.

அக்னியிலிருந்து தோன்றிய வெப்பத்தால் உற்சவ மூர்த்தியின் திருமுகத்தில் ஏற்பட்ட வெப்ப வடுக்களை இன்னமும் காணலாம். பிரம்மாவினால் ஆராதிக்கப்பட்டு, அவிர்பாகம் அடைந்தபடியினால் இந்த “ஸத்யவிரத” சேத்திரத்திற்கு “காஞ்சீ” என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் சரஸ்வதியின் சாபத்துக்கு ஆளாகி, யானையாக உருவெடுத்த இந்திரன், இவ்விடத்தில் தவம்புரிந்து சாபவிமோசனம் பெற்றபடியால், இத்தலத்திற்கு “ஹஸ்திகிரி” என்ற பெயர் வந்ததாகப் புராணங்கள் புகலுகின்றன. ஹஸ்திகிரி அல்லது அத்திகிரி மூர்த்தியாய்த் தோன்றடியபடியால் இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு, “ஹஸ்திகிரிநாதன்” அத்திவரதன் என்றெல்லாம் பெயர் உண்டாயிற்று.

இப்பெருமான் தேவேந்திரனால் போற்றப் பெற்றதனால் தேவாதி ராஜன் எனவும், அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளி அனைவரையும் ஆட்கொண்டு அருள்பாலித்து வருவதனால் “பேரருளாளன்” எனவும், தன்னை அண்டியவர்களின் துயர்தீர்த்து ஆட்கொள்ளும் கருணைபடைத்தவன் என்பதனால் “பிரணதார்த்திஹரன்” எனவும், வேண்டுவன வழங்கும் வரதனாய்த் திகழ்வதால் “வரதராஜன்” எனவும் போற்றப் பெறுகிறார்.

இந்திரன் வரம் பெற்ற தலம்

காஞ்சீபுரத்தில் மட்டும் 14 திவ்விய தேசங்கள் உள்ளன. இத்தலம் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இங்கு ஆண்டாள், மணவாள நாச்சியார், கண்ணன், சக்கரத்தாழ்வார், கரியமாணிக்கப் பெருமாள், இராமர், பன்னிரு ஆழ்வார்கள், தேசிகர், வராகப் பெருமாள் உடையவர் முதலிய சன்னதிகள் உள்ளன.

ஐயராவதம் மலையுருவில் எம்பெருமானைத் தாங்கியதால் அத்திகிரி எனப்பட்டது. பிரமதேவன் செய்த வேள்வியில் புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளியதால் வரதராஜன் என்னும் பெயர் கொண்டார். பிருகு முனிவர், நாரதர், இந்திரன், ஆதிசேடன், சரஸ்வதி தேவி முதலியோர் இங்குப் பெருமாளை வழிபட்டுப் பேறுகளும், வரங்களும் பெற்றார்கள்.

ஹேமன், சுக்லன் ஆகியோர் பல்லிகளாக இருந்து இங்கு சாப விமோசனம் பெற்றார்கள். இங்கு தனி விநாயகர் சன்னதி வடக்கு நோக்கி உள்ளது. அனந்த சரஸ் தீர்த்தக் கரையின் கிழக்கே ஒரு பக்கம் சக்கரத்தாழ்வாரும், மற்றொரு பக்கம் நரசிங்க மூர்த்தியும் தனிச் சன்னதியாக உள்ளனர். உடையவருக்காகச் சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார் ஸ்ரீவரதராஜ தவம் அருளிச் செய்து இழந்த கண்களைப் பெற்ற தலம். திருக்கச்சி நம்பிகளுக்கு ஆறு வார்த்தைகளைக் கூறி உடையவர்தம் ஐயங்களைத் தீர்த்தருளிய பதி. இங்கு வைகாசி விசாகத்தன்று நடைபெறும் கருட சேவை தனிச் சிறப்புடையது. அனந்தசரஸ் என்னும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்துக்குள் அத்தி மரத்தாலான வரதராஜப் பெருமாள் மூர்த்தம் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப் பெற்று பத்து நாள்களுக்குச் சேவை சாதிக்கிறார்.

அத்திகிரி மலைக்கு நேர் கீழே உள்ள தனிச்சன்னதியில் குகையில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். மேலே பெருமாள் சன்னதிக்குச் செல்ல 24 படிகள் உள்ளன. இவை தேவ சிற்பியால் நிர்மாணிக்கப் பட்டவை. கோயில் என்றால் வைணவத் தலங்களில் திருவரங்கத்தைக் குறிக்கும். அதுபோல பெருமாள் கோயில் என்றால் இத்திருக்கோயிலைக் குறிக்கும்.

உலக புகழ்பெற்ற கருடசேவை

ஆதிசேஷன் இங்கு வந்து ஆண்டுக்கு இருமுறை (வைகாசி விசதாகம் ஆடி மாத வளர்பிறை தசமி) இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். இங்கு நடக்கும் கருட சேவை உலகப் புகழ் பெற்றது. ஒன்பது ஆழ்வார்கள் இந்தக் கோவிலை பாசுரம் செய்திருக்கிறார்கள். சோகங்கள் தொடர் கதையாகி துரத்தினாலும் புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டாலும் மரண பயணம் ஏற்பட்டு- மரணம் நெருங்குவதாக இருந்தாலும், நண்பர்களால், எதிரிகளால், கூடப் பிறந்தவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நிமிடமே இந்த எம்பெருமாளைச் சரண் அடைந்து விட்டால் «பாதும் பகவான் உங்களது அத்தனை இன்னல்களையும் பொடிப் பொடியாக்கிவிடுவார்.
Tags:    

Similar News