ஆன்மிகம்
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

Published On 2019-09-30 01:42 GMT   |   Update On 2019-09-30 01:42 GMT
திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந்துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோவில். இது நவதிருப்பதி கோவில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.
திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். இங்குதான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள். இது நவதிருப்பதி கோவில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர் வள்ளிதாயாரும் அமைந்திருக் கிறார்கள். இங்கு பெருமாள் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு உச்சவராக நிக்சோப வித்தான் உள்ளார். பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும், அவரின் இடது உள்ளங்கை விண்னை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.

இக்கோவில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. குபேரன் பார்வதியை கடை கண்ணால் பார்த்ததால் சாபத்திற்குள்ளாகி, பின்பு சிவனால் பரிகாரம் பெற்று வைத்தமாநிதியை வழிபட்டார் என்று வரலாறு உண்டு. ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும்.

இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

மூலவரான வைத்தமாநிதியின் கோவிலுக்கு பின்புறம் யோக நரசிம்மர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வழக்கமாக நம்பி கோவிலில் மட்டுமே பிரதோஷம் நடைபெறும். ஆனால் எங்குமில்லாத வகையில் இந்த கோவிலில் யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு பிரதோஷ விழா நடைபெறும். மேலும் மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் திரளான அளவில் வந்து தரிசனம் செய்வார்கள். பெருமாளுக்கு உகந்தமாதமாக இந்த புரட்டாசி மாதம் கருதப்படுகிறது-.

அதேபோல் புரட்டாசி சனிக்கிழமையில் வைத்தமாநிதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு நைவேத்தியங்கள் நடைபெறும். பக்தர்கள் பலர் தங்களால் இயன்ற பொருளுதவிகளை செய்து மகிழ்கின்றனர். மேலும் சிலர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தங்கள் செலவில் செய்வார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பிரதோஷங்கள் வருவது வழக்கம். ஆனாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வேளைகளில் காலை, மதியம் மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் அனைத்து பெண்களும் தங்கள் குறைகள் தீர தவறாது கலந்து கொள்வார்கள். சிறப்பு நைவேத்தியம் செய்வதற்கான நெய் மற்றும் இதர பொருட்களை பக்தர்களே காணிக்கையாக செலுத்து வார்கள். மேலும் நீராஞ்சனம் விளக்கு ஏற்றியும் வழிபடுபவர்கள் அனேகம்.

மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனி கிழமைகளிலும் கருடசேவை நடை பெறுவதுதான் மிகவும் சிறப்பம்சமாக கருதப்படுகிறது-. கருட வாகனத்தில் நடைபெறும் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வுதான் கருட சேவையாகும். இதில் உற்சவரும் இணைந்து வீதியுலா வருவது மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

வைத்தமாநிதி பெருமாளுக்கு ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி தருகிறார். இறுதிநாளான 10-ம் நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் பக்தர்கள் கரகோஷங்களை எழுப்பி தேரினை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை காண வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தகோடிகள் கலந்து கொள்வார்கள்.

நவத்திருப்பதி தலங்களில் ஒன்றான இந்த வைத்தமாநிதி பெருமாள் தலத்தில் தெப்பகுளம் என்பது கிடையாது. ஆனாலும் மற்ற பெருமாள் தலங்களை போல பவுத்ர உற்சவம், வசந்த உற்சவம் போன்றவை நடைபெறும்.

ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது வைத்தமாநிதி பெருமாளை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டு மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பதிகத்தை பக்தர்கள் பாடுவார்கள். ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பவுத்ர உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவம் 7 நாட்கள் நடைபெறும். மற்ற நாட்களில் நடைபெறாத பூஜைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

மேலும் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பனை விழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் திரளான பெண்களும் வந்து ஆர்வத்துடன் கண்டு களிப்பார்கள்.

மார்கழி மாதத்தில் 22 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் கன்னிப்பெண்களும், பக்தர்களும் விரதமிருந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபடுவார்கள்.
Tags:    

Similar News