ஆன்மிகம்
திருமலை நம்பி, கோவில் தோற்றம்

நம்பியவர்களை வாழவைக்கும் திருமலைநம்பி கோவில்

Published On 2019-10-30 01:56 GMT   |   Update On 2019-10-30 01:56 GMT
திருமலைநம்பி கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வள்ளியூர் அருகே உள்ள நம்பிமலை, வைணவக் கோவில்களில் புராணங்களால் போற்றப்படும் முக்கியமான மலையாகும். திருமலைநம்பி கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். வைணவக் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பி கோவிலில் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் கருடசேவை நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். அதுபோலவே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெறும். ஆனால் நம்பி மலையில் மட்டும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமைதான் உறியடி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

மலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும் நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும், கோவிலையும் காவல் தெய்வமாக இருந்து காக்கிறார் சங்கிலிபூதத்தார். கருடசேவை நடைபெறும் போது சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள், தங்களை சங்கிலியால் உடலில் அடித்துக் கொள்வது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வருடந்தோறும் ‘கைசிக விருத்தாந்தம்’ எனும் புராண நிகழ்ச்சி திருக்குறுங்குடி தலத்தில் நடந்து வருகிறது. இதுதான் இந்த ஆலயத்தின் தல புராணம்.

திருக்குறுங்குடியில் இருந்த பாணர் குலத்தைச் சேர்ந்த பக்தர், நம்பியின் மீது அளவிலா பக்தி கொண்டிருந்தார். யாழை மீட்டி பள்ளிகொண்டிருக்கும் பெருமாளைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவார். ஒருமுறை அவர், நம்பி பெருமாளை மனதில் தியானித்துக்கொண்டே அடர்ந்த காடுகளில் பயணித்தார். நடுவழியில் அவரை வழிமறித்த ஒரு அசுரன், தனது உணவாக்கிக் கொள்ளப் போவதாக மிரட்டினான்.

அதைக் கேட்டு புன்முறுவல் பூத்த பாணன், “நான் இன்று ஏகாதசி விரதமிருக்கிறேன். நம்பியை வணங்கிய பின்பு நானாக வந்து உனக்கு உணவாவேன்” என்றார்.

அரக்கன் அவரை சந்தேகத்தோடு பார்த்தான்.

உடனே பாணன் “சந்தேகப்படாதே. நான் வணங்கும் பெருமாளின் மீது ஆணையாக வந்துவிடுவேன்” என்றார்.

இதையடுத்து அசுரன் அவருக்கு வழிவிட்டான். பாணன் அங்கிருந்து புறப்பட்டு, திருக்குறுங்குடி நம்பி கோவிலின் வாசலில் வந்து நின்றார். வைகுந்தனை இதயத்தில் நிறுத்தி, யாழை மெல்ல இசைக்கத் தொடங்கினார். அந்த காடு முழுவதுமே யாழிசை கேட்டு மயங்கியது. அரக்கனும் அந்த இசையில் தன்னை மறந்தான். பாணன் கைசிகம் எனும் உயர்ந்த ராகத்தை பாடினார். இசையால் நம்பியைக் கரைத்தார். கண் திறந்து பார்த்தால் பல நாழிகைகள் கடந்துவிட்டிருந்தன.

‘கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே’ என்ற அவசரத்தில் அரக்கனைத் தேடினார். அப்போது திருமலை நம்பி, ஒரு வயோதிகர் தோற்றத்தில் அங்கு வந்தார். அவர் பாணனிடம், “யாரை தேடுகிறாய்?” என்று கேட்டார்.

“என்னை சாப்பிட வேண்டுமென்று ஒருவர் இங்கு காத்திருந்தார். அவரை இப்போது காணவில்லை. அவரைத்தான் தேடுகிறேன்.”

“ஐயோ.. அவன் அரக்கன். அவனிடம் போய் மாட்டிக்கொள்ளாதே. எப்படியாவது தப்பித்துக் கொள்.”

“பெரியவரே, எம்பெருமாள் நம்பியின் பெயரால் வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் அதை நான் காப்பாற்றத்தான் வேண்டும்” என்றபடி பாணன் முன்னேறிச் சென்றார். அவரை வயோதிகர் பின் தொடர்ந்தார்.

ஓரிடத்தில் அசுரனைக் கண்ட பாணனின் முகம் மலர்ந்தது. அவர் நேராக அசுரனிடம் சென்றார். பாணனைப் பார்த்த அசுரனின் முகம் பிரகாசமானது. ஆனால் முன்பிருந்த அசுர வெறி இப்போது இல்லை. முகத்தில் சாந்தத்தால் ஒளி கூடியிருந்தது.

“பாணரே.. உங்களை இப்போது பார்க்கையில் என் சுபாவம் சாந்தமாக மாறுகிறது. நீங்கள் பாடிய பண், இந்த கானகம் முழுவதும் பரவியது. என் இதயத்திலும் அது பரவி என் குணத்தை மாற்றிவிட்டது. உங்களை மிரட்டியதற்காக வெட்கப்படுகிறேன். எனவே நான் பசியாற உங்கள் உடல் வேண்டாம். ஆனால், கைசிகப் பண் இசைத்த பலனை மட்டும் எனக்கு தாருங்கள்” என்று அசுரன் கெஞ்சினான்.

