ஆன்மிகம்
கோவில் தோற்றம், பினாங்கு மகாமாரியம்மன்

பினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில் - மலேசியா

Published On 2019-10-24 01:28 GMT   |   Update On 2019-10-24 01:28 GMT
மலேசிய நாட்டில் தோன்றிய முதல் திருக்கோவில், பினாங்கு தமிழர்களின் காவல் தெய்வம் என பலவேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்வது, பினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில்.
மலேசிய நாட்டில் தோன்றிய முதல் திருக்கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம், பினாங்கு தமிழர்களின் காவல் தெய்வம், இந்து அறக்கட்டளை வாரியத் திருத்தலம், ஜார்ஜ் டவுன் நகரின் மையப் பகுதியில் அமைந்த ஆலயம் என பலவேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்வது, பினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில்.

கி.பி.1786 மற்றும் கி.பி.1800-ம் ஆண்டுகளில் அமைந்த பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி, தென்இந்தியர்களின் பினாங்கு வருகையைத் தூண்டியது. தொடக்கக் காலத்தில் அவர்கள், ரப்பர், தேயிலை, காபி தோட்டப் பணியாளர்களாக வந்தனர். பினாங்கு தீவின் அபார வளர்ச்சியும், அதன் தமிழ்நாட்டினை ஒற்றிருந்த சூழலும் அதிக அளவிலான தமிழர்களை ஈர்த்தது. இங்கு குடியேறிய தமிழர்களுக்கு, பிரிட்டிஷ் அரசு தங்கள் விருப்பப்படி கோவில்கள், கட்டிடங்கள் கட்டிக்கொள்ள ஆதரவு தந்தது. இதனால் தாங்கள் விரும்பும் தெய்வங்களுக்கு உரிய கோவில்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர். ரப்பர் மற்றும் ஈயம் தொழில் வளர்ச்சியினால் மக்களின் வருகையும் அதிகரித்தது. குறிப்பாக ராமநாதபுரம், தஞ்சாவூர் பகுதிகளைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு குடியேறினர்.

மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் கோவிலாக பினாங்கு தீவில் முத்து மாரியம்மன் கோவில் குயின் ஸ்திரிட்டில் பட்டா நிலத்தில் கி.பி. 1801-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. இதன்பிறகே யோர்க் சாலை ராமர், பட்டர்வொர்த் மகா மாரியம்மன், வாட்டர்பால் சாலை பாலதண்டாயுதபாணி, கணேசர், பினாங்கு சாலை குஞ்ச் பிகாரி கோவில்கள் எழுப்பப்பட்டன.

கி.பி.1801-ல் இந்தக் கோவிலுக்கான நிலத்தை, பெட்டிலிங்கம் செட்டியிடம் பிரிட்டிஷ்காரர்கள் வழங்கினர். கி.பி. 1833-ம் ஆண்டு முதல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடக்கத்தில் பனை ஓலை குடிலாக இருந்து, பின்பு செங்கல் கட்டிடமாக அமைக்கப்பட்டது. கி.பி.1980 முதல் முத்து மாரியம்மனே, மகா மாரியம்மன் என அழைக்கப்படுகிறார்.

ஆலயத்தின் நடுநாயகமாக விளங்குபவர் மகாமாரியம்மன். 1801-ல் சிறு வழிபாட்டுத் தலமாக தொடங்கி 1833-ம் ஆண்டில் பெரிய கோவிலாக மாற்றம் பெற்றது. சுமார் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் ஒரே இடத்தில் நிலைத்து நின்று அருள்வழங்கி வருகிறார், அன்னை மகாமாரியம்மன்.

ஆலய அமைப்பு

23 அடி உயரமான ராஜகோபுரம் எண்ணற்ற சிற்பங்கள் கொண்டு வண்ண மயமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிலைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும். காசிவிசுவநாதர், விசாலாட்சி, காளி, முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர் என அனைத்து வடிவங்களும் அழகுற அமைந்துள்ளன. மிகத் துல்லியமான தூண் வேலைப்பாடுகள் சிற்பியின் கைவண்ணத்தை பறைசாற்றுகின்றது. ஆலய மேல் விதானத்தில் பன்னிரண்டு ராசி சின்னங்கள் மரத்தால் செதுக்கப்பட்டுள்ளன.

மலேசிய நாட்டிலேயே அதிக வரலாறு மற்றும் கலாசார கட்டிடங்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்வது, பினாங்கு மாநிலம்தான். பினாங்கு - ஜார்ஜ்டவுன் மையப்பகுதி யூனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 2008-ம் ஆண்டு மகாமாரியம்மன் கோவிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வது, பினாங்கு மாநிலம். கி.பி.846-ல் சோழமன்னன் கால் பதித்த பூமியாக பினாங் தீவும், அதையொட்டி கெடாரம் எனும் கடாவும் உள்ளன. கி.பி.1786-ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் பினாங்கு வந்தது. அதன் பின்னரே தமிழர்கள் குடியேற்றம் நடந்தது. மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளோடு பினாங்கு தீவிற்குக் கடத்தப்பட்டதாக கார்ல்வெல்சின் எழுதிய ராணுவ நினைவுகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூரை அடுத்து அதிக மக்கள் வாழும் மாநிலமாக பினாங்கு திகழ்கின்றது. அதேபோல, தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலமாகவும், தைப்பூசத்திற்குப் புகழ்பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. இங்குதான் புகழ்பெற்ற தண்ணீர்மலை முருகன் கோவில் உள்ளது.

அமைவிடம்

மலேசியா நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றான பினாங்கு தீவில், ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள குயின் ஸ்திரிட்டில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Tags:    

Similar News