ஆன்மிகம்
கோவில் தோற்றம்

பாவ விமோசனம் அருளும் மத்தியமாகேஸ்வரர் கோவில்

Published On 2019-10-31 01:40 GMT   |   Update On 2019-10-31 01:40 GMT
மத்தியமாகேஸ்வர் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தர்வால் இமயமலையின் மன்சூனா கிராமத்தில் அமைந்துள்ளது.
தென்னாடுடைய சிவன், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், மூவரும் அவரே என்னும் தத்துவத்தையும் சைவ சித்தாந்தம் கூறுகிறது. ‘சிவம்’ என்ற சொல்லுக்கு செம்மை (பூரணத்துவம்), மங்களமானது என்று பொருள். மங்களகரமானவராகவும் தன்னை சார்ந்தவர்களை மங்களகரமாக வாழ வைப்பவருமான இறைவனை போற்றி துதித்து, நாம் பல காரியங்களில் வெற்றி காண்கிறோம்.

தென்னாட்டில் சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட இடங்களை ‘அட்ட வீராட்டான தலங்கள்’ என்று அழைப்பாா்கள். அதைப்போல வடநாட்டில் சிவபெருமானின் ‘பஞ்சகேதரா தலங்கள்’ பிரசித்திப் பெற்றவை. இந்த திருத்தலங்கள் அனைத்தும் மகாபாரதத்துடன் தொடர்புபடுத்திக் கூறப்படுபவையாகும்.

தல புராணம் :

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அந்தப் போரில் பாண்டவர்கள் தங்கள் உறவினர்களான கவுரவர்களை கொன்ற பிறகு ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள ஆலோசனைக்கு கிருஷ்ணனை அனுகினர். அவரின் ஆலோசனையின் பேரில் சிவபெருமானை சந்தித்து பாவத்தை போக்கிக் கொள்ள முடிவுசெய்தனர். அதன்படி அவர்கள் பல்வேறு இடங்களில் சிவபெருமனை தேடினர். எங்கு தேடியும் ஈசனைக் காண முடியவில்லை.

சிவபெருமனை தரிசிக்காமல் திரும்புவது இல்லை என்ற உறுதி ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள், குப்த காசியில் இருந்து இமயமலை பள்ளத்தாக்கில் இருக்கும் கவுரி குண்ட் என்ற இடத்தை அடைந்தனர்.

குருசேத்திரப் போரில் பாண்டவர்களின் நடத்தையால் கோபம் கொண்ட சிவபெருமான், அவர்களைக் காண்பதை தவிர்ப்பதற்காக நந்தி வடிவம் எடுத்து ஓரிடத்தில் இருந்தார். அவர் இமயமலை கர்வால் பகுதியில் தன்னை மறைத்துக் கொண்டு தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

ஆனால் மன உறுதியோடு போராடிய பாண்டவர்கள், குப்தகாசியின் மலைப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காளை வடிவத்தில் ஈசனைப் பார்த்து, அவரை அறிந்து கொண்டனர். காளை வடிவில் இருந்த ஈசனின் வால் மற்றும் பின்னங்கால்களை வலுக்கட்டாயமாக பிடிக்க முற்பட்டனர். ஆனால் சிவபெருமான் ஐந்து இடங்களில் மீண்டும் தோன்றுவதற்காக தன்னை தரையில் மறைத்துக்கொண்டார். கேதார்நாத்தில் ஒரு கூம்பின் வடிவத்திலும், துங்நாத்தில் கைகள் வடிவத்திலும், ருத்ரநாத்தில் முகம் வடிவிலும், மத்தியமாகேஸ்வரில் வயிறு மற்றும் அவரது நபி (தொப்புள்)யாகவும், கல்பேஷ்வரில் ஜடா என்று அழைக்கப்படும் தலைமுடி வடிவிலும் உள்ளது.

சிவனின் தெய்வீக வடிவமாகக் கருதப்பட்டு, இந்த கோவில்கள் வழிபடப்படுகிறது. இந்த ஆலயங்கள் அனைத்தும் பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. காளையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதி லிங்கம் உண்டானது. அந்த ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர் களுக்கு காட்சியளித்து அவர்களின் பாவத்தை போக்கினார். மேற்கண்ட ஐந்து சிவன் கோவில்களையும் பக்தர்கள் புனித யாத்திரையாக சென்று வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஐந்து கோவில்களுக்கான பயணம் கடல் மட்டத்தில் இருந்து 3583 மீட்டர் உயரத்தில் கேதார்நாத்துடன் தொடங்குகிறது. இந்த பயணத்தின் இரண்டாவது கோவில் துங்நாத் 3680 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ருத்ரநாத் 2286 மீட்டர் உயரத்தில் மூன்றாவது கோவிலாக இருக்கிறது. நான்காவது கோவிலான மத்திய மாகேஸ்வர் கோவில் உத்தரகாண்ட் மாநிலம் இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3497 மீட்டர் தொலைவில் உள்ளது. 2200 மீட்டர் உயரத்தில் கடைசி கோவில் கல்பேஷ்வர். இந்த கோவில்கள் அனைத்தும் நாட்டின் மிக அழகான மலைகளுக்கு மத்தியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன.

மத்தியமாகேஸ்வர் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தர்வால் இமயமலையின் மன்சூனா கிராமத்தில் அமைந்துள்ளது. 3497 மீட்டர் (11,437 அடி) உயரத்தில் இருக்கிறது. மத்தியமாகேஸ்வர் கோவிலில் கருங்கல்லால் செய்யப்பட்ட நந்தியின் தொப்புள் வடிவ சிவலிங்கம் கருவறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை வெள்ளியால் செய்த சிவலிங்க கவசத்தைக் கொண்டு போர்த்தியிருக்கிறார்கள். இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது, கவசத்தை எடுத்து வயிறு போல் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இது கண்கொள்ளா காட்சியாகும்.

ஆலய பிரகாரத்தில் இரண்டு சிறிய ஆலயங்கள் உள்ளன. இதில் ஒரு கோவில் பார்வதி தேவிக்காகவும், மற்றொரு ஆலயம் பார்வதியும், சிவபெருமானும் பாதி பாதியாக அமைந்த உருவமான அர்த்தநாரீஸ்வரருக்கும் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டவர்களில் ஒருவரான பீமன் இந்த கோவிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது. பிரதான கோவிலின் வலதுபுறத்தில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அங்கு பளிங்கால் செய்யப்பட்ட சரஸ்வதியின் உருவம் கருவறையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் வளாகத்தில் இருந்து வரும் நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நீரின் ஒரு துளி கூட நம் பாவங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு போதுமானவை என்று சொல்லப்படுகிறது. இங்கு வரும் புனிதநீரில் நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆலயத்தில் இருக்கும் அர்ச்சகரே இந்த தர்ப்பணத்தை செய்து வைக்கிறார்.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் குளிர் அதிகமாக இருக்கும். பார்வையிட சிறந்த நேரம் மே முதல் ஜூன் வரை. ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரம் முதல் அக்டோபர் கடைசி வாரம் வரை கோவில் திறந்திருக்கும். மழைகாலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் என்பதால் அந்த நேரங்களில் கோவில் நடை திறக்கப்படுவதில்லை என்கிறார்கள்.

குதிரை சவாரி :

மத்தியமாகேஸ்வர் கோவிலுக்கு நடக்க முடியாதவர்கள் குதிரையில் அமர்ந்து செல்லலாம். செல்லும் வழி அடர்ந்த காடாக இருப்பதால் இரவு பண்டாலி அல்லது நானவில் ஆகிய இடங்களில் தங்கலாம். அங்கு தங்குவதற்கு சிறிய வீடுகள் உள்ளன. குளிர் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் அவை. நம்முடன் வரும் குதிரை பாதுகாவலர்களே இதனை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். குதிரை சவாரிக்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இரவு உணவு வழங்குகிறார்கள்.

முன்பே குதிரைக்கு சொல்லிவைத்து இருந்தால் அவர்கள் குதிரையுடன் வருவார்கள். அழகான புல்வெளிகள் மற்றும் மலைகள் வழியாக மலையேறுபவர்களுக்கு இது ஒரு சொர்க்கமாகும். இப்பகுதி பனி மூடிய இமயமலை மற்றும் பசுமையான ஆல்பைன் புல்வெளி களால் மூடப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதிகமாக வெளிநாட்டவர்களும் மலையேறுபவர்களும் மலையின் இயற்கையையும், ரம்மியமான சூழலையும், பல நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்து மலையேறுகிறார்கள்.

அமைவிடம் :

இந்த கோவில் டெராடூன் விமான நிலையத்தில் இருந்து 244 கிலோமீட்டா் தொலைவிலும், ரிஷிகேஷ் ரெயில் நிலையத்தில் இருந்து 227 கிலோமீட்டர் காரில் ரான்சி வழியாக யூனியானாவை அடைந்து 19 கிலோ மீட்டர் மலையேற்றம் செய்ய வேண்டும். இந்த மலைப்பாதையில் நடந்தோ, குதிரையிலோ செல்லலாம். பன்டோலி வரை மலையேற்றம் மிகவும் மென்மையானது, அதன் பிறகு செங்குத்தான மலையில் செல்ல வேண்டும்.

மருத்துவர் நா.மோகன்தாஸ்
Tags:    

Similar News