ஆன்மிகம்
அருகன் குளம் எட்டெழுத்து பெருமாள்

குழந்தை வரம் அருளும் அருகன் குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில்

Published On 2019-08-21 01:49 GMT   |   Update On 2019-08-21 01:49 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில் தர்மபதி என்றழைக்கப்படும் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில் தர்மபதி என்றழைக்கப்படும் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தோன்ற காரணமாக இருந்தவர் சித்தர் பெருமகனார் மாயாண்டி சித்தர். இவர் 1891-ம் ஆண்டு ஆனி மாதம் 18- ந்தேதி அருகன் குளத்தில் பிறந்தார். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக வளர்ந்தார். அதன் தாக்கமாக வல்லநாட்டு மலைக்கு சென்று தியானம் செய்தார். அதன் பின்னர் நீண்டகாலமாக வீடு திரும்பவில்லை.

தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருடைய கனவில் ராமர் தோன்றினார். அவர், ‘தான் ராம அவதாரத்தின்போது ஜடாயுக்கு தாமிரபரணி கரையில் திதி செய்த பின் வந்து அமர்ந்து ஓய்வு எடுத்த இடம் அருகன் குளத்தில் உள்ளது. அதில் நான் எட்டெழுத்து பெருமாளாக இருந்து அருள் வழங்க உள்ளேன். எனக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி வணங்கு’ என்றார். அதன்படி மாயாண்டி சித்தர் அருகன்குளம் வந்தார். அங்கு பெருமாளுக்கு கோவில் கட்டினார். ஓம் நாமோ நாராயணா என்ற 8 எழுத்து மந்திரத்தினை உச்சரிப்பதால் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் என பெருமாளுக்கு பெயர் சூட்டினார். இங்கு எட்டெழுத்து பெருமாள் ஸ்ரீராமர் மகா விஷ்ணுவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

இந்த கோவிலில் கோசோலையும் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அன்பு, ஆர்வம், இரக்கம், கனிவு, கருணை போன்ற அணிகலன்கள் நிறைந்த கண்களைக் கொண்ட கண்ணனாக, மகாதேவராகிய சிவபெருமானுடனும், கோமாதாவாகிய பசுவோடும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழலுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீமகாதேவ கோபாலகிருஷ்ணராக அருள்பாலிக்கிறார்.

உலகெங்கும் இருக்கும் ஆலயங்களில் கோசாலை உண்டு. ஆனால் கோசாலையில் ஆலயம் என்பது இங்கு மட்டுமே அமைந்துள்ளது. கோகுலத்தில் பசுக்களோடு கொஞ்சி விளையாடிய பாலகிருஷ்ணன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். அதன்படி இந்த கோசாலையில் மகாதேவ கோபாலகிருஷ்ணன் இரு பக்கமும் பசுக்கள் சூழ, கோ-கால-கிருஷ்ணராக வீற்றிருக்கின்றார். ஒவ்வொரு மனிதனுக்கும் கோமாதா என்று அழைக்கப்படும் பசு ஏழாவது தாயாக விளங்குகின்றாள் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகின்றது. பசுக்கள் உலகின் அன்னை. இவை மங்களமானவை, புண்ணிய மயமானவை, அவை எல்லா விதமான புருஷார்த்தங்களையும், அறம், பொருள், இன்பம், வீடு போன்றவைகளை கொடுக்க வல்லவை.

பசுவைத் தரிசித்தல், பூஜை செய்தல், வணங்குதல் வலம் வருதல், தீவனம் புல் கொடுத்தல் முதலிய சேவைகளை செய்பவர்கள் உயர்ந்த சித்திகளை அடைகிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் சரீரத்தில் தங்கியுள்ளனர். ஸ்ரீமகாலட்சுமி கோவின் சரீரத்தில் இடம் வேண்டி வாசம் செய்கிறார். ரகு வம்சத்தில் திலீபச்சக்கரவர்த்தி பசுக்களைப் பராமரித்தும், பூஜித்தும் வந்ததால் தான் ஸ்ரீராமபிரான் அங்கு அவதாரம் செய்தார் என்பதன் மூலம் பசுவின் சிறப்புகளை புரிந்து கொள்ளலாம்.

இங்கு பசுக்களைப் பராமரிப்பவர்கள் மட்டுமின்றி கோபூஜையில் கலந்து கொள்பவர்கள் ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குலவிருத்தி என அனைத்தும் பெற்று உன்னதமான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதீகம். எனவே இக்கோவிலில் நடக்கும் கோசாலை பூஜையில் இந்தியா முழுவதும் இருந்து வந்து பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தகோவிலில் அன்னதர்மம், திருமணி வெண்முத்திரை ஆகிய இரண்டு சிறப்புகள் உள்ளது. திருமணி வெண்முத்திரை என்பது மகாலட்சுமியின் பேரருளால் நிறைந்த வெண்முத்திரை என்ற திருமணி.

இந்த முத்திரை பக்தர்கள் நெற்றியில் இடப்படும். இதை பெறுபவர்கள் அனைத்து நன்மையையும் பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருப்பூட்டு யாகம் மார்கழி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. வருடந்தோறும் விநாயக சதுர்த்தி அன்று குழந்தை செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது. அதில் பங்கேற்பவர்கள் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர்கள் தேர்வில் சிறப்பாக வெற்றிபெற வித்யா லட்சுமி வேள்வியும் நடைபெறுகிறது. இக்கோவிலில் துலாபாரம் மூலம் தங்களது பாரங்களை இறக்கி வைக்கவும் முடியும். ஆண்டு தோறும் திருவிழா காணும் கோவில் இது.

இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் இங்கு கிருஷ்ண கலய பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். இந்த கலயத்தினை பெற்று கொள்ளும் பக்தர்கள் அதில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை போட்டு தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்துக்கொள்வார்கள். அவர்கள் எந்த கோரிக்கையை முன்வைத்து கலய பிரசாதம் பெறுகிறார்களோ அந்த கோரிக்கை விஷ்ணுவால் உடனே கேட்கப்படும் என்பது ஐதீகம்.

ஆதலால் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு வந்து கலய பிரசாதம் பெற்று செல்கிறார்கள். அத்துடன் செப்டம்பர் 1-ந்தேதி உறியடி திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த வேளையில் இங்கு வந்து மகாகிருஷ்ணரை வேண்டி நிற்போருக்கும் கேட்கும் வரம் கிடைக்கிறது.

கோவில் நடை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். இந்த கோவில் நெல்லை சந்திப்பு ரெயில் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வந்து செல்ல மினிபஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

முத்தாலங்குறிச்சி காமராசு
Tags:    

Similar News