ஆன்மிகம்
கோதண்டராமர், கோவில் தோற்றம்

அண்ணன் பெருமாள் ஆலயம்- நாகப்பட்டினம்

Published On 2019-10-18 01:41 GMT   |   Update On 2019-10-18 01:41 GMT
அண்ணன் பெருமாள் ஆலயம் என அழைக்கப்படும், அழகிய ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அண்ணன் பெருமாள் ஆலயம் என அழைக்கப்படும், அழகிய ஆலயம் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் பிரகாரமும், அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் காணப்படுகின்றன.

கருவறையில் வீற்றிருக்கும் மூலவர், ‘சீதா பிராட்டி சமேத கோதாண்டராமர்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக் கிறார். மூலவருக்கு அருகே உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருமேனி உள்ளது. இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் அனுமன், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், மணவாள மாமுனி ஆகியோரது திருமேனிகள் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் அனுமன் தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். மூல நட்சத்திரம் அன்று அனுமனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி அன்று 1008 அர்ச்சனைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள்.

நவராத்திரியின் 10 நாட்களும் ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருமாளுக்கு ஏக தின லட்சார்ச்சனை, சுதர்சன ஹோமம், ராமர் சீதா திருக்கல்யாணம் போன்றவை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறுகின்றனர். அன்றைய தினம் மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அருள்வார். திருக்கல்யாணம் நடைபெறும் தினத்தன்று, பக்தர்களுக்கு விதம் விதமாய் பிரசாதம் வினியோகம் செய்கின்றனர். புளியோதரை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்றவை பிரசாதமாக வினியோகம் செய்யப்படும். பங்குனி மாதம் வரும் ராம நவமியின் போது 9 நாட்கள், உற்சவர் ஆலயத்தின் திருச்சுற்றில் உலா வருவார். 10-ம் நாள் கருடசேவை அன்று உற்சவர் வீதிய உலா வருவார்.

சித்திரை முதல் ஞாயிறு அன்று பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அட்சய திருதியை அன்றும் பெருமாள் வீதியுலா வருவதுண்டு. மார்கழி மாதத்தின் 30 நாட்களும் ஆலயம் காலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டு இருக்கும். வைகாசி ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு வைபமும் ஏராளமான பக்தர்கள் சூழ அமர்க்களமாக நடைபெறும். அன்றைய தினம் உற்சவர் திருச்சுற்றில் உலா வருவார்.

ராமர்- சீதைக்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெறுகின்றன. இந்த ஆலயத்தில் இணைந்திருந்து அருள்பாலிக்கும் சீதா பிராட்டியாரையும், கோதண்டராமரையும் வழிபாடு செய்தால், தம்பதிகளிடையே இருக்கும் கருத்துவேறுபாடு அகன்று ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்- மனைவி இருவரும் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிகையாக இருக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்


நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியின் ஒரு பகுதியான கைவிளாஞ்சேரியில் இந்த ஆலயம் அமைந் திருக்கிறது. சீா்காழியின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம்.
Tags:    

Similar News