அப்போது அங்கே பேரொளி தோன்றியது. வயோதிக தோற்றத்தில் இருந்தவர், திருமலை நம்பியாக விஸ்வரூப தோற்றம் காட்டி நின்றார். அதே நேரத்தில் அங்கு இன்னொரு அதிசயமும் நடந்தது. அசுரன், திடீரென்று அழகான மானிட உருவிற்கு மாறினான். அவன், திருமலை நம்பியையும், பாணனையும் வணங்கி நின்றான்.

“என் பெயர் சோமசர்மா. அந்தணனான நான், வேள்விகளை தவறாக செய்த காரணத்தால், அசுரனாக மாறினேன். பாணனாகிய பரம பாகவதரின் தரிசனத்தால் எனக்கு சாப நிவர்த்தி கிடைத்து விட்டது” என்றான்.

தன் சன்னிதியில் கைசிக பண் பாடிய பாணனுக்கு, ‘நம்பாடுவான்’ என்ற திருநாமத்தை இறைவன் சூட்டினார்.

இந்தச் சம்பவம் கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று நடந்ததாக தல புராணம் சொல்கிறது. ஆகவே, இந்த நன்னாளுக்கு ‘கைசிக ஏகாதசி’ என்று பெயர் வந்தது. பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் அதிக பாசுரம் பாடப்பெற்ற சிறப்புடையது திருமலை நம்பிக் கோவில். திருக்குறுங்குடியில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்ற நான்கு நம்பிகளும், மலை மேல்பகுதியில் திருமலை நம்பி என்ற பெயரில் நின்ற கோலத்திலும் எம்பெருமாள் அருள்பாலிக்கிறார். ஒரே ஊரில் ஐந்து கோலத்தில் இறைவனின் தரிசனம் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆலயம் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பெரும்பாலும் மலைக் கோவில்கள், சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். அதுபோலவே மகேந்திரகிரி மலையும் மிகவும் சிறப்புக்குரியது. அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு நித்யவாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

இந்தக் கோவிலுக்கு முன்பு பாலத்துக்கு அடியில் நம்பியாறு பாறைக்குள் நுழைந்து ஓடி வருகிறது. அது ஒரு பள்ளத்தாக்கு. சங்கிலிபூதத்தார் சாமி ஆடும் பக்தர்கள், இந்த இடத்தில் இரும்பு சங்கிலியை ஆற்றுக்குள் போட்டு விடுவார்கள். மறு ஆண்டு விழா நடைபெறும் போதுதான், இந்தச் சங்கிலி எடுக்கப்படும். அப்போது போட்ட இடத்தில் அப்படியே அந்த சங்கிலிகள் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

பாலத்தைக் கடந்ததும், இடதுபுறம் மிக உயரத்தில் திருமலைநம்பி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதன் கீழே அடிவாரத்தில் ஒரு புற்று உள்ளது. அந்தப் புற்றை மக்கள் வணங்கி செல்கிறார்கள். இதில் 201 சித்தர்கள் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. தினமும் ஒருவர் வீதம் நம்பியை பூஜை செய்வார்களாம். அப்படி சித்தர்கள் பூஜை செய்த பிறகே அர்ச்சகர்கள், நம்பிக்கை பூஜையை செய்யத் தொடங்குவார்கள்.

நம்பியைத் தரிசிக்கும் முன்பு நம்பி ஆற்றில் நீராட வேண்டும். அதன் பின் திருமலை நம்பி கோவிலுக்குள் சென்று நின்ற கோலத்தில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்கலாம்.

‘திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும்’ என்பார்கள். திருப்பதிக்கு ஏழு ஏற்றம் இருப்பது போலவே, திருமலை நம்பி கோவிலுக்கு செல்லவும் ஏழு ஏற்றம் இருக்கிறது. எனவே இவரை நம்பி மலை மீது ஏறினால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நல்வழி கிடைக்கும்.

இந்த ஆலயம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே வனத்துறையில் அறிவுரையுடன் மலை ஏறுவது உத்தமம். தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். சனிக்கிழமை கருட சேவை நடைபெறுவதால், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

நோய் தீர்க்கும் நம்பியாறு

இந்த ஆலய பகுதியில் பாய்ந்தோடும் நம்பியாறு புனிதமானதாக சொல்லப்படுகிறது. இந்த நம்பியாறு, ‘மகேந்திரகிரி’ என்ற மலையில் உற்பத்தியாகி வருகிறது. இந்த நதி, மாயவன் பரப்பு என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்று கிறது. பின் கடையார் பள்ளம் வழியாக தாய்பாதம் தொட்டு, நம்பி கோவில் வந்து சேருகிறது. பல வகை மூலிகைகளின் வாசத்தினைத் தன் வசம் சேர்த்து, நோய் தீர்க்கும் தீர்த்தமாகவும் இது விளங்குகிறது. கோவிலுக்கும், இறைவனின் திருமஞ்சனத்திற்கு தேவையான நீரை இந்த நதி தருவதால், இந்த ஆற்றில் நீராடும் பக்தர்கள் எண்ணெய் மற்றும் சோப்பு பயன்படுத்தக்கூடாது என்ற தடை உள்ளது.

அமைவிடம் :

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் திருக்குறுங்குடி உள்ளது. இங்கு இறங்கி ஆட்டோ மூலம் மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் மலை ஏறி நம்பியை தரிசிக்கலாம். திருநெல்வேலி பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருக்குறுங்குடிக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. மலைக்குச் செல்ல தினமும் ஜீப் வசதி இருக்கிறது.
Tags:    

Similar News