ஆன்மிகம்
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்

தொழில்வளம்-குடும்பநலன் அருளும் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்

Published On 2019-08-26 01:41 GMT   |   Update On 2019-08-26 01:41 GMT
திண்டுக்கல் வடமதுரையில் உள்ளது பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
திண்டுக்கல் நகருக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் வடமதுரை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வல்லக் கொண்டமநாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் திருப்பணி நடைபெற்றதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த கோவிலில் விலை உயர்ந்த நகைகள் ஏராளமாக இருந்ததாம். அதை அறிந்த திருடர்கள் அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது திப்பு சுல்தான், நகைகளை மீட்டுத் தந்ததாக செவிவழி செய்தி உலவுகிறது.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோவிலில் 15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர் உள்ளது. இது கோவிலுக்கு அரணாக இருக்கிறது. இங்கு சவுந்தரராஜ பெருமாளுக்கும் சவுந்தரவள்ளி தாயாருக்கும் தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும், கருடாழ்வார், விஷ்ணு, துர்க்கை, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆண்டாளுக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

மேலும் வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலின் முன்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும், தீபக் கம்பமும் அமைந்துள்ளது. இது வைணவத்தின் தென்கலைக் கோவிலாகும். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பால் கேணி ஒன்று அமைந்துள்ளது. இது 10 அடி நீளமும், 10 அடி அகலமும், 10 அடி ஆழமும் உடைய இப்பால் கேணியில் வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் வற்றாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒவ்வொரு ஆடி மாதமும் பிரமோற்சவத் திருவிழா நடைபெறுகிறது. 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் சாமி புறப்பாடு நடைபெறும். இதில் அனுமார், சிம்மம், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சவுந்தரராஜபெருமாள் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மேலும் திருவிழாவின் 7-ம் நாளில் திருக்கல்யாணமும், ஆடிப் பவுர்ணமி நாளில் திருத் தேரோட்ட உற்சவமும் நடை பெறுகிறது. குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்துப் பல்லக்கில் பெருமாள் உற்சவம் வரும் நாட்களில் சுற்று வட்டார கிராமத்தினர் திரளாக வந்து பெருமாளை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.

அப்போது 8 நாட்கள் நடைபெறும் மாட்டுத்தாவணி நிகழ்ச்சியும் உண்டு. அதில் பல்லாயிரக்கணக்கில் கால்நடைகள் கூடி நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை பார்க்க பலரும் கூடுவார்கள். இந்த வந்து சவுந்தரராஜ பெருமாளை தரிசித்தால் தொழில்வளம் பெறும். அதேபோல் குடும்பம் செழித்தோங்கும், திருமண யோகம் கூடி வரும், நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News