ஆன்மிகம்
முத்தாலம்மன்

குழந்தை பாக்கியம் அருளும் முத்தாலம்மன் கோவில்

Published On 2019-10-25 01:36 GMT   |   Update On 2019-10-25 01:36 GMT
திண்டுக்கல் மாவட்டம் அகரம் பகுதியில் அமைந்துள்ளது முத்தாலம்மன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் வரித்தண்டலராக பணிபுரிந்தவர் சக்கரராயர் என்ற அந்தணர். இவர், தனது குலதெய்வமான முத்தியாலு அம்மனின் மீது அதீத பக்தி கொண்டவர். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பின்பு சுல்தான்கள் கட்டுப்பாட்டில் விஜயநகரம் சென்றது. இதையடுத்து சக்கரராயர் அங்கிருந்து தனது குலதெய்வத்துடன் இடம்பெயர முடிவு செய்தார். மேலும் இதற்காக முத்தியாலு அம்மனிடம் அனுமதியும் கேட்டார். அம்மன் குறிப்பால் உணர்த்தியதன் பேரில் தென்திசை நோக்கி குலதெய்வம் மற்றும் தன் கட்டுப்பாட்டில் உள்ள படைகளுடன் புறப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த அவர், தாடிக்கொம்பு அருகே குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அகரம் பகுதியில் ஓய்வு எடுப்பதற்காக படைகளுடன் முகாமிட்டிருந்தார். அப்போது முத்தியாலு அம்மன் குறிப்பால் உணர்த்திய ஒரு இடத்தில் தனது குலதெய்வத்துக்கு அவர் கோவில் கட்டினார். அன்றில் இருந்து இன்று வரை அந்த கோவிலில் தினசரி வழிபாடு மற்றும் திருவிழாக்கள் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் மூலவராக உள்ள முத்தியாலு அம்மனின் பெயர் காலப்போக்கில் மறுவி முத்தாலம்மன் என்று மாறியது.

அம்மன் உத்தரவு

இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருவிழா நடத்தப்படும். முன்னதாக ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் சன்னதியில் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். இதற்காக தாடிக்கொம்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சன்னதியில் திரள்வார்கள். பின்னர் மனமுருகி அம்மனை வேண்டுவார்கள்.

அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்கு பிரகாரத்தில் உள்ள திருவாச்சி சிலை பக்கமோ பல்லி சத்தம் கேட்கும். அந்த சத்தத்தையே அம்மனின் உத்தரவாக நினைத்து திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு வேண்டும் போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூத ராஜா சிலை இருக்கும் இடத்தில் பல்லி சத்தம் கேட்டால் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை என கருதப்பட்டு திருவிழாவும் நடத்தப்படாது. மேலும் பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றாலும் திருவிழா நடத்தப்படாது.

திருவிழா சாட்டுதல்

அம்மன் உத்தரவு கிடைத்ததும், ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரம்பரிய முறைப்படி அடிப்படையில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் திங்கட்கிழமை முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டார பெட்டி சன்னதியில் இருந்து புறப்பட்டு கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். உற்சவ காலத்தில் அம்மனின் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை, முட்டை, களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம் நாள் உற்சவ கால அம்மன் உருவாக்கப்படுகிறது. அதையடுத்து உற்சவ கால அம்மன் கண்திறப்பு மண்டபத்துக்கு எடுத்துச்சென்று அம்மனின் கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி கொலுமண்டபத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

கண் திறக்கப்பட்ட உற்சவ கால அம்மன் சன்னதிக்கு செல்லாமல் கொழுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு வேறு எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும். அன்று பகல் முழுவதும் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அத்துடன் தங்களது நிலத்தில் விளைந்த கம்பு, சோளம், நெல், மக்காச்சோளம், வாழைப்பழம் ஆகியவற்றை சூறையிட்டும்,கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

குழந்தை பாக்கியம்

அன்று நள்ளிரவு அம்மன் பு‌‌ஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு வருவார். அடுத்த நாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் உலா வரும் நிகழ்ச்சியும், பூஞ்சோலையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

அப்போது அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பெண் பக்தர்கள் சாப்பிட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இந்த கோவிலின் காவல் தெய்வமான பூத ராஜாவை வழிபடுவதன் மூலம் தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் தீரும்.

நவக்கிரக பூஜை

அகரம் முத்தாலம்மன் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளும் சுரலிங்கேஸ்வரருக்கு ஒவ்வொரு பிரதோ‌‌ஷத்தின் போது சிறப்பு வழிபாடும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும் நடைபெறும். தினசரி 2 கால பூஜைகளும், விசே‌‌ஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பங்குனி மாதத்தில் சின்ன சாத்திரை வைபவமும் நடைபெறும். அத்துடன் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், கந்தச‌‌ஷ்டி போன்ற நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.

அமாவாசை, பவுர்ணமி, சித்திரை புத்தாண்டு, ஆடிமாத வெள்ளிக்கிழமைகள், நவராத்திரியின் 9 நாட்கள், விஜயதசமி, தீபாவளி போன்ற விசே‌‌ஷ நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறும். சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நாட்களில் நவக்கிரக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

அட்சய பாத்திரங்களை ஏந்தியபடி 3 அம்மன்கள்

அகரம் முத்தாலம்மன் கோவில் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி (செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய அம்சங்களில் கைகளில் அட்சய பாத்திரங்களை ஏந்தியபடி நிற்பது போன்று 3 அம்மன் சிலைகள் உள்ளன. 2005-ம் ஆண்டுக்கு முன்பு சுதையால் செய்யப்பட்ட 3 அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனிடம் உத்தரவு கேட்டு கல்சிலைகளாக மாற்றப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என கோவில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமா முனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டார பெட்டியும் உள்ளது.

அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமா முனிவருக்கும், பண்டார பெட்டிக்கும் செய்யப்படுகிறது. இக்கோவிலின் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் 5 முகங்களுடன் சுரலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் விநாயகர், விசாலாட்சி அம்மன், பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, நவகிரகங்கள் என அனைத்து தெய்வங்களுக்கும் பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News