ஆன்மிகம்
கோவில் தோற்றம்

சர்வலோகநாத சுவாமி ஆலயம் - தஞ்சாவூர்

Published On 2019-11-07 01:43 GMT   |   Update On 2019-11-07 01:43 GMT
தஞ்சாவூர் மாவட்டம் மரத்துறை கிராமத்தில் உள்ளது, சர்வலோகநாத சுவாமி ஆலயம். இந்த கோவில் வரலற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் மரத்துறை கிராமத்தில் உள்ளது, சர்வலோகநாத சுவாமி ஆலயம். இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் ‘சர்வலோகநாத சுவாமி.’ அம்பாளின் திருநாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும்.

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத இந்தக் கோவிலுக்கு கிழக்கு, மேற்கு என இரு திசைகளிலும் வாசல்கள் உள்ளன. ஆனால் மேற்கு வாசலையே அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது. இக்கோவில் மிகவும் சிதிலமடைய தொடங்கிய போது ஊர் மக்கள் ஒன்று கூடி கோவிலை வண்ணமயமாக அற்புதமாக புதுப்பித்துள்ளனர்.

மேற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்து கிழக்கு திசைக்கு வருவோம். கிழக்கு வாசலின் எதிரே பலிபீடமும், நந்தியும் தனி மண்டபத்தில் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்திற்கு இடது புறம் சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார்.

முக மண்டபத்தினுள் நுழைந்தால் இறைவனின் சன்னிதிக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் இருக்கிறது. அடுத்துள்ளது அர்த்த மண்டபம். அதை அடுத்துள்ள கருவறையில் இறைவன் சர்வலோக நாதர் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகியோர் களின் திருமேனிகள் உள்ளன.

மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவி மங்களாம்பிகை சன்னிதி உள்ளது. இந்த அன்னை தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். மங்களாம்பிகையை வேண்டிக்கொள்வதால் தங்களுக்கு நடைபெற வேண்டிய அனைத்து மங்களகரமான காரியங்களும் தடையில்லாது நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிரகாரத்தின் மேற்கில் விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை ஆகியோர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரி சன்னிதி உள்ளது.

வடகிழக்கு மூலையில் ஆலயத்தின் தலவிருட்சமான வில்வ மரமும், அதன் கீழே நாகர் சிலைகளும் உள்ளன. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், சனி பகவான், பைரவர், நாகர் திருமேனிகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் துர்க்கையும், நவக்கிரக நாயகர்களும் இல்லை. இந்த ஆலயத்தில் இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

நகரத்தில் உள்ள கோவில்களில் பல பராமரிப்பே இல்லாமல் இருக்கும் நிலையில், ஒரு கிராமத்தில் இப்படிப்பட்ட அழகு கோவிலா என்று நம் மனம் வியக்கும்படி உள்ளது இந்த கோவில்.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அலங்காரங்களும், அபிஷேக - ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

கொள்ளிடம் என்ற ஜீவநதிக்கும், மண்ணியாற்றுக்கும் இடையே கரும்பு தோட்டங்களும் வயல்வெளிகளும் பச்சை நிற கம்பளம் விரித்திருக்க, அதன் நடுவே அமைந்துள்ளது மரத்துறை என்ற இந்த கிராமம். ‘தேவபுரி’ என்பதே இதன் முற்கால பெயர்.



இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விளத்தொட்டி, தொட்டிலில் முருகன் தவழ்ந்த ஊர் ஆகும். எனவே இந்த ஊர் மக்கள், இன்றளவும் தங்கள் குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடுவதில்லை. இது முருகனுக்கு அவர்கள் செய்யும் மரியாதை என்கிறார்கள்.

கிராமம் என்பதால் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் இதர பூஜை களுக்கு தேவையான பொருட்கள் வாங்க இந்த ஊரில் கடைகள் எதுவும் கிடையாது. எனவே பக்தர்கள் தேவையான ஆராதனைப் பொருட்களை உடன் வாங்கிச் செல்வது நல்லது.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

இத்தலத்திற்கு அருகிலேயே பந்த நல்லூர், நெய்க்குப்பை, நெய்வாசல், திருச்சிற்றம்பலம், திருமேனியார் கோவில், மணல்மேடு, திருப்புங்கூர் மற்றும் கடலங்குடி தலங்கள் உள்ளன. மரத்துறை செல்வோர் இந்த தலங்களையும் தரிசிக்கலாம்.

அமைவிடம் :

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - சீர்காழி பேருந்து வழித்தடத்தில் உள்ளது மரத்துறை கிராமம். சாலையில் இறங்கி 1 கி.மீ வடக்கே நடந்து செல்ல வேண்டும்.

திருப்பனந்தாள், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், பந்தநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து மரத்துறை செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. வாடகை கார் மற்றும் ஆட்டோ, மினி பஸ் வசதிகளும் உள்ளன.
Tags:    

Similar News