ஆன்மிகம்
சாய்பாபா

நெல்லைக்கு வந்த ஸ்ரீ குபேர சாய்பாபா கோவில்

Published On 2019-11-03 05:01 GMT   |   Update On 2019-11-03 05:01 GMT
நெல்லை என்.ஜி.ஓ காலனியில் ஒய்யாரமாய் ஸ்ரீகுபேர சாய்பாபா அருள்புரிகிறார். இந்த கோவில் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

நெல்லை மாவட்டம், ரெட்டியார்பட்டி மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான ஊர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும், சென்னை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலையும் உதயமான பிறகு, இவ்வூர் மிகப்பெரிய நகரமாக மாறிவிட்டது. நெல்லை என்.ஜி.ஓ காலனி இதோடு இணைந்து மேன்மை பெற்றுவிட்டது. இவ்வூரில் தான் மிக ஒய்யாரமாய் ஸ்ரீகுபேர சாய்பாபா அருள்புரிகிறார்.

ரெட்டியார்பட்டியில் விஜயரங்கன் ரெட்டியார்- பார்வதி அம்மாள் மகனாக பிறந்தவர் தோத்தாரி. சிறு வயதிலே சுறுசுறுப்பாய் விளங்கிய இவரை ஆரம்பகல்வி பயில ரெட்டியார்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் சேர்த்தனர். கல்வி கற்று முடிக்கும் முன்பே வறுமை இவரை விரட்டியது. எனவே வேலை தேடி சென்னை மாநகருக்கு 1957-ல் இடம் பெயர் பெயர்ந்தார். 

அங்கு சென்றவர் 8 வருடமாக ஹோட்டல் கூலி தொழிலாளியாக பணியாற்றினார். காலங்கள் செல்ல செல்ல இவருக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என எண்ணங்கள் தோன்றியது. எனவே நாரயணன் என்பவரோடு இணைந்து சென்னை திருநெல்வேலி அல்வா கடை நடத்தி வந்தார். கோடம்பாக்கத்தில் முதலில் தொழில் நடத்தியவர், அதன் பின் தனது வியாபாரத்தினை அயனாபுரத்திற்கு விரிவாக்கம் செய்தார். அதன் பின் தான் தனியாக ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார். 

1980-ல் அண்ணாநகர் பகுதியில் பார்வதி பவன் என்ற கடையை ஆரம்பித்தார். இவரது தாயார் பெயர் பார்வதி, இவரை மணம்முடித்த தாரத்திற்கும் பார்வதி என்றே பெயர். எனவே தான் இந்த பெயரை தனது கடைக்கு வைத்தார். இந்த கடை மிகச்சிறப்பாக நடந்த காரணத்தினால் தொடர்ந்து சாலிகிராமத்தில் பார்வதி பவன் கிளை துவங்கியது.

இந்த கடைகள் முதலில் சுவிட் கடையாக துவங்கி அதன் பின் பெரிய ஹோட்டலாக உருவெடுத்தது. பெரும்பாலுமே திருநெல்வேலி ரெட்டியார்கள் ஹோட்டலில் முன்னணியில் திகழ்பவர்கள். அதுபோலவே இவரும் திகழ்ந்தார். இவரது வாழ்க்கை மேன்மை அடைந்தது. தனது தேவைகளை எல்லாம் நன்றாக பூர்த்தி செய்து கொண்டார். குடும்பத்தினரும் மேன்மை அடைந்தனர். ஆனால் அவருக்கு மெட்ரோ ரயில் ரூபத்தில் பிரச்சனை வந்தது. மெட்ரோ ரயில் பணி நடைபெறும்போது இவரது கடையை மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் தான் சொந்தமாக வாங்கி வைத்திருந்த விருகம்பாக்கம் பகுதியில் கடை வைக்க முயற்சி செய்தார். 

ஆனால் இவருக்கு கடனோ அதிகரித்தது. 2009-10ஆம் ஆண்டு வங்கியில் இவர் வாங்கிய கடன் 3 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை நோய் அதிகரித்தது. அதோடு மட்டுமல்லாமல் இவர் வாங்கிய கடன் வட்டியோடு சேர்ந்து 8 கோடியை தாண்டி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் தோத்தாரி

இந்த சமயத்தில் தான் சாய் வரதராஜன் என்ற சாய் பக்தரை கண்டார். அவரை தனது குருஜியாகவே ஏற்றுக் கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டு பிரத்தனை நடந்து கொண்டிருந்தது. ஞாயிற்று கிழமை தோறும் நடக்கும் நடைபெற்ற வழிபாட்டில் தானும் கலந்துகொண்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை அவருக்கு தேறியது. கல்லீரல் பிரச்சினை தீர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் மஞ்சள் காமலையும் அகன்றது. புது மனிதனாக அவதாரமெடுத்தார் தோத்தாரி. பாபாவுடைய மகிமையை தோத்தாரி உணர்ந்தார். அதன் பிறகு பாபாவே கதி என கிடக்க ஆரம்பித்தார்.

குருஜியை தேடி வந்தார், அவருடன் பாபாவை வணங்கி நின்றார். கூட்டுப் பிராத்தனைகளில் தவறாது கலந்து கொண்டார். சாதரண பக்தராகவே இருந்து தனது வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்து விட வேண்டும் என நினைத்தவரை பாபா விடவில்லை. நோய் தீர்ந்தாலும் கடன் தீரவில்லை.

 எனவே பாபாவிடம் தினமும் பிராத்தனை வைத்துவந்தார். என்ன ஆச்சரியம். ஒருநாள் வங்கி கடன் கொடுத்தவர்களே எதிர்பாரத விதமாக 65 லட்ச ரூபாய் கூடுதலாக கடன் கொடுத்து ஹோட்டல் பணியை துவங்க ஏற்பாடு செய்தனர். பாபாவின் அருளை, அவரின் அருட்கொடையில் தன்னையே மறந்த அவர் தொழிலை தொடர்ந்து செய்தார். பாபா பிரார்த்தனையையும் விட வில்லை.

தொடர்ந்த தொழில் செய்தாலும் கூட, வாங்கப்பட்ட கடன் அடைப்படவில்லை. எனவே சொத்தை விற்று, கடனை அடைத்து விடலாம் என்று ஏற்பாடு செய்தார். பல்வேறு பிரச்சனைக்கிடையில் சொத்தும் விற்ககப்படவில்லை. தொடர்ந்து பல போராட்டங்கள். எல்லாம் சாய்பாபா அருள் என்று நினைத்துக்கொண்டே தனது வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தார். மேலும் ஒரு அருள் பாபாவின் சிலை வடிவில் வந்து சேர்ந்தது.

2014-ம் ஆண்டு கீரப்பாக்கம் மலையில் சீரடி சாய்பாபா கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அதற்காக 18 ஆயிரம் செலவில் சீரடியில் இருந்து இரண்டு சாய்பாபா விக்ரகம் அவரது குருஜி ஏற்பாடில் கொண்டு வரப்பட்டது. 5.06.2014-ம் நாள் எதிர்பாரத விதமாக சாலிகிராமம் ஹோட்டல் முன்பு கிரேனில் வந்த சாய்பாபா சிலை இறக்கப்பட்டது. 

அவருக்கு தீபாரதனை காட்டி வைத்து விட்டு சென்றார்கள். ஆனால் அவரை அங்கே பிரதிஷ்டை செய்வார்கள் என அப்போது கூட யாரும் நினைக்கவில்லை. ஆனால் சாய்பாபா வேறு மாதிரி நினைத்து விட்டார். அவர் இங்கேயே அமர்ந்து அருள் பாலிக்க முடிவு செய்தார். எனவே 11.07.2014 அன்று பாபாவை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார் தோத்தாரி. அதன் பிறகு அங்கு அவரின் அருளாட்சி தொடர ஆரம்பித்து. ஆனாலும் சாய்பாபா தோத்தாரியை விட வில்லை.

தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டியில் தனது குல தெய்வமான பர்வத வர்த்தினி, தளவாய் மாடசாமிக்கு 50 வருடம் கழித்து கும்பாபிசேகம் வேலை நடக்க ஆயத்தமானது. இந்த பணியை தலைமை தாங்கி நடத்தும் பாக்கியம் தோத்தாரிக்கு கிடைத்தது. அந்த பணியை சிறப்பாக முடிப்பதற்காக ஊருக்கு வந்தவருக்கு சொந்த ஊரில் தனக்கு நிலம் இல்லையே என எண்ணம் பிறந்தது. அதன் பயனாக தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள இடத்தின் அருகே 2000 சதுர அடி நிலத்தினை வாங்கினார். 

அந்த சமயத்தில் நமக்கு அருள்பாலிக்கும் சாய்பாபா நமது ஊரில் அருள்பாலித்தால் என்ன என எண்ணத்தோன்றியது. எனவே தான் வாங்கிபோட்டிருக்கும் இடத்தில் சாய்பாபா கோயில் கட்ட திட்டமிட்டார். ஆனால் சாய்பாபா பெரியவர். தனக்கு என்று தனி இடத்தினைதேர்வு செய்தார். அதை குறிப்பாலும் காட்டினார். எனவே சாய்பாபா சுட்டி காட்டிய நண்பர் இடத்தினை விலைக்கு வாங்கி அதில் கோயிலை கட்ட ஆரம்பித்தார். அதற்காக ரெட்டியார் பட்டியில் சீரடி ஸ்ரீ சாய்ராம பிரத்தனை மையத்தினை உருவாக்கினார் தோத்தாரி.

இந்த கோயில் மிக பிரமாண்டமாக உருவாகி விட்டது. உள் பக்கம் முழுவதும் வேலை முடிந்தாலும் கூட வெளி பக்கம் வேலை முடியாமல் தான் உள்ளது. ஆனாலும் பிராத்தனை ஆரம்பித்து விட்டது. மக்கள் வரவு அதிகரித்துவிட்டது. பக்தர்களின் பங்களிப்புடன் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
கோயிலுக்குள் நுழைகிறோம் இளவயது சாய்பாபா குருஸ்தானை வணங்கி விட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும். அருகில் உள்ள ராகுகேது விநாயகரை வணங்கி விட்டு மாடியேறுகிறோம். அங்கே துவாரக மாயி உள்ளது. எப்போதுமே இங்கு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. சாய்பாபா ஷீரடியில் அமர்ந்து அருள்பாலித்த அதே துவாரக மாயி இங்கும் அமைந்துள்ளது. அந்த இடத்தினை சுற்றி வணங்கிவிட்டு உள்ளே நுழைகிறோம். 

உள்ளே குபேர சாய்பாபா நம்மை ஆதரவு கரம் நீட்டி புன்னகையாக வரவேற்கிறார். அது மட்டுமல்லாமல் உள்ளே நுழைந்து, ஸ்ரீநிதி விநாயகர் அவரை சுற்றி வணங்கி வருகிறோம். சுற்றி வந்து சாய்பாபா பாதத்தினை தரிசிக்கிறோம். தொடர்ந்து சுற்றி வந்து முன்பக்கமாக நின்று சாய்பாபாவை வணங்கி நிற்கிறோம். அருளையும் அள்ளி தரும் சாய்பாபா நம்மை நோக்கி ஸ்ரீகுபேர சாயி பாபா பார்வையிட்டு அருளை அள்ளி அள்ளி தருகிறார். தொடர்ந்து சுற்றி வருகிறோம். 

தாத்தாரேயர் தனி சன்னிதியில் அமைந்துள்ளார். அருகில் சாய்பாபாவின் இஷ்ட தெய்வமான பாண்டுரெங்கர் ருக்குமணி அம்மையோடு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் வியாழக்கிழமை தோறும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். குழந்தை வரம், திருமணம், விவசாயம் செழிக்க, வியபாரம் கொழிக்க, தீராத வழக்குகள் தீர, பணி உயர்வு பெற மண குழப்பம் தீர, தேர்ச்சி முடிவடைய இங்கு பிரார்த்தனை நடைபெறுகிறது. 

தினப்படி பூஜைகள் மற்றும் நிர்வாக செலவு வகைக்கு மாதந்திர உபயதாரர்கள் வரவேற்றக் கப்படுகிறார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ500, ரூ1000 கட்டி உபயதார்கள் தாங்கள் விரும்பிய நாள்களில் தங்கள் குடும்ப கோத்திரம் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம். அவர்களுக்கு பாபாவிற்கு அணுவிக்கப்பட்ட வஸ்திரம், பிரசாதம் வழங்கி திருக்கோவில் சார்பாக மரியாதை செய்யப்படுகிறது.

நெல்லை புது பஸ் நிலையத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டரில் ரெட்டியார் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கோயில் உள்ளது. 

தொடர்பு எண் :- குமரகுரு 7708077729
தகவல்:- முத்தலாங்குறிச்சி காமராசு.


Tags:    

Similar